முல்லைத்தீவு நாயாறு பகுதியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் கடும் விமானத் தாக்குதல்கள்நடைபெற்றுள்ளன.
நாயாறு வாவியிலிருந்து வடக்கே சுமார் ஏழு கிலோ மீற்றர் தூரத்திலேயே நேற்று முற்பகல் 11.15 மணியளவில் இந்த விமானத் தாக்குதல் இடம் பெற்றதாக விமானப் படையினர் தெரிவிக்கின்றனர்.
நாயாறு கடற்பரப்பில் நேற்று அதிகாலை கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகொன்று கடற்கரும்புலிகளால் தாக்கியழிக்கப்பட்ட நிலையிலேயே இந்த விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
நேற்றுக்காலை முதல் இந்தப் பகுதியில், புலிகளின் அதிகரித்த நடமாட்டம் அவதானிக்கப்பட்ட நிலையிலேயே முன் கூட்டியே அடையாளம் காணப்பட்ட கடற்புலிகளின் தளம் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விமானப்படையினர் தெரிவித்தனர்.
இந்த விமானத் தாக்குதலில் கடற்புலிகளுக்கு பலத்த சேதமேற்படுத்தப்பட்டுள்ளதாக விமானிகள் தெரிவித்ததாகவும் விமானப்படையினர் கூறியுள்ளனர்.