பேராதனை பொலிஸ் பிரிவில் நேற்று ஞாயிற்றுக் கிழமை மிகப்பெரியளவில் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பேராதனை ரயில் நிலையம், ஹிந்தகல, பெனிதெனிய, ஹெலி ஓயா ஆகிய பகுதிகளிலேயே நேற்றுக் காலை முதல் மாலை வரை இந்த நடவடிக்கையை பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டிருந்தனர்.
நூற்றுக்கணக்கான வாகனங்களும், ஆயிரக்கணக்கான மக்களும் இந்தச் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதை காணமுடிந்தது.
பேராதனை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில்களும், வெளியிடங்களில் இருந்து வந்த ரயில்களும் பலத்த சோதனையிடப்பட்டதுடன், பயணிகளின் பொதிகளும் தேசிய அடையாள அட்டைகளும் பரிசோதிக்கப்பட்டன. பலர் விசாரணை செய்யப்பட்டனர்.
குறிப்பாக தமிழர்கள் மீது தீவிர சோதனைகளும், விசாரணைகளும் இடம்பெற்றன.
அட்டன், நாவலப்பிட்டி, நுவரெலியா போன்ற பகுதிகளில் இருந்து கண்டிப்பகுதிக்கு வந்து கொண்டிருந்த சகல வாகனங்களும் ஹெலிஓயாவில் நிறுத்தப்பட்டு, அவற்றில் பயணம் செய்தவர்கள் அனைவரும் வெளியே இறக்கப்பட்டு சோதிக்கப்பட்டனர்.
இந்த வாகனங்கள் மிகத் தீவிரமாக சோதனையிடப்பட்டன. வாகனங்களில் இருந்த பொருட்களும் துருவித்துருவி சோதனையிடப்பட்டன.
இதேபோல பெனிதெனிய, ஹிந்தகல பகுதிகளிலும் வாகனங்களும், பொதுமக்களும் சோதனையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது 28 வயது தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
பேராதனையில் இது போன்ற தேடுதல் நடவடிக்கையும் சோதனைகளும் இதற்கு முன்னர் ஒருபோதும் இடம் பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.