Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
முல்லைத்தீவுக் கடலில் தற்கொலைத் தாக்குதல்
[23 - March - 2008] [Font Size - A - A - A]
* 10 கடற்படையினரைக் காணவில்லை; 5 பேர் மீட்பு

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தாக்குதலில் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகொன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் பத்து கடற்படையினர் காணாமல்போயுள்ள அதேநேரம், டோரா பீரங்கிப் படகின் கட்டளை அதிகாரியும் ஐந்து கடற்படையினரும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடற் கரும்புலிகள் நடத்திய தற்கொலைப் படகுத் தாக்குதலிலேயே இந்த டோராப் படகு அழிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்த அதேநேரம், கடல் கண்ணிவெடியில் சிக்கி அல்லது நீருக்கடியிலான தாக்குதல் மூலம் இந்த டோரா மூழ்கடிக்கப்பட்டிருக்கலாமென கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை 2.10 மணியளவிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து கடற்படையினர் கூறுகையில்,

நேற்று அதிகாலை 2.10 மணியளவில் வட கிழக்கு கடற்பரப்பில் இரு டோரா பீரங்கிப் படகுகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஒரு டோரா படகு (க438) திடீரென வெடித்துச் சிதறி சற்றுநேரத்தில் கடலில் மூழ்கியுள்ளது.

இந்தப்படகில் அதன் கட்டளை அதிகாரி உட்பட 16 கடற்படையினர் இருந்துள்ளனர். இதில் கட்டளை அதிகாரி உட்பட ஆறு படையினர் பின்னர் நடைபெற்ற தேடுதலில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஏனைய பத்து கடற்படையினரும் காணாமல்போயுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட படையினரில் ஒருவர் வழங்கிய தகவலின்படி, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த டோரா பீரங்கிப் படகின் முன்புறத்தின் அடியில் திடீரென பாரிய குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டது. இதையடுத்து, படகு வெடித்துச் சிதறி கடலில் மூழ்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து இந்த `டோரா' படகுடன் அந்தப்பகுதியில் சென்றுகொண்டிருந்த மற்றொரு `டோரா' படகிலிருந்து திருகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள கிழக்கு பிராந்திய கடற்படைத் தலைமையகத்திற்கு அறிவிக்கப்படவே அவர்கள் நாயாறு கடற்பரப்புக்கு மேலதிக டோரா படகுகளை அனுப்பியுள்ளனர்.

அந்தப் படகுகள் நடத்திய தேடுதலில் மூழ்கடிக்கப்பட்ட பீரங்கிப் படகின் கட்டளை அதிகாரி உட்பட ஆறு கடற்படையினர் கண்டுபிடிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.

இந்தப் பகுதியில் மோதல்கள் எதுவும் நடைபெறவில்லையெனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், இந்தத் தாக்குதல் பற்றி விடுதலைப் புலிகள் கூறுகையில்,

நாயாறு கடற்பரப்பில் கடற்படையின் டோரா பீரங்கிப்படகொன்று நேற்று அதிகாலை நடைபெற்ற கடும் கடற்சமரில் தாக்கி அழிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மூன்று கடற்கரும்புலிகளும் உயிரிழந்துள்ளனர்.

அதிகாலை 2 மணியளவில் ஆரம்பமான இந்தக் கடற்சமர் 2.45 மணி வரை நீடித்துள்ளது. 2.10 மணியளவிலேயே இந்த டோரா படகு மூழ்கடிக்கப்பட்டது. இதில் அந்தப் படகிலிருந்த 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

இந்தக் கடற் சமரில் கடற் கரும்புலிகளான லெப்.கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சன் மற்றும் மேஜர் கனிநிலா ஆகிய போராளிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com