இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளைப் பொறுத்தவரை ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) விசித்திரமானதும் கேலிக்குரியதுமான அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எதிர்க் கட்சியின் பாத்திரத்தை வகிப்பதாக மக்களுக்குக் காட்டிக் கொண்டு மறுபுறத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைப் பாதுகாக்கும் கைங்கரியத்தையும் ஜே.வி.பி. செய்து வந்திருக்கிறது. முன்னென்றுமில்லாத வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு நெருக்கடியினால் திணறிக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலை பற்றி வெறுமனே உதட்டளவில் மாத்திரம் கவலையை வெளிக்காட்டுகின்ற ஜே.வி.பி.யின் தலைவர்கள் மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்கள் ஓரளவுக்கேனும் விடுபடுவதற்கு உதவக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கக்கூடிய எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுப்பதற்குத் தயாராயில்லை. தங்களைவிட தேசபக்தர்கள் வேறுயாரும் இந்நாட்டில் இல்லை என்ற தோரணையில் கூச்சல் போடுகின்ற அவர்கள் போரைத் தீவிரப்படுத்தியிருக்கும் அரசாங்கத்துக்கு இடைஞ்சலைத் தரக்கூடியதாக தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு இது தருணமல்ல என்று கூட பல சந்தர்ப்பங்களில் பேசியதைக் கேட்டிருக்கிறோம்.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஜே.வி.பி.யினர் தேவைப்படுகின்றார்களா அல்லது ஜே.வி.பி.யினருக்கு அரசாங்கம் தேவைப்படுகிறதா என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருதரப்பினருக்கும் இடையே விசித்திரமான உறவுமுறையொன்று வளர்த்தெடுக்கப்பட்டுவந்திருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முழுமூச்சுடன் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் படையினருக்கும் உந்துசக்தியாக செயற்படுவதாக சிங்கள மக்களுக்குத் தங்களைக் காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி. தலைவர்கள் இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு குறித்து வெறும் உலக ஒப்பாசாரத்துக்கு அரசாங்கத்தரப்பினர் பேசுகின்ற வேளைகளில் அவர்களை அச்சுறுத்தும் பாணியில் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்காமல் அதிகாரப்பரவலாக்கல் யோசனைகளை முன்வைத்தால் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக அரசாங்கத்தைத் தோற்கடிக்கப்போவதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான விமல் வீரவன்ச சில வாரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்ததை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று நம்புகின்றோம். இவ்வாறாக ஜே.வி.பி. தலைவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசினாலும் கூட, உண்மையான பிரச்சினைகளில் இருந்து சிங்கள மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய முறையிலேயே அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஜே.வி.பி. தலைவர்களின் இத்தகைய அணுகுமுறைகளின் பிந்திய வெளிப்பாடாக அவர்களின் அண்மைக்கால இந்திய எதிர்ப்புக் கோஷத்தைக் காண முடிகிறது. 20 வருடங்களுக்கு முன்னர் மாகாண சபைகளை ஏற்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்படுவதாகக் காண்பிக்கப்படும் முயற்சிகளின் பின்னணியில் இந்தியா செயற்படுவதாக ஜே.வி.பி. குற்றஞ்சாட்டுகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்திய விரோதப் பிரசாரங்களைத் தீவிரப்படுத்தியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. நீண்டகாலமாக அவர்கள் மறந்து போயிருந்த இந்திய விஸ்தரிப்பு வாதம் குறித்து நினைவு படுத்தியிருக்கும் அமரசிங்க இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதை இந்தியா நிறுத்தாவிட்டால் இந்தியப் பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறு மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப் போவதாகவும் எச்சரிக்கை செய்திருக்கிறார். அவரின் இந்த எச்சரிக்கை இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை நிலை கொண்டிருந்த 1980 களின் இறுதிப்பகுதியில் ஜே.வி.பி.யினர் செய்த இரண்டாவது கிளர்ச்சியின் போதான நிகழ்வுகளை எமக்கு நினைவூட்டுகிறது.
உண்மையிலேயே 13 ஆவது அரசிலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற முன்மொழிவைச் செய்வதற்கு சர்வகட்சி மாநாட்டுப் பிரதிநிதிகள் குழுவிடமிருந்து ஒரு அறிக்கையை ஜனாதிபதி ராஜபக்ஷ எதற்காக நாடினார் என்பது விளங்கிக் கொள்ள முடியாத ஒரு விடயம் அல்ல. சர்வகட்சி மாநாட்டுப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகள் மூலமாக ஏதாவது உருப்படியான அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை வகுக்க முடியுமென்று (தவறாக) நம்பிய சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளிடமிருந்து நெருக்குதல்களுக்கு உள்ளாகி வந்த ஜனாதிபதி ராஜபக்ஷ அதிலிருந்து விடுபடுவதற்கான ஒரு தந்திரோபாயமாகவே இடைக்கால அறிக்கையொன்றுக்கான தேவையை வலிந்து உருவாக்கினார். தன்னால் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாடே தன் மீது நெருக்குதலைப் பிரயோகிப்பதற்கு சர்வதேச சமூகத்தினால் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு கருவியாக மாறியதை ஜனாதிபதி உணர்ந்தார். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை முழுமையான அரசியல் தீர்வை நோக்கிய செயன்முறைகளின் ஒரு இடைக்கால ஏற்பாடாக பிரகடனம் செய்ததன் மூலமாக (சர்வகட்சி மகாநாட்டின் மூலமாக தீர்வு யோசனைகளை முன்வைக்குமாறு) இந்தியா உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து வந்த நெருக்குதல்களை ஜனாதிபதியினால் தற்போதைக்கு நிறுத்த முடிந்திருக்கிறது. அரசியல் தீர்வு யோசனைகள் விடயத்தில் வெளியுலகிடமிருந்து அரசாங்கத்துக்கு இப்போது நெருக்குதல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்த அணுகுமுறையின் பின்னணியில் இந்தியா வகித்திருக்கக்கூடிய பாத்திரம் குறித்து பலவிதமான சந்தேகங்களும் ஊகங்களும் கிளம்பவே செய்தன.13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை இனநெருக்கடிக்கான முழுமையான தீர்வை நோக்கிய `முதற்படி' என்று மாத்திரம் இந்தியா பகிரங்கமாக அறிவித்தது. இதன் பின்னரே ஜே.வி.பி.யின் தலைவர்கள் மீண்டும் இந்திய விரோத பிரசாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியப் பொருட்களை பகிஷ்கரிப்பது உட்பட இந்தியாவுக்கு எதிராக தற்போது முடுக்கிவிடப்பட்டிருக்கும் பிரசாரம் சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதற்கான எந்தவிதமான அறிகுறியையும் காணக்கூடியதாக இல்லை. தற்போதைய நிலைமையை நோக்கும்போது ஜே.வி.பி.யின் இந்தியா தொடர்பான கொள்கை ஒரு முழு வட்டத்தைச் சுற்றிவந்து நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிரானது என்று அடையாளப்படுத்தப்பட்ட கொள்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட ஜே.வி.பி. இடைக்காலத்தில் அதாவது, கடந்த 15 வருடங்களில் இந்தியா சார்பான நிலைப்பாடுகளை எடுத்தது. நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட 2002 - 2005 காலகட்டத்தில் இனநெருக்கடி விவகாரத்தில் இந்தியாவின் நேரடித் தலையிட்டைக் கூட ஜே.வி.பி. கோரி நின்றது. இப்போது மீண்டும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அக்கட்சி எடுத்திருக்கிறது. உண்மையிலேயே, இந்தியா தொடர்பிலான ஜே.வி.பி.யின் கொள்கை நிலைப்பாடுகள் தமிழர்களுக்கு விரோதமான அக்கட்சியின் அரசியலுடன் சம்பந்தப்பட்டதே தவிர, வேறு ஒன்றுமில்லை. தமிழர்கள் அனுபவிக்கும் அவலங்கள் தொடர்பில் அக்கறை காட்டாதவரை - தமிழர்களுக்கு உரிமைகளைக் கொடுக்குமாறு வற்புறுத்தாதவரை இந்தியா பற்றி ஜே.வி.பி. எந்தப் பிரச்சினையையும் கிளப்பப் போவதில்லை. ஒரு இடைக்காலத்தில் ஜே.வி.பி.யின் தலைவர்கள் இந்தியாவை ஆரத் தழுவி அரவணைத்ததற்குக் காரணமே இலங்கை இனநெருக்கடியில் சம்பந்தப்படாமல் புதுடில்லி விலகியிருந்தமைதான் என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.