இன்று நமது சமுதாயத்தில் அழிவை ஏற்படுத்தி வரும் சம்பவங்களில் ஒன்று தற்கொலையாகும். தன்னைத் தானே அழித்துக் கொள்கின்ற இச்செயற்பாட்டிற்கு பல்வேறு வழிகள் பயன்படுத்தப்பட்டாலும் யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் முக்கியம் பெறுகின்றன.
அவையாவன - அலரி விதை சாப்பிடுதல்
கழுத்தில் சுருக்குப்போடுதல்
கிருமி நாசினி அருந்துதல்
கிணற்றில் குதித்தல்
போன்றவை இடம்பெற்றாலும் அலரி விதை சாப்பிட்டு தற்கொலை செய்பவர்களே அதிகமாகவுள்ளனர். அலரி மரத்தின் எல்லாப் பகுதிகளுமே நஞ்சுத்தன்மை கொண்டனவாகவே காணப்படுகின்றன. அலரி விதையைப் பயன்படுத்தித் தற்கொலை செய்ய முயற்சிப்போர் மட்டும் நாள் ஒன்றுக்கு யாழ்.மாவட்டத்தில் 26 பேராகவுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் 25 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகமாகவுள்ளனர்.
தற்கொலை முயற்சிக்கான காரணங்கள்
தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் இளவயதினை உடையவர்களாக உள்ளனர். குறிப்பாகக் குமர்ப்பருவத்தில் இருப்பவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றம் காரணமாக இப்பருவம் நெருக்கடிதம் கொந்தளிப்பும் நிறைந்ததாகவும் உள்ளது. இதனால் பலர் எழுச்சிக்கு ஆளாவதுடன் கோபம், வெறுப்பு, ஆவேசம் போன்ற உணர்வுகளுக்கு ஆளாவதுடன் தற்கொலையிலும் ஈடுபடுகின்றனர்.
பெற்றோரின் கண்டிப்பு, அறிவுரை என்பன தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு எரிச்சல் ஊட்டுபவையாக உள்ளது. சமூகப் பொருளாதாரத்துறையில் ஏற்படும் மாற்றங்களும் அழுத்தங்களும், தொழில் இன்மை, வறுமை, விரக்தி என்பனவும் காரணமாக அமைகின்றன.
உறவுச் சிக்கல்கள் இளைஞர்களுக்கு ஏற்படும் காதல் பிரச்சினைகள் இதில் பெற்றோர் காட்டும் கண்டிப்பு என்பன முக்கிய காரணிகளாக இருந்தாலும் வேறு சில அற்ப காரணங்களுக்காகவும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
அம்மா படம் பார்க்கப் போக அனுமதிக்கவில்லை பிறந்த நாளுக்கு உடுப்பு வாங்கித்தரவில்லை, அப்பா பேசிப்போட்டார், அண்ணா அல்லது அக்கா அல்லது தம்பியுடன் சண்டை என்றெல்லாம் அற்ப காரணங்களைக் கூறியும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
தற்கொலை எண்ணம் உள்ளவர்களை எவ்வாறு அடையாளம் காணலாம்?
வாழ்க்கை பற்றிய நம்பிக்கை அற்றவர்களாக இருப்பர்.
மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பர்.
மனம் விட்டுப் பேசத் தயங்குவார்கள்.
தனிமையை அதிகம் விரும்புவார்கள்.
மனம் சோர்வாக இருப்பர்.
சலிப்பாகப் பேசுவர்.
என்ன வாழ்க்கை
வாழ்ந்து என்ன பயன்
ஏன் வாழ்ந்து
என்னால் யாருக்குத் தான் இலாபம்
என்ற பதங்களைப் பயன்படுத்துவர்.
சாவைப்பற்றி அடிக்கடி கதைப்பர்.
தற்கொலைக்கு முயற்சித்துத் தப்பிக் கொண்டவர்கள்
தொடர்பாக மற்றையவர்கள் என்ன செய்யலாம்?
குறித்த நபரை உள வளத்துணையாளரிடம் அழைத்துச் சென்று உளவளச் சிகிச்சை வழங்கப்படவேண்டும்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பாகக் கேலி கிண்டல் சொல்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
தற்கொலை முயற்சி என்பது ஒரு வகை உளநோயே தவிர ஆரோக்கியமான மனித நடத்தையல்ல என்பதனை அறிய வைக்க வேண்டும்.
தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை நிவர்த்திக்க வேண்டும். குறித்த நபர் தொடர்பாக அவருக்கு நெருக்கமானவர்கள் அவதானமாக இருக்கவேண்டும்.
த.ஷ்ரீகமலநாதன்
உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிலுநர் - அகவொளி.