மணலாறு பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
இந்த மோதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டதுடன், ஏழுபேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்த படையினர், புலிகள் தரப்பில் பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிரிப்பன்வெவ, ஜனகபுர, கொக்குத்தொடுவாய் பகுதிகளிலேயே சனிக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆறுக்கும் மேற்பட்ட தடவைகள் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிரிப்பன்வெவ பகுதியில் நடைபெற்ற மோதல்களிலேயே மூன்று படையினர் கொல்லப்பட்டும் ஏழு படையினர் காயமடைந்துமுள்ளதாக படையினர் தெரிவித்தனர்.
இதேநேரம், சனிக்கிழமை மன்னாரில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல் களில் 29 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக படையினர் தெரிவித்தனர்.
இதேநேரம், மன்னாரில் சனிக்கிழமை படையினர் இரு முனைகளில் மேற்கொண்ட பாரிய படை நகர்வுகளைத் தாங்கள் முறியடித்துள்ளதாகவும் இதில் 55 படையினர் கொல்லப்பட்டும் 120 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ். குடாவில் மோதல்
இதேவேளை, யாழ்.குடாவில் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் பகுதிகளில் முன்நகர்வு முயற்சிகளை தாங்கள் முறியடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
வட போர் முனையான யாழ். முகமாலை, கிளாலி, நாகர்கோவில் முன்னரங்கப் பகுதிகளில் படையினர் நேற்று முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர்.
செறிவான ஷெல் தாக்குதலுடன் படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இம் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்தி படையினரை பழைய நிலைகளுக்குத் திருப்பி அனுப்பினர்.
இதில் படைத்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடைபெற்ற பகுதியில் விடுதலைப் புலிகள் தேடுதல் நடத்திய போது ரி.56- 2 ரக துப்பாக்கி -01, ரவைக்கூடு -01 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாகர்கோவில் பகுதியில் சனிக் கிழமை நடைபெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 2 பேர் காயமடைந்துள்ளனர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது.