தாய்வானின் புதிய ஜனாதிபதியாக எதிர்க்கட்சி வேட்பாளர் மா யிங் ஜியோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆளுங் கட்சி வேட்பாளர் பிராப் ஹசியாவை 17 வீத வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ள மா,சீனாவுடனான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான உறவுகளை பலப்படுத்தவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.
மேலும், சீனாவுடன் அமைதி உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள மா, ஆனால், தாய்வானை இலக்கு வைத்துள்ள தனது ஏவுகணைகளை சீனா அகற்றினால் மட்டுமே இது சாத்தியமாகுமெனத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தாய்வானில் நடத்தப்பட்ட தேர்தலில், எதிர்க்கட்சியான குயோமின்டாங் கட்சியைச் சேர்ந்த மா யிங் ஜியோ 58.45 வீத வாக்குகளையும் ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் வேட்பாளரான பிராங் ஹசியா 41.55 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
சீனாவுடனான உறவுகளை விருத்தி செய்தல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளல் போன்ற விடயங்களை அடிப்படையாக வைத்தே மா தனது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஹவார்ட்டில் கல்வி கற்ற 57 வயதான மா தனது வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னர் ஆதரவாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
"சீனாவுடன் அமைதி உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நாம் விரும்புகிறோம். ஆனால், தாய்வானை இலக்கு வைத்துள்ள ஏவுகணைகளை சீனா அகற்றினால் மட்டுமே நாம் பேச்சுகளை மேற்கொள்வோமென முன்னரே தெளிவுபடுத்தியுள்ளோம்.
இப் பிராந்தியத்தில் தாய்வான் அமைதியை விரும்பும் ஒரு நாடாக இருக்குமே தவிர, அமைதிக்கு தடையாக இருக்காது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோ"மெனத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் சுமார் 1000 ஏவுகணைகள் தாய்வானை இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மா வின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ், இரு நாடுகளும் தமக்கிடையிலான வேறுபாடுகளை அமைதி வழியில் தீர்ப்பதற்கான வாய்ப்பை இத் தேர்தல் முடிவுகள் வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வென்ற குயோமின்டாங் கட்சி தற்போது ஜனாதிபதி பதவியையும் வெற்றி கொண்டிருப்பதன் மூலம் தலைமைத்துவத்துக்கான மக்களின் பலமான ஆணையைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மா முன்வைத்துள்ள பொருளாதாரக் கொள்கைகள் மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
1949 இல் தாய்வான் சீனாவிலிருந்து பிரிந்து தனியாக ஆட்சி செய்யப்படுகின்ற போதும் தாய்வான் தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியென்றே சீனா கூறி வருகின்றது.
இந் நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளாக தாய்வான் ஜனாதிபதியாக பதவி வகித்த சென் சூ பியானின் சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டால் சீனாவுடனான உறவுகள் விரிசலடைந்தன.
ஆனால், சீனாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேண விரும்பும் புதிய ஜனாதிபதி மா, சீனாவுடன் மென் போக்கான அணுகுமுறையையே கடைப்பிடிப்பாரென செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கூட்டணித் தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சிப் பதவிகளை துறக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.