|
நாட்டிலே கருத்துச் சுதந்திரம் நிறையவே இருக்கிறது என்று சனாதிபதி கூறியிருக்கிறார். சில பொல்லாத தரவழிகள் தவறாக நடந்து கொள்ளுவது பற்றி அரசாங்கத்தைப் பிழை சொல்ல இயலாது என்றுங்கூறியிருக்கிறார். இன்னொரு விதமாகச் சொன்னால், இங்கே கருத்துச் சுதந்திரம் இருக்கிறது; ஆனால், அதை எங்கே எப்படி வெளியிடுவது என்பதிலே தான் சிக்கல் உள்ளது. சில இடங்களில் இருந்து வெளியாகிற செய்திகள் சிலருக்குச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. அவர்கள் தங்களுடைய மாற்றுக் கருத்துக்களை வேறு வழிகளில் தெரிவிக்கிறார்கள். அதற்கு அவர்கள் அச்சியந்திரத்தையோ ஒலி, ஒளிபரப்பு வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்களுடைய சொற்கள் கூடிவர அலகுகள் முதலாகப் பொல்லுத்தடிகள் வரையும் அதற்கப்பால் துப்பாக்கி ரவைகளாகவோ அவற்றிலும் பெரிய குண்டுகளாகவோ அமையலாம். துரதிர்ஷடவசமாக அவர்களுடைய மொழி விளங்காதவர்களிடமே அவர்களது கருத்துக்கள் கூறப்படுகின்றன. அது விளங்குவதற்குள் ஒருவருடைய காலம் முடிந்து விடலாம்.
இந்த விதமான கருத்துப் பரிமாறல் இந்த நாட்டில் அண்மைக் காலங்களிற் கொஞ்சம் அதிகளவிலேயே நடக்கிறது. இது ஊடகத்துறைக்குரிய ஒரு சிறப்பம்சமல்ல. நாட்டின் பல்வேறு துறைகளில் அனுபவிக்கப்பட்டதை இன்று ஊடகத்துறை அனுபவிக்கிறது. நாளை இது வேறு துறைகளுக்கும் பரப்பப்படலாம். இன்றைய ஆட்சியின் கீழ்கருத்துச் சுதந்திர மறுப்பும் மனித உரிமைகளின் மீறல்களும் அதற்கு முந்திய பல ஆண்டுகளினதை விட அதிகம் எனலாம். ஆனால், இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஆட்சிக் காலத்திற்குரியவையல்ல. இவற்றின் தொடக்கங்கள் 1977க்குச் சிறிது பிற்பட்டவை எனலாம். ஆயினும் வன்முறை அரசியல் அதினும் பழையது.
தேர்தல் வன்முறை என்பது 1960 வரை ஒவ்வொரு தொகுதிக்கும் உட்பட்ட சில்லரைச் சம்பவங்களாகவும் ஆக மிஞ்சிக் கூட்டங்களிற் கல்லெறிவது போன்ற சேட்டைகளாகவுமே இருந்தன எனலாம். 1965ம் ஆண்டுத் தேர்தல் முடிவுகளின் பின்பு முன்னைய காலங்களை விட கூடிய அளவில் மோதல்கள் நடந்தன. மோதல் என்றால் வென்ற கட்சியினர் தோற்ற கட்சிக்காகத் தீவிரமாக இயங்கியவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதன் விளைவுதான். நாடளாவிய முறையில் தோற்ற கட்சியை அவமதிக்கிறதற்கான வன்முறையாக அது 1970 இல் மேலும் விரிவடைந்தது. முந்திய தேர்தலின் அவமதிப்புக்குப் பழிவாங்குகிற நோக்கம் அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. எனினும், வன்முறை கட்டுக்கடங்காமல் விரியாமற் கவனித்துக் கொள்வதிற் கட்சித் தலைமைகளும் காவல் துறையும் பொறுப்புடன் நடந்து கொண்டன.
தேர்தலுக்கு வெளியே அரசியல் வன்முறை இருந்தது. 1954 ஹர்த்தாலின்போது பொலிஸ் துப்பாக்கிச் சூடு அரசு. என்றால் என்ன என்று `சுதந்திரத்திற்குப்' பின்பான இலங்கைக்குத் தெளிவாக எடுத்துரைத்தது. எனினும் பொலிஸ் என்பது, குறிப்பிட்ட அரசியற் கட்சி சார்ந்ததாக இல்லாமல், அரசாங்கத்தின் சார்பில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுகிற ஒரு கருவியாகவும் சமூக அமைப்பை மாற்றுவதற்கான எழுச்சிகளைத் தடுப்பதற்கான ஒரு கருவியாகவுமே செயற்பட்டது. பொலிஸ் போதாமற்போகிற போது, அவசர காலச் சட்டத்தின் கீழ் இராணுவம் அழைக்கப்பட்டிருக்கிறது. 1958 ஆம் ஆண்டின் பேரினவாத வன்முறைக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி பொறுப்பு என்று சொல்ல இயலாவிடினும் 1915 இல் முஸ்லிம்கட்கெதிரான பேரினவாத வன்முறைக்குப் பின்பு நாட்டில் நடந்த திட்டமிட்ட முறையிலான இன ஒடுக்கல் வன்முறை நிகழ்வு இதுவே. இதன் பின்னரே இலங்கையின் முதலாவது அரசியற் படுகொலை பண்டாரநாயக்காவைப் பலிகொண்டது. இந்த அனுபவத்தின் பின்னர் இலங்கையில் பேரினவாத வன்முறையைத் தவிர்ப்பதில் அரசாங்கங்கள் சற்றுக் கவனமாகவே நடந்து கொண்டன. சிறிமா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலங்களில் தமிழருக்கெதிரான நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்ட போதும், இனமோதல்கள் வெடித்தெழாமல் அரசாங்கம் எச்சரிக்கையுடனேயே நடந்துகொண்டது. 1961 சத்தியாக்கிரகம் போராட்டமாகத் தொடராமல் அவசரகாலச் சட்டப் பிரகடனத்துடனேயே அடங்கிப் போயிற்று.
அரசியல் என்று அழைக்கப்படாத சமூக வன்முறை, சமூகங் கண்டுங்காணாமல் நடந்து வந்திருக்கிறது. அதைத் தடுப்பதில் எந்த அரசும் அக்கறை காட்டவில்லை. சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை வற்புறுத்திய தருணத்திலும் அவர்கள் மிரட்டலுக்கும் வன்முறைக்கும் உள்ளாகியுள்ளனர். அவர்கள் ஸ்தாபன ரீதியாக நாற்பத்திரண்டு ஆண்டுகள் முன்பு அணிதிரண்டு உயர் சாதியினரின் முற்போக்கான நல்ல மனமுடையவர்களுடன் இணைந்து அமைதியாகப் போராடத் தொடங்கியபோது, அதற்கெதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அடக்குமுறைகளுக்கு உடந்தையாக பொலிஸ் கலந்து கொண்டது. எனினும் வன்முறை என்று கண்டிக்கப்பட்டவை ஒடுக்குமுறைகட்கெதிரான பதில் தாக்குதல்களே!
1971 ஏப்ரல் வன்முறை ஜே.வி.பி.யின் மூர்க்கத்தனமான அரசியலின் விளைவு என்றாலும், அரசு அதை அடக்க எடுத்த கடும் நடவடிக்கை முக்கியமாகக் கிளர்ச்சி பெரும்பாலும் அடக்கப்பட்ட பின்பான ஆயுதப்படைகளது செயல்கள், மிகையானவை. இன்று வரை அச்சம்பவத்தில் உயிரிழப்புக்கள் பற்றிய மதிப்பீடுகளில் உடன்பாடில்லை. அரசியல் நோக்கங்களே வழங்கப்படுகிற இலக்கங்களை முடிவு செய்கின்றன.
தரப்படுத்தல், 1972 அரசியல் யாப்பு என்பனவற்றுடன் தொடங்கிய கிளர்ச்சிச் சூழல் வடக்கில் பொலிஸ் வன் முறையால் மேலும் மோசமாகியது. 1974 இல் தமிழ்ழராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதத்தில் பொலிஸ் நடத்தையின் பங்கு முதன்மையானது எனினும் ஒரு மொழி ஆராய்ச்சி மாநாட்டைக் குறுகிய அரசியல் இலாப நோக்கங்கட்காகப் பயன்படுத்திய தமிழ்த் தலைமைகளின் நடத்தையும் வலிந்து உருவாக்கப்பட்ட பிரச்சினைகளும் பற்றி நாம் அசட்டையாக இருக்க இயலாது.
1974 க்குப் பின்பு, பலவாறான சிறு அளவிலான இனமோதல்கள் நடைபெற்றன. இவை நாடளாவிய அல்லது பிரதேச அளவிலான வன்முறையாக வளராமல் அரசாங்கம் கவனித்துக் கொண்ட போதும், அவற்றின் அடிப்படையான அரசியற் பிரச்சினைகள் பற்றி கவனங் காட்டப்படவில்லை. இவை யாவும் யூ.என்.பி. 1977 இல் பெற்ற வரலாறு காணாத வெற்றிக்கு உதவின.
1977 தேர்தல் வெற்றிக்குப் பின்னர், முதலில் பல ஷ்ரீ.ல.சு.க. பிரமுகர்களும் ஆதரவாளர்களும் திட்டமிட்ட தாக்குதல்கட்கு ஆளாயினர். ஒரு மாதத்தின் பின்னர் தமிழர் விரோத வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனஞ் செய்ய மறுத்து வன்முறையை வளரவிட்ட அரசாங்கம், 1983 இல் இன்னொரு வன்முறை ஏற்பட்டுப் பின்பு பிரச்சினை போராடும் வரை தேசிய இனப்பிரச்சினையை மோசமாக விட்டது. பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான அரசாங்கத் தாக்குதல்கள் முன்னர் அவசரகாலச் சட்டத்தின் கீழேதேய நடந்தன. 1977 க்குப் பிறகு அவசரகாலச் சட்டத்தின் உதவி இல்லாமலே பத்திரிகைகளையும் பத்திரிகையாளர்களையும் பணியவைக்கும் முறைகள் விருத்தி பெற்றமை 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு இலங்கையின் பாராளுமன்றச் சனநாயகத்தை முன்னைய பம்மாத்து எதுவுமற்ற ஒரு கேலிக்கூத்தாக்கிவிட்டது.
இந்த மாற்றத்தின் முக்கியமான விளைவுகளில் ஒன்று சமூக வன் முறையைக் கேள்விக்குட்படுத்துவதில் ஊடகவியலாளரிடையிலும் ஆய்வாளரிடையிலும் உருவாக்கப்பட்ட அச்சமும் தயக்கமும் எனலாம். 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியும் 1958 ஆம் ஆண்டின் பேரினவாத வன்முறையும் ஆவணப்படுத்தப்பட்ட அளவுக்கு அவற்றைவிடப் பாரிய சமூக, அரசியல் தாக்கங்களை ஏற்படுத்திய 1978க்குப் பின்பான நிகழ்வுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டதாகக் கூற இயலாது.
மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆவணப்படுத்தல்களும் தமக்குரிய பக்கச் சார்பான தன்மைகளால் வழிநடத்தப்பட்டே வந்துள்ளமை இன்று அரசாங்கமோ பிரதான எதிர்க்கட்சிகள் எதுவுமோ ஆயுதக் குழுக்களோ அல்லது ஆயுதக் குழுக்களையும் பாதாள உலகக் குழுக்களையும் பயன்படுத்திக் காரியங்களை நடத்துகிற அரசியல் நிறுவனங்களோ தங்கள் செயல்களை விளக்க வேண்டிய கடப்பாடு அற்றவையாகி விட்டன. இவற்றுக்குப் பின்னாலுள்ள வர்க்க நடப்புகளைப் பாதிக்கிற விடயங்கள் மட்டுமே பிரச்சினைக்குரியன ஆகின்றன. கருத்துச் சுதந்திரம் என்ற பேரிலன்றி அரசாங்கத்திற்குக் கீழ்படிவு என்ற அடிப்படையில் இயங்கி வந்த ரூபவாஹினி ஊழியர்களது பிரச்சினை மேலும் மோசமாக்கப்பட்டுள்ளதாலேயே இன்று சுதந்திரம் பற்றிய பிரச்சினை பெரிதாகத் தெரிகிறது. ஆனால், வடக்குக் கிழக்கில் இது முப்பதாண்டுகளாகப் பழக்கப்பட்டுப்போன விடயம்.
ஊடகச் சுதந்திரம் பிரச்சினை, மனித உரிமை மீறல்கள் எல்லாம் நாட்டின் அடிப்படையான பிரச்சினை ஒன்றின் பகுதிகளே. அவற்றை விலக்கி இவற்றைப் பற்றிப் பேச இயலாது. ஆனாற் பேசப்படுகிறது. |