இந்திய அணியின் சவாலை சந்திக்க தாங்கள் தயாரென்று தென்ஆபிரிக்க அணிக் கப்டன் கிரேம்ஸ்மித் தெரிவித்துள்ளார்.
தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெ்ஸ்ட போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடக்கிறது.
இதற்காக ஸ்மித் தலைமையிலான தென்ஆபிரிக்க அணியினர் டுபாயிலிருந்து விமானம் மூலம் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னை வந்தனர்.
அதன்பின் தென்ஆபிரிக்க அணிக்கப்டன் ஸ்மித் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடர் மிகவும் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். இந்திய அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் பெர்த் டெஸ்ட் போட்டியில் வென்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. இதேபோல் நாங்களும் மிகுந்த நம்பிக்கையுடன் தான் இங்கு வந்திருக்கிறோம்.
இந்திய துணைக் கண்டத்தில் விளையாடுவது என்பது எப்போதுமே சவால் நிறைந்தது தான். அந்த சவாலை எதிர்கொள்ள நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். இந்தத் தொடரை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம். இந்தப் போட்டித் தொடர் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், இந்தத் தொடரை அடுத்து இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடினமான தொடர் எங்களுக்குள்ளது.
லாங்கிவெல்ட், அண்ட்ரூ நெல் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறாமல் போனது ஏமாற்றமளிக்கிறது. இது அணிக்கு நிச்சயமாக பாதிப்புத்தான். இருப்பினும் நாங்கள் நல்ல முதிர்ச்சி பெற்றவர்கள். எங்கள் பணி தொடர்ந்து கிரிக்கெட் ஆட்டத்தில் கவனம் செலுத்துவது தான். நாங்கள் ஆண்டு முழுவதும் விளையாடி வருபவர்கள். எங்களது அணி சவாலை சந்திக்க போதிய திறனுடன் உள்ளது. அடுத்த 3 நாட்கள் முக்கியமானதாகும். இதில் தீவிர பயிற்சியில் ஈடுபடுவோம். மழையால் பயிற்சிக்கு பாதிப்பு இருக்காது என்று நம்புகிறோம். பயிற்சி ஆட்டத்துக்கு நாங்கள் இன்னும் முயற்சித்து வருகிறோம்.
இந்திய துணைக் கண்டத்துக்கு வரும் போதே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் வருகிறோம். எங்கள் அணியில் நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். எங்கள் பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டையும் கைப்பற்றும் திறன் படைத்தவர்கள்.
இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை மிகவும் வலுவானது. முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் 6 பேரும் நல்ல போர்மில் உள்ளனர். அவர்கள் அதிக ஓட்டங்கள் குவித்துள்ளனர். அவர்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அவர்களை வெல்ல வேண்டும் என்பதையே நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
இந்தப் போட்டித் தொடர் நல்ல ஆட்ட உத்வேகத்துடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வார்த்தை மோதலில் வெற்றி பெற்றாலும், ஆட்டத்தில் வெற்றி காணவில்லை என்றால் அந்த ஆட்டம் யாருக்கும் மனதில் நிற்கும் போட்டியாக அமையா"தென்றார்.
தென்ஆபிரிக்காவைச் சேர்ந்த கரி ஹேஸ்டன் இந்திய அணி பயிற்சியாளராகவும் உப்டன் மனோதிட பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கேட்டதற்கு தென்ஆபிரிக்க அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதிலளிக்கையில்
`எந்தவொரு சர்வதேச பயிற்சியாளரும் எதிரணி முக்கிய வீரர்கள் பற்றி அறிந்திருப்பது அவசியம். மனோதிட டாக்டர் உப்டன் எங்கள் அணி வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். எங்கள் வீரர்கள் குறித்த நம்பகத்தன்மையை காப்பதாக அவர் உறுதி கொடுத்துள்ளார்' என்றார்.