|
-விதுரன்-
முல்லைத்தீவில் கடற்புலிகள் தங்கள் தாக்குதல்களை மீண்டும் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளனர். இந்தத் தாக்குதலானது கடற்கண்ணி வெடியால் அல்லது கடலுக்கடியில் பயன்படுத்தப்படும் ஆயுதமொன்றினால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாமென கடற்படையினர் கூறுகின்றனர். ஆனால், இது கடற்கருப்புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.
கடற்கரும்புலிகளே இதனைத் தாக்கினார்களெனக் கூற கடற்படையினர் தயாராயில்லை அதனை ஒத்துக் கொள்வது, ஏனைய கடற்படையினரதும் படையினரதும் மனோநிலையைப் பாதித்து விடுமென அரசும் படைத்தரப்பும் கவலையடைந்துள்ளன. வடபகுதிக் கடற்பரப்பில் அதிவேக டோரா பீரங்கிப் படகுகளை சர்வ சாதாரணமாகத் தாக்கியழிக்கும் வல்லமையுடன் கடற்புலிகள் உள்ளார்களென்பதை அறிந்தால் தென்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து விடுவரென்பதாலேயே கடற்கண்ணிவெடியில் தவறுதலாகச் சிக்கியிருக்கலாம் அல்லது புலிகள் நீருக்கடியிலான ஆயுதமொன்றின் மூலம் தாக்கியிருக்கலாமெனக் கூற முற்படுகின்றனர்.
வன்னிப் போர் சகல முனைகளிலும் விரிவடைந்து வருவதையே இது காண்பிக்கிறது. வன்னிப் போர் முனையில் புலிகள் இதுவரை தாக்குதல் சமர் எதனையும் நடத்தவில்லை. தற்காப்புச் சமரிலேயே ஈடுபட்டுள்ளனர் . புலிகள் தாக்குதல் சமர்களை நடத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கிவிடக் கூடாதென்பதில் படையினர் மிகவும் கவனமாயுள்ளனர். `ஜெயசிக்குரு'வில் ஏற்பட்ட அனுபவம் அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. புலிகள் தாக்குதல் சமரை வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டால் அவர்கள் ஓரிரு நாட்களிலேயே, படையினர் தாக்குதலை தொடங்கிய முனைக்கு வந்து விடுவார்களென படையினர் கருதுகின்றனர்.
இதனாலேயே, வன்னியில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபடும் படையினர் மீது புலிகள் பலத்த எதிர்த் தாக்குதலை நடத்தி படையினருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தினாலும் தங்கள் படை நடவடிக்கையை இடைநிறுத்தினாலும் புலிகள் தாக்குதல் சமரை ஆரம்பிக்காதவாறு அவர்களைத் தற்காப்பு நிலையில் வைத்திருப்பதற்காக தினமும் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீதும் அதன் பின்னால், புலிகள் ஒன்று கூடும் இடங்கள் மீதும் படையினர் தொடர்ச்சியாக கடும் ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், கடும் மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக பாரிய மோதல்களெதுவுமின்றியிருக்கும் வன்னிக்களமுனை, மழை ஓய்ந்ததும் மீண்டும் கொதிநிலைக்குச் செல்லப் போகிறது. அரசியல் நோக்கங்களுக்காக யுத்தம் மூலமான வெற்றிகளைப் பெற்றுவிட அரசு முனைவதால் யுத்தமுனையில் ஏற்படும் பெரும் தோல்விகள் அரசியல் ரீதியில் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும். இதனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வெற்றிக்காக அரசு வடக்கு களமுனையில் பெரியதொரு வெற்றிக்காக காத்திருக்கிறது. |