|
தாரகா
இலங்கையில் ஒரு முரணற்ற சூழல் நிலவ வேண்டும் என்பதே தனது அக்கறையென இந்தியா அடிக்கடி கூறிவந்தாலும் அது தனது மேலாதிக்கக் கண்காணிப்பின் கீழேயே நிகழ வேண்டுமென்றே இந்தியா கருதுகிறது. ஆனால் நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் பெருமளவிற்கு இந்தியா தலையிடுவதற்கு வாய்ப்பற்ற சூழலே காணப்பட்டது, ஏற்கனவே கையை சுட்டுக்கொண்ட அனுபவத்தைக் கொண்ட இந்தியாவால் அதிகம் அந்தச் சூழலில் தலையீடு செய்ய முடியவில்லை. இன்று மீண்டும் இலங்கை அரசியல், யுத்தத்திற்கு மாறியிருக்கும் சூழலில் முரண் தணிப்பு என்ற பேரில் மீண்டும் தனது வலுவான தலையீடுகளை செய்வதற்கு இந்தியாவிற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பிற்காகவே இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் மிகவும் சாதுவாக நடந்து கொண்டது.
இன்று இந்தியாவின் வலுவான தலையீடுகளின் பின்புலமாக இருப்பது இந்தியா சமீப கால நிலைமைகள் தொடர்பாக அச்சப்படுவதுதான். தற்போதைய சூழலில் இந்தியா இரண்டு விடயங்கள் குறித்து அச்சப்படுகின்றது. ஒன்று, ஸ்ரீலங்கா அரசு தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மத்தியில் தோன்றியிருக்கும் பாதகமான அபிப்பிராயங்கள், மற்றையது கள நிலைமைகள் தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் இராணுவ நிலைப்பட்ட சுய மதிப்பீடுகள். சர்வதேச அளவில் புதிய தேசங்களில் உதயம் தொடர்பான விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. கொசோவோ சுதந்திர அரசு அங்கீகாரத்தின் பின்னர் தனியரசு குறித்த விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் ஸ்ரீலங்கா அரசு நாளுக்கு நாள் சர்வதேச அளவில் மதிப்பிழந்து வருகின்றது. இந்த இரண்டு விடயமும் ஒரு நேர் கோட்டில் சந்தித்துவிடுமோ என இந்தியா பயப்படுகின்றது. அதேவேளை, கிழக்கில் கருணா விடயத்தைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா இராணுவம் பெற்ற வெற்றிகளை இந்தியா கருத்தில் கொண்டாலும் கள நிலைமைகள் தொடர்பில் ஸ்ரீலங்காப் படைத்தரப்புகளின் மத்திப்பீடுகளை பெருமளவு இந்தியா கருத்தில் கொள்ளவில்லை. கள நிலைமைகள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக இருப்பதாகவே இந்தியா அச்சப்படுகின்றது. ஏனெனில், ஸ்ரீலங்காப் படைத்தரப்பு கொள்கையாளர்கள் போன்று உணர்ச்சிவசப்பட்ட ஆய்வுகளை இந்தியப் படைத்துறை ஆய்வாளர்கள் கொண்டிருக்கவில்லை. ஒப்பந்த காலம் விடுதலைப் புலிகளின் போராற்றலை பெருமளவு பாதிக்கும் என்ற ஆய்வுகள் சில சர்வதேச அனுபவங்களின் வழியாக எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், கிழக்கிலிருந்து புலிகள் பின்வாங்கியதைத் தவிர படைக் கட்டமைப்புக்களிலோ அல்லது புலனாய்வுத் தந்திரோபாயங்களிலோ புலிகள் சிறிதளவு தளர்வுகளைக்கூட காட்டவில்லை என்பதை இந்தியா மிகவும் சரியாகவே மதிப்பிட்டிருக்கும். ஏனென்றால் புரிந்துணர்வு ஒப்பந்தம் சிக்கலுக்குள்ளாகிய பின்னர்தான் புலிகளின் விமானப்படை களத்தில் இறங்கியது. வெற்றி கரமாக கொழும்பிலேயே தாக்குதல்களை மேற்கொண்டது. இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அனுராதபுர விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. இவையெல்லாம் புலிகளின் இராணுவத் திட்டமிடல் ஆற்றலையும், புலனாய்வுப் பரிவர்த்தனை ஆற்றலையும் துலாம்பரமாக்கியது.
இவ்வாறான பின்னணியில் தான் இந்தியாவின் தலையீட்டினை நாம் நோக்க வேண்டியிருக்கிறது. விடுதலைப் புலிகளின் தற்போதைய தாக்குதல் உத்திகள் எதிரியை களைப்படையச் செய்தல் என்ற அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. பலமான படையணிகளையோ பாரியளவிலான போர் முன்னெடுப்புகளையோ விடுதலைப் புலிகள் களத்தில் பிரயோகிக்காத சூழலில் புலிகளின் தாக்குதல் திறனை வெறுமனே வெற்றிக் கீதங்களால் ஸ்ரீலங்கா அரசு மறைத்து வருவதையிட்டு இந்தியா மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்கிறது. புலிகளின் பாரியளவான நகர்வுகளை முன்னெடுத்தால் களநிலைமைகள் முற்றாகவே புலிகளுக்கு சாதகமாக மாறிவிடும் என இந்தியா கருதுகிறது, எனவே இந்த சந்தர்ப்பத்தில் கிழக்கில் ஏற்பட்டிருக்கும் புலிகளுக்குப் பாதகமான சூழல் மற்றும் அதிகம் புலிகள் வடக்கில் கவனம் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் என்பவற்றை இடைவெளியாகப் பயன்படுத்திக் கொண்டு கிழக்கில் தனக்குச் சார்பான சூழலை நீண்ட கால நோக்கில் கையாள இந்தியா தீவிரமாக முனைத்து வருவதன் வெளிப்பாடுதான் இந்தியாவின் தற்போதைய அதிகரித்த தலையீடுகளின் அரசியல். இந்தியாவின் கடந்தகால அனுபவம் இந்தியாவால் நேரடியாக விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள முடியாதளவிற்கு சில மட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் அரசியலை நன்கு அறிந்து வைத்திருக்கும் இந்தியா ஒரு கட்டத்திற்கு மேல் தான் தலையிடுவது விடுதலைப் புலிகளை மீண்டும் நேரடியாகச் சந்திக்க வேண்டிய சூழலை ஏற்படுத்திவிடும் என்பதிலும் கவனம் கொண்டிருக்கிறது. அது மீண்டும் தனது சர்வதேச செல்வாக்கிற்கு இழுக்காகிவிடும் என இந்தியா கருதுகிறது. ஆகவே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நீண்ட கால நோக்கில் தனது நலன்களை அடைந்து கொள்வதற்கான தந்திரோபாயங்களிலேயே இந்தியா கவனம் கொள்கின்றது. எனவே மீண்டும் மீண்டும் நாம் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதிலேயே நாம் கவனம் கொள்ள வேண்டும். இந்தியா தொடர்பான கதை பழைய கதைதான். ஆனால் புதிய காட்சிகள் இணையும் போது அது மீண்டும் புதிய கதை போன்ற தோற்றத்தைப் பெறுகின்றது. இப்பொழுது மீண்டும் சில புதிய காட்சிகளுடன் இணைந்திருக்கும் இந்தியா புதிய கதையாக நம்முன் வலம் வருகிறது. இன்றைய சூழலில் இது குறித்த விரிவான உரையாடல்கள் நமக்கு அவசியம். இது குறித்த உரையாடல்களை தூண்டுவதில் இக்கட்டுரை பயன்பட வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும். |