* ஏப்ரல் 3 இல் ஆரம்பம்; ரணில் அறிவிப்பு
எம்.ஏ.எம்.நிலாம்
அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் எதிர்வரும் மூன்றாம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படுமென அறிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஏப்ரல் இறுதியில் பத்து லட்சம் பேரை கொழும்புக்கு அழைத்து வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.
முப்பது வருடங்களுக்குப் பின்னர் இந்த நாட்டில் மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டு வருவதாகவும் மெதமுலன குடும்பம் நாட்டை கொள்ளையடித்து வருவதாகவும் ரணில் விக்கிர மசிங்க சுட்டிக் காட்டினார்.
நேற்று முன்தினம் சனிக் கிழமை இரவு கொழும்பு வர்த்தக கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சிச் சபை பிரதிநிதிகள், கட்சி அமைப்பாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெருந்தொகையான பேராளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
்நாடு மீண்டும் 77 ஆம் ஆண்டுக்கு முன்னரான சிறிமாவோவின் மரவள்ளி யுகத்துக்கு இட்டுச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அன்று மக்களிடம் பணம் இருந்தது. ஆனால், பொருட்கள் இருக்கவில்லை. இன்று ராஜபக்ஷ ஆட்சியில் பொருட்கள் இருக்கின்றன ஆனால், மக்களிடம் பணம் இல்லை. விலைவாசி உயர்வை தாங்கிக் கொள்ளும் நிலையில் நாட்டு மக்கள் காணப்படவில்லை.
மகிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்ததும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு 6 மாதங்களில் நிவாரணம் தேடப்படுமென்று உறுதியளித்தார். பின்னர் கடந்த டிசம்பர் வரை பொறுமை காக்குமாறும் அதன் பின்னர் பிரச்சினை கிடையாது என்றும் பேசினார்.
ஜனவரி மாதத்தில் சொன்னார் மார்ச்சில் யுத்தத்தில் வெற்றி கண்டதும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கட்டுப்படுத்தப் போவதாக உறுதியளித்தார்.
மார்ச் மாதமும் முடிவடைகிறது. நடந்தது எதுவுமில்லை. மக்கள் பட்டினிச் சாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். கிராமப் புறத்து மக்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியிலும் இறங்கப் போவதாக கூறுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
எரிபொருட்கள், சமையல் எரிவாயு, அரிசி, பாண் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தினதும் விலைகள் வானளவ அதிகரித்துள்ளது. அதனை ஈடு செய்யக் கூடிய வருமானம் மக்களுக்குக் கிட்டவில்லை. மகிந்த சிந்தனையை நம்பி மக்கள் இன்று பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்று இன்னும் சிறிது காலத்துக்கு இடுப்புப் பட்டியை இறுக்கிக் கட்டிக் கொள்ளுமாறு ராஜபக்ஷ அரசு மக்களைக் கேட்கிறது.
அரசுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு போதுமானதென்றே நாம் கருதுகின்றோம். பொறுமை எல்லை மீறிவிட்டது. மக்கள் வீதியிலிறங்கத் தயாராகி விட்டனர். இந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக கிராமிய மட்டத்திலிருந்து மக்கள் சக்தி படையொன்றை ஏற்படுத்தியுள்ளோம். இந்தப் படையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மூன்றாம் திகதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அரசாங்கத்தின் அராஜக செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் மாத இறுதிவரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். மாத இறுதியில் 10 இலட்சம் மக்களை கொழும்புக்கு அழைத்து வந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் கடுமையான போராட்டத்தை நடத்துவோம். இந்த விடயத்தில் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள மக்கள் சக்தி எம்மோடு இணைந்து கொண்டுள்ளது.
மெதமுலன சுறாமீன்கள் மிக் 27 விமானக் கொள்வனவின் மூலம் கொள்ளையடித்தனர். பிரதேச மட்டத்திலுள்ள அரசின் நெத்தலி மீன்கள் மகநெகும, கமநெகும போன்றவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டி கொள்ளையடிக்கின்றன. இதற்கு தொடர்ந்து இடமளித்தால் எமது நாடு பிச்சைக்கார நாடாக மாறி விடும் அபாயம் தோன்றியுள்ளது. இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் போராட்டத்தையே ஏப்ரல் 3 ஆம் திகதி ஆரம்பிக்கின்றோம்.
உள்ளூராட்சிச் சபைகளில் எமது உறுப்பினர்கள் நேர்மையுடன் மக்களுக்காக பணிபுரிய வேண்டும். மக்களை எம் பக்கம் அரவணைத்து இவ்வருட இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.
நாட்டு மக்கள் பட்டினியால் செத்து மடிந்தாலும் பரவாயில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு வரவிடாது தடுக்கும் முயற்சியில் ஜே.வி.பி.இறங்கியுள்ளது. ஜே.வி.பி.யின் சக்தியை விட ஐக்கிய தேசியக் கட்சியின் சக்தி எத்தகையது என்பதைக் காட்ட நாம் தயாராகி விட்டோம் என்பதை ராஜபக்ஷ ஆட்சிக்கும் அதன் கைக்கூலிகளான ஜே.வி.பி.க்கும் சொல்லி வைக்கின்றோம்.
இந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர் ருக்மன் சேனாநாயக்கா, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கே.சர்னல் ஜயமின் பெர்னாண்டோ ஆகியோரும் உரையாற்றினர்.