* இந்து சமுத்திரத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் கண்காணிப்பதையும் அவை தொடர்பில் தகவல்களை இலங்கைக் கடற்படைக்கு வழங்குவதையும் அமெரிக்கா தொடர்கின்றது. என்றேனும் ஒரு நாள் தனது உதவிக்கான பலனை அமெரிக்கா இலங்கையிடம் இருந்து எதிர்பார்க்கும். அது அநேகமாக திருகோணமலைத் துறைமுகத்தில் நிரந்தரமாகத் தனது கண்காணிப்புக் கப்பல் ஒன்றை நிறுத்துவதற்கான அனுமதியாகத் தான் இருக்கும்.
அண்மை நாட்களாக இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே தனது சீனச் சார்பு நிலையை அறிவித்து வருகிறது. உலக இயங்கியல் விதிகளின் கீழ் மேற்குலகம் என்று சொல்லப்படுகின்ற முதலாளித்துவ பொருளாதார சார் நிலை நாடுகள், எதிர் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எதிரான போக்குடைய நாடுகள் என்ற இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன.
முதலாளித்துவ சார்பு நிலை நாடுகள் அமெரிக்காவின் கீழ் அதன் கொள்கைகளுக்கு ஆமாம் சாமி போடும் வகையில் அணிவகுத்திருக்க எதிர் முகாம் சீனாவைக் தலைமையாக கொண்டதாக எழுச்சிபெற்று வருகின்றது.
ஆசியாக் கண்டத்தின் பலம் மிக்க நாடாக விளங்கும் சீனா அனைத்துத் துறைகளிலும் அமெரிக்க சார்புக் கூட்டணிக்கு சவால் விடுத்து வருகின்றது. சீனாவின் எதிர்ப்பினை மீறி அமெரிக்கா ஆசியக் கண்டத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்தப் பல்வேறு பிராயச்சித்தங்களில் ஈடுபட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.
வியட்நாம், ஆப்கானிஸ்தான்,ஈராக் என அமெரிக்கா தனது படைகளை ஆசியாவில் ஆங்காங்கே நிலை கொள்ள வைத்துள்ள போதிலும், தெற்காசியாவில் அதன் நிலை கொள்ளலுக்கான வாய்ப்புகள் இன்னும் முழுமை பெறவில்லை.
தெற்காசிய நாடுகள் எல்லாம் ஏதோ ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில்,அமெரிக்கா கவனம் இலங்கையின் மீதே அதிகம். காரணம் யாரும் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். இலங்கையின் கேந்திர முக்கியத்துவம். இலங்கையில் இருந்து தெற்காசியாவை மிக இலகுவாக அமெரிக்கா புலனாயலாம்.
ஏற்கனவே புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் குரல் வானொலி நிலையத்தின் பிரதான செயல்பாடுகள் குறித்து இந்தியா உட்பட ஆசிய நாடுகள் கவலை அடைந்துள்ள நிலையில்,இலங்கையில் நேரடியாக இராணுவத் தளங்களை அமைப்பதும் போர்க் கப்பல்களை இலங்கை துறைமுகங்களில் நிறுத்துவதும் ஆசிய நாடுகளுக்குத் தலையிடியை ஏற்படுத்தும் அண்மைக்கால முதலாளித்துவ அல்லது அமெரிக்க சார்பு நிலையிலான இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் இலங்கையில் தளம் அமைக்கும் முயற்சிகளுக்கு தடை போடாது அல்லது குறைந்த பட்ச எதிர்ப்பாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அப்படியானால் அமெரிக்காவின் இலங்கையை நோக்கிய நகர்வு ஆசிய நாடுகள் மீதான சீனாவின் ஆதிக்கக் கனவை சிதறடித்து விடும் என்பது தான் தற்போதைய பிரச்சினை.
அமெரிக்கா என்றல்ல அமெரிக்க சார்புடைய இந்தியா அல்லது ஜப்பான் போன்ற நாடுகளும் ஆசியக் கண்டத்தில் ஆதிக்கம் பெறுவதை சீனா விரும்பவில்லை.
இப்போது இருக்கக் கூடிய அரசியல் தட்பவெப்ப சூழ்நிலைகளின் படி கொதிநிலை கூடிய நாடாக இலங்கையே ஆசியாவில் காணப்படுகின்றது. எனவேதான் இலங்கையை மையம் கொண்டு கிழக்கு, மேற்கு புயல்கள் வீசத் தொடங்கியுள்ளன.
இந்தப் புயல்களில் எந்தப் புயல் வீரியம் மிக்கதோ அந்தப் புயலே இலங்கையைத் தாக்கும் அல்லது தாங்கும். அண்மைக்கால இலங்கை அரசாங்கத்தின் போக்குகள் சீனாவின் ஆதரவு மட்டுமே போதும் என்பதைக் எடுத்துக் காட்டுகின்றன.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன அண்மையில் வெளிப்படையாகவே மேற்குலக நாடுகள் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மிகக் கவனமாக ஆராயப்பட வேண்டியவை.
இலங்கைக்கு அதிக உதவிகளை வழங்கும் மேற்குலக நாடுகளை ஓரம் கட்டிவிட்டு படைத்துறை உதவிகள் முதல் பாதைகள் அமைப்பது வரை சீனா தனது ஆதரவுக் கரத்தால் குட்டித் தீவை கட்டிப்போட முயல்வது தெளிவாகத் தெரியும். மேற்கு நாடுகள் தாம் வழங்கும் உதவிகளுக்கு மேலாக தாங்கள் எப்படி அரசியல் நடத்த வேண்டும் எனப் பாடம் நடத்துவதற்காகவும் இது வெறுக்கத்தக்க செயல் என்றும் பாலித கோகண குற்றம் சாட்டியுள்ளார்.
அவருடைய குற்றச்சாட்டு வெளியாகி ஈரம் காயும் முன்னர் அமெரிக்கா உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான தனது வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வரும் அனைத்து விதமான மனித உரிமை மீறல்களுக்கும் இலங்கை அரசாங்கமே பொறுப்பு என்று அமெரிக்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டு வெந்த புண்ணில் வேல் பாச்சியுள்ளது.
இந்த அறிக்கைகள் இலங்கை அரசாங்கத்தை ஒன்றும் செய்யாது என்பது ஒரு புறமிருக்க,அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை அனைத்துலக அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு வலுவான சாட்சியாக மாறிவிட்டுள்ளது.இலங்கை அரசாங்கம் துணை ஆயுதக் குழுக்களுடன் மேற்கொள்ளும் சட்டவிரோத செயல்கள்,ஆட்கடத்தல்,அரசியல் நோக்கம் கொண்ட படுகொலைகள் என அனைத்தையும் அமெரிக்கா ஆவணப்படுத்தியுள்ளது.
அரச ஆதரவுத் துணை ஆயுதக் குழுக்கள் முதல் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் குழுக்கள்,அமைச்சர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அமெரிக்கா தனது அறிக்கையில் குற்றவாளிகளாகச் சித்திரித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அறிக்கையிடல்களின் அடிப்படையில் அமெரிக்க வெளி விவகார அமைச்சு தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த அறிக்கையின் இயக்குநர் அமெரிக்காவின் இரும்புப் பெண்மணி என தற்போது வர்ணிக்கப்படும் கொண்டலீஸாரைஸ் அம்மையார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றுமொரு விடயம் இலங்கை அரசாங்கம் தனது ஆதர்சமாகக் கருதும் சீனா குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தான் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் தயாராகி வரும் சீனாவில் இடம்பெற்று வரும் மிக மோசமான மனித உரிமைகள் மீறல்களே அமெரிக்காவின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் பிரதான பகுதி.
சீனாவையும் இலங்கையையும் மட்டுமன்றி ஏனைய நாடுகளையும் தனது அறிக்கையில் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள போதும், ஆய்வாளர்கள் இந்த இரு நாடுகள் மீதான அமெரிக்கக் கோபத்தின் பின்னணி குறித்தே அதிகம் அக்கறை காட்டி வருகின்றனர்.
இந்த அறிக்கை வெளியானதால் ஆடிப்போன இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சர் மூலமாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவரை சந்தித்து இந்த அறிக்கை தொடர்பில் விளக்கம் கோரியது.
எனினும் தமது அறிக்கையில் எந்தத் தவறும் இல்லை என்று அமெரிக்கப் பாணியில் தெரிவித்த ரோபேர்ட் ஓ பிளேக் தமது நிலைப்பாடு மாற வேண்டுமானால் இலங்கை அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நிச்சயமாக ரோபேர்ட் ஓ பிளேக் குறிப்பிட்ட மாற்றம் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும் என்பதாக நீங்கள் கருதினால் அது தவறு. அமெரிக்கத் தூதுவர் கூறிய நிலைப்பாட்டு மாற்றம் என்பது சீன சார்பு நிலையைக் கைவிடுதல் என்பதாகவே பொருள் கொள்ளப்பட வேண்டும். இலங்கையில் இந்தியத் தலையீடு குறித்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இலங்கை அரச படைகளுக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்குவதை வரவேற்கும் அரசின் பங்காளிகளான ஜே.வி.பி.யினர் இலங்கையில் அரசியல் ரீதியாகத் தலையீடுகளை இந்தியா மேற்கொள்வதை கடுமையாக எதிர்த்துள்ளது.
தமிழ் மக்கள் விரும்பும் எந்த ஒரு தீர்வையும் இந்தியா பெற்றுத் தராது என்பது வெளிப்படையாக ஜே.வி.பி.யிற்குத் தெரிந்திருந்தும் கூட இந்தியத் தலையீட்டை அது எதிர்ப்பதற்குக் காரணம் அது சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கமான பிணைப்புத் தான்.
சீனாவின் குரலாகவே ஜே.வி.பி. இப்போது இலங்கை அரசியலில் ஒலித்து வருகின்றது.இதனால் கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளமை வேறு விடயம். இலங்கைக்கு அதிகளவான உதவிகளை வழங்கி வந்த ஜப்பானை ஓரம் கட்டி விட்டு சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி, மின்சார உற்பத்தித் திட்டங்கள் மற்றும் மகிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி என சீனாவின் உதவிக் கரங்கள் அனைத்தும் இலங்கையின் அனைத்துத் துறைகளையும் அரவணைத்து நிற்கின்றன.
அபிவிருத்திக்கான உதவிகளை சீனா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதால், ஆயுத தளபாட அழிவுகள் குறித்தோ யுத்தத்தின் செலவுகள் குறித்தோ இலங்கை அரசாங்கம் கவலைப்படாது. அது மிக் 29 ரக தாக்குதல் வானூர்திகளையும் இன்னும் இன்னும் பெரிய ஆயுதங்களையும் வாங்கிக் குவிக்கும்.
வெற்றி பெற முடியாதெனத் தெரிந்தும் பல முனைகளில் தாக்குதல்களை ஆரம்பிக்கும். தென்னிலங்கையில் போரில் தாங்கள் வெற்றி பெறுவதாகவும் விடுதலைப்புலிகள் தோற்று வருவதாகவும் கதைகள் கூறி சிங்கள மக்களை நம்பவைக்கும் அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் அல்லது சிங்கள மக்கள் தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்பதைப் புரியும் வரைக்கும் இலங்கையின் போர்க் குரல் ஒலிக்கும்.ஆனால், வன்னியில் மட்டுமன்றி மகிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊரிலேயே கள முனைகளைத் திறந்து வைத்துள்ள விடுதலைப்புலிகளின் மௌனம் கலையும் வரை தான் இந்த வெற்றுக் கூச்சல் எல்லாம் எடுபடும்.
இலங்கை அரசு இது வரை சந்தித்திராத அழிவினைத் தேடிக் கொண்டிருக்கின்றது. ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்கான உரிமைகளை மறுத்து தமிழர் தாயகத்தைக் கூறு போட்டு மகிந்த ராஜபக்ஷ சகோதரர்கள் ஆடும் நாடகத்தில் அடுத்த கட்டக் காட்சிகள் சிங்களத்திற்கு கசப்பானதாக இருக்கும்.
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை சீனா போடும் பாதைகள் அதன் நீண்டகால கனவுகளை நோக்காகக் கொண்டவை. இலங்கையில் அமைக்கப்படும் துறைமுகம் சீனாவின் நீண்ட காலக் கனவின் ஒரு முக்கிய அம்சம்.
ஹம்பாந்தோட்டையில் சீனா அமைத்து வரும் துறைமுகம் சீனாவிற்கு இந்து சமுத்திரத்தில் ஆதிக்கத்தைக் கைப்பற்ற மகிந்த ராஜபக்ஷ அமைத்துக் கொடுத்துள்ள மார்க்கம். இந்து சமுத்திரத்தில் பரந்து கிடக்கும் வளங்களை முற்றாக ஆக்கிரமித்து தனது அபரிமிதமான மனித வளத்தைப் பயன்படுத்தி முடிவுப் பொருட்களை உற்பத்தி செய்வதும் அதன் மூலம்உலக வர்த்தகத்தில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றம் பெறுவதும் தான் சீனாவின் ஒரே நோக்கம் என்கிறார்.சிங்கப்பூர் நான்ஜங் பல்கலைக்கழக அனைத்துலக விவகாரங்கள் தொடர்பான பேராசிரியர் ராஜா மோகன். சீனாவின் இந்தத் திட்டத்தை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள அமெரிக்கா, இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தினாலும் மறைமுகமாகத் தனது நடவடிக்கைகள் மூலம் இலங்கைப் படைகளுக்கு உதவுவதை நிறுத்தவில்லை.
குறிப்பாக இந்து சமுத்திரத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் கண்காணிப்பதிலும் அவை தொடர்பில் தகவல்களை இலங்கைக் கடற்படைக்கு வழங்குவதையும் அமெரிக்கா தொடர்கின்றது. என்றேனும் ஒரு நாள் தனது உதவிக்கான பலனை அமெரிக்கா இலங்கையிடம் இருந்து எதிர்பார்க்கும்.அது அநேகமாக திருகோணமலைத் துறைமுகத்தில் நிரந்தரமாகத் தனது கண்காணிப்புக் கப்பல் ஒன்று நிறுத்துவதற்கான அனுமதியாகத் தான் இருக்கும்.
நன்றி:- பதிவு