* பல தீவுகள் மூழ்கும் அபாயத்திலிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை
காலநிலை மாற்றத்தின் விளைவான வெப்ப நிலை உயர்வால் ஐஸ்லாந்திலும் துருவப் பகுதிகளிலும் படர்ந்திருக்கும் பனிக்கட்டிகள் தற்போது உருகத் தொடங்கியுள்ளன.
ஐஸ்லாந்து முழுவதும் பனிப்படலத்தால் போர்த்தப்பட்டிருந்தது. தற்போது 30 சதவீத பனி உருகி கடலுக்குள் சென்றுவிட்டது. இந்தக் கோடை காலத்துக்குள் இன்னும் ஏராளமான பனிக்கட்டிகள் உருகி கடலுக்கு சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள சுத்தமான உப்புக்கரிக்காத தண்ணீர் அந்தாட்டிக்கா பகுதியிலும் ஐஸ்லாந்திலும்தான் 77 சதவீதம் உள்ளன. இவை உருகிக் கடலுக்குச் சென்றால் கடல் மட்டம் ஏறத்தாழ 225 அடி வரை உயரும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளின் நிலை பற்றி அறிய 2007 டிசம்பரில் நாசா `ஐஸ்சாட்' எனும் செயற்கைக்கோளை அனுப்பியிருந்தது. அது அனுப்பி வரும் புள்ளிவிபரம் மூலம் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
அந்தாட்டிக்காவில் 17 இலட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பும் ஐஸ்லாந்தில் ஒரு கோடியே 37 இலட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பும் பனி படர்ந்துள்ளது. பனிக்கட்டிகளின் சராசரி கனம் 8 ஆயிரம் அடி ஆகும். இவை உலகப் பரப்பில் 10 சதவீதமாகும். ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செயற்படும் ஐஸ்சாட் பனிக்கட்டிகளின் உருகும் தன்மை, அவை இடம்பெயரும் தன்மை உள்ளிட்டவற்றை துல்லியமாகக் கண்டறிந்து தகவல் அளித்து வருகின்றது. உருகும் பனிக்கட்டிகள் தொடர்பாக விஞ்ஞானிகள் புதிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள இது உதவி வருகின்றது.
1991 ஆம் ஆண்டுக்குப்பின் இப்பகுதியில் 7 பாகை பரனைட் வெப்பநிலை உயர்வால் பனி உருகத் தொடங்கியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பனிக்கட்டியும் நகர்கிறது. அதற்குக் காரணம் உருகிய பனியிலிருந்து வழிந்தோடும் நீர் கடலில் சென்று சேர்கிறது. அப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளின் அடியில் இந்த நீர் சென்று சேர்வதால் மொத்த பனிக்கட்டியும் லேசாக கடலை நோக்கி நகரத் தொடங்குகிறது.
ஐஸ்லாந்து பனிக்கட்டி உருகினால் 23 அடி உயரத்திற்கு கடல்மட்டம் உயரும். இது உலகம் முழுவதும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும். தீவுகள் மூழ்கும் அதேசமயம், பருவ நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமென விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.