நேபாளத்தின் தேர்தலை முன்னிட்டு அந்நாட்டில் வரலாறு காணாதளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு மன்னரின் ஆதரவாளர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
அந்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன. இதனைக் கட்டுப்படுத்த பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பின் போது மாவட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாகச் செயற்பட சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனுமதி இல்லாமலே பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்த முடியும்.
இதற்கிடையில், தேர்தல் விதிகள் மீறப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் இதுவரை நான்காயிரம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு தெராய் என்ற தீவிரவாத அமைப்புக்கு நேபாள அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஆளும் கூட்டணி அரசு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் அமைதி உடன்பாடு செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.