"ஆசிய உதைபந்தாட்ட வாரியத்தின் தலைவர் கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் ஸி-பிரிவு ஆட்டங்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிகளில்தான் கொழும்பில் நடைபெறும். இப்போட்டி இம்மாதம் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறும் என்று வெளிவந்த செய்திகள் தவறானது."
இவ்வாறு இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரும் ரட்ணம் கழகத்தின் தலைவருமான ஹேர்லி சில்வேரா தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்;
மேற்படி கிண்ணப் போட்டி 11 ஆசிய பிராந்திய நாடுகளின் சாம்பியன் கழகங்களிடையே நடைபெறவுள்ளது. இந்த 11 அணிகளும் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏ- பிரிவு ஆட்டங்கள் நேபாளத்திலும் பி- பிரிவு ஆட்டங்கள் தாய்லாந்திலும் நடைபெறும். ஸி- பிரிவு ஆட்டங்கள்தான் கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறும். இப்போட்டியில் துர்க்ஸ்மெனிஸ்தான், பூட்டான், மியன்மார், இலங்கை ஆகிய நாடுகளின் சாம்பியன் கழகங்கள் பங்குபற்றுகின்றன.
இலங்கையின் சார்பில் ரட்ணம் கழகமே இப்போட்டியில் பங்குபற்றுகின்றது. கடந்த இரு வருடங்களாக இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் கழகங்களிடையே நடத்திய கிற்பிறிமியர் லீக் சாம்பியன் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் ரட்ணம் கழகமே தொடர்ந்து சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியதுடன் எப்.ஏ. கிண்ணப் போட்டி உட்பட பல போட்டிகளிலும் சாம்பியன் கிண்ணங்களைக் கைப்பற்றியுள்ளது.
அடுத்த மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவிருக்கும் (4 மணிக்கு) 1 ஆவது போட்டியில் துர்க்மெனிஸ்தான் அணியை எதிர்த்து மியன்மார் அணி போட்டியிடும் 2 ஆவது போட்டியில் ரட்ணம் கழகத்தை எதிர்த்து பூட்டான் அணி போட்டியிடும்.
25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் 1 ஆவது போட்டியில் பூட்டான் அணியை எதிர்த்து துர்க்மெனிஸ்தான் அணி போட்டியிடும். 2 ஆவது போட்டியில் மியன்மார் அணியை எதிர்த்து ரட்ணம் கழக போட்டியிடும்.
27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் 1 ஆவது போட்டியில் பூட்டான் அணியை எதிர்த்து மியன்மார் அணி போட்டியிடும். 2 ஆவது போட்டியில் ரட்ணம் கழகத்தை எதிர்த்து துர்க்மெனிஸ்தான் அணி போட்டியிடும் என்று ஹேர்லி சில்வேரா தெரிவித்தார்.