வேல்ராசன்
சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம் அங்கு யுரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக் காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினப் இரு வரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள்.
சம்பவம் 2. பெங்களூர் நகரம் ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் அந்த மாணவனது வீடு பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு, மொட்டை மாடியில் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவது, இம்மாணவனது பொழுது போக்கு. அப்பா பொறியியலாளர், அம்மா மருத்துவர். இம்மாணவனை கன்னட வழி வகுப்பில் படிக்கும் இரு மாணவர்கள் கேலி செய்தார்களாம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மாணவன், வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பள்ளி முடிந்து வரும் அந்த இரு மாணவர்களையும் துப்பாக்கியால் சுடுகிறான். இருவரும் சாகவில்லை என்றாலும், காயப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சம்பவம் 3. உத்திரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம் மெத்னாரா கிராமத்தைச் சேர்ந்த அதர் சிங் +2 படிக்கும் மாணவன். உடன் படிக்கும் விபன் எனும் மாணவனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொல்கிறான். "தங்கையை கேலி செய்யாதே என பலமுறை எச்சரித்தும் கேட்காததால் விபனைச் சுட்டுக் கொன்றேன்" என அதர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் 4. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு நகரம். அங்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் +2 படிக்கிறான். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ரஞ்சித், புது மட்டை வாங்குவதற்கு பெற்றோர்களை நச்சரித்துப் பணம் வாங்குகிறான். லோகநாயகி என்ற வயதான பெண்மணி நடத்தும் விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்துக்கு செல்லும் ரஞ்சித், அங்கு பல மட்டைகளைப் பார்த்தும் திருப்தியடையவில்லை. தனது நேரத்தை வீணடிப்பதாக அவனிடம் லோகநாயகி நொந்து கொள்கிறார். இதை ஒரு பெரிய அவமானமாக எடுத்துக் கொண்ட ரஞ்சித், அந்தப்பெண் மணியைப் பழிவாங்க நினைக்கிறான். அவனது தாத்தா கந்தசாமி, தி.மு.க.வில் இரு முறை சட்டமன்றப் பதவிக்குப் போட்டியிட்டவர். வீட்டில் ஒரு வெளிநாட்டு கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார். அதை எடுத்துக் கொண்ட ரஞ்சித், இருநாட்கள் கழித்து லோகநாயகி அம்மாளைச் சுட்டுப் படுகாயப்படுத்துகிறான். அந்தப் பெண்மனி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
இந்நான்கு சம்பவங்களும், கடந்த சில மாதங்களில் நடந்து பத்திரிகைகளில் பதிவானவை, மாணவர் மத்தியில் நடக்கும் இது போன்ற துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளுக்கு புகழ்பெற்ற நாடு அமெரிக்காதான். கடந்த பெப்ரவரி மாதத்தில் இலியானாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவன் ஒருவன் சுட்டு, 5 மாணவர்கள் இறந்திருக்கின்றனர். இந்த அமெரிக்கப் பாணி வன்முறை இந்தியாவிலும் வந்து விட்டதா என்று சிலர் அதிர்ச்சியடையலாம். வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அத்தனையும் அமெரிக்கமயமாகி வரும் போது, வன்முறை மட்டும் விதிவிலக்கா, என்ன? அமெரிக்கா அளவுக்கு இங்கே துப்பாக்கிகள் மலிவாகப் பரவ வில்லையே தவிர, வன்முறை அதன் தன்மையளவில் மாணவர்களிடையே சமீபகாலமாகப் பரவித்தான் வருகிறது.
இது சமூக அநீதிக்கு எதிராகக் கலகம் செய்யும் மாணவப் பருவத்திற்கேயுரிய போராட்ட வன்முறையல்ல, ஆடம்பரத்திற்காகவும், அற்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் துப்பாக்கி எடுக்கும் தனிநபர் வன்முறை மேற்கண்ட சம்பவங்களில் வன்முறையின் கருவி துப்பாக்கியாக இருப்பதினாலேயே பொலிஸும், பத்திரிகைகளும் விசேடமாகப் பார்க்கின்றன. உண்மையில் துப்பாக்கியல்ல பிரச்சினை விடலைப் பருவத்தின் வன்முறை மனோபாவம்தான் பிரச்சினை.
2006 டிசம்ப் மாதத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் 13 வயதே நிரம்பிய அரவிந்த் என்ற சிறுவன் அவனது தெரு நண்பர்களாலேயே கொல்லப்படுகிறான். புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பண மில்லாததால், அரவிந்தை பணயக் கைதியாகக் கடத்தி, அவனுடைய அப்பாவிடமிருந்து தேவைப்பட்ட பணத்தைக் கறந்து விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். திட்டம் குளறு படியாகி, அம்மாணவன் கோரமாகக் கொல்லப்படுகிறான். இதே காலத்தில் ஆடம்பர, கேளிக்கை வாழ்விற்காப் பணம் திரட்ட நினைத்த மூன்று ஏழை மாணவர்கள், ஒரு நகைக் கடையைக் கொள்ளையடிக்க முயன்றபோது பிடிபட்டார்கள்.
இப்படிப் பரபரப்பிற்காகப் பத்திரிகைகளில் வெளிச்சமிடப்படும் சம்பவங்கள் பல இருந்தாலும், இவை எங்கோ ஒரு வீட்டில் நடப்பதாகவும். நம் வீட்டில் பிரச்சினையில்லை என்று பல பெற்றோர் சுயதிருப்தி கொள்ளலாம். வன்முறையின் கடும் தருணங்கள் இங்குதான் வெடிக்க வேண்டுமென்று திட்டமிட்டுக் கொள்வதில்லை. அவை எங்கும் எப்போதும் நடக்கலாம், அதற்குத் தோதாக விடலைப் பருவ மாணவ வாழ்க்கை தயாராகி வருகிறது. அதில் நம் வீட்டுப்பையனும் இருக்கிறான் என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை.
ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு இருந்ததை விட, மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை வெகுவாக மாறிவிட்டது. முன்பு ஆடம்பரமாகக் கருதப்பட்டவை, இன்று அத்தியாவசியமானவையாக மாறிவிட்டன. எல்லா வேலைகளுக்கும் நவீன கருவிகள், அது போக வேலையாட்கள், குளிர்பதனக் கருவி, கார், இருசக்கர வாகனங்கள், செல்பேசிகள், பீட்ஸா, பர்கர் என்று மாறிவிட்ட உணவுப் பழக்கம், குடும்ப உறுப்பினராக மாறிவிட்ட தொலைக்காட்சி, வார இறுதியில் எல்லையில்லா கேளிக்கைகள்.
இலட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவரும் புதிய பொருளாதாரக் கொள்கைதான், நடுத்தர வர்க்கத்தை இப்படியொரு `மகிழ்ச்சியான வாழ்க்கைக்குள்' பிடித்துத் தள்ளியிருக்கிறது. மற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கையை, நவீன வசதிகளாக மாற்றித் தந்திருக்கும் உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும் இந்த வாழ்க்கையின் தன்மைதான் என்ன? எல்லா வகை உடலுழைப்பையும், சமூக உறவுகளையும் ரத்துச் செய்து விட்டு, கேளிக்கை, நுகர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடும் இந்த வாழ்க்கை, சிறார்களின் உலகை என்னவாக மாற்றியிருக்கிறது?
வன்முறை கற்றுத்தரும் காட்டூன் தொடர்கள்!
குழந்தைகளுக்கு விருப்பமான காட்டூன் அலைவரிசைகள் இன்று தமிழிலேயே வந்து விட்டன. பள்ளிக் கல்விக்கு ஆங்கிலமும், பொழுது போக்குவதற்கு மட்டும் தமிழ் என்பது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம். குழந்தைகள் மனதை தாய்மொழியில்தான் கொள்ளை கொள்ள முடியும் என்பது அந்தச் அலைவரிசைகளைச் சந்தைப்படுத்தும் முதலாளிகளுக்குத் தெரியும். சுட்டி டி.வி.யையும் தமிழ் ஜெட்டிக்ஸையும் சிறார்கள் நீண்ட நேரம் வெறித்துப் பாக்கிறார்கள். அப்படிப் பார்ப்பதற்காகவே விரும்பிக்காத்திருக்கிறார்கள். அதற்காகவே வீட்டுப் பாடத்தை விரைந்து முடிக்கிறார்கள். அவர்களது கற்பனை உலகை கார்ட்டூன்களும், யதார்த்த உலகை கார்ட்டுன்களுக்கு இடையில் வரும் விளம்பரங்களும் கட்டியமைக்கின்றன. ஆசை தோற்றுவிக்கும் ஏக்கத்திற்கும், அதுநிறைவேற தடையாக இருக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான அந்த மாய உலகின் முரண்பாட்டில்தான் இளம் பருவத்து மாணவர்கள் உலவுகிறார்கள்.
பவர் ரேன்ஜர்ஸ் அவர்கள் விரும்பிப் பார்க்கும் ஒரு தொடர். கிராபிக்ஸ் உதவியோடு வண்ணச் சிதறலாகத் தெறிக்கும் இத்தொடரில் அடிப்பது, வெட்டுவது, சுடுவது, வெடிப்பது எல்லாம் நொடிக்கொரு தடவை நடக்கிறது. நமக்கு ஓரிரு நிமிடங்களில் சலித்துப் போகும் இத்தொடர், அவர்களுக்குச் சலிப்பதில்லை. கிராஃப்பிக்ஸ் இல்லாமல், நிஜத்தில் மாமிச மலைகள் மோதும் டபிள்யூ.டபிள்யூ எஃப் மல்யுத்தச் சண்டைகளும் ஜெட்டிக்சில் காண்பிக்கப்படுகின்றன. வகை தொகையில்லாமல் மனிதர்கள் அடித்துக் கொள்ளும் இந்த வன்முறைக் காட்சிகளைத் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
சக மனிதன் அடிபட்டாலோ, இரத்தம் சிந்தினாலோ, இறந்து போனாலோ அதிர்ச்சியடைவது மனித இயல்பு. சிறார்களின் உலகில், இந்த உள்ளார்ந்த மனித மதிப்பீடுகள் நமத்துப் போகின்றன. வன்முறை குறித்த இரக்கமோ, பயமோ இல்லாதது மட்டுமல்ல, அவர்களே அதைச் செயல்படுத்துபவர்களாகவும் மெல்ல மெல்ல மாறுகிறார்கள். அற்பப் பிரச்சினைகளாக இருந்தால் கூட, அதை வன்முறை மூலம் தீத்துக்கொண்டு இறுதி வெற்றி அடையவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். விளைவறியாத இளங்கன்றுகளாக இருப்பதால், இத்தகைய வன்முறை அவர்களது ஆளுமையின் அங்கமாகிறது.
விலங்குகளையும் இயற்கையையும் நேரில் கண்டு கற்கவேண்டிய வயதில், மிக்கி மவுசின் பொருளற்ற வேடிக்கைகளில் காலந்தள்ளுகிறார்கள் சிறார்கள். அதிலும் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்படும் காட்டூன்தொடர்கள், இப்போது அருகி வருகின்றன. சண்டைக் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் அதிதீவிர வீரர்களின் தொடர்களே இன்று பெருகி வருகின்றன. இவற்றின் வன்முறைக்கு ஒத்திசைவான விதத்தில் இடையில் வரும் விளம்பரங்களும் குழந்தைகளை போட்டுத் தாக்குகின்றன. பெரியவர்களுக்கு வேண்டுமானால் விளம்பரங்கள் மீது சலிப்புவரலாம். சிறியவர்களுக்கு அவைதான் பாலபாடம்.
விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்!
சில விநாடிகள் மட்டுமே வரும் விளம்பரங்களின் செய்தி, நாள் முழுக்க சிறுவர்களை இயக்குகின்றது. அவர்களது அறிவுத்திறனின் அடிப்படையே விளம்பரங்கள்தான். வேகமான படத்தொகுப்புக்களில் விரைந்து செல்லும் விளம்பரத்தின் சிறு செய்தி கூட, சிறுவர்களின் மனதில் தைப்பதற்குத் தவறுவதில்லை. விளம்பரங்கள் செதுக்கித்தரும் `மகிழ்ச்சியான குடும்பம்' உண்மையில் ஒரு கற்பனைதான் என்றாலும், அந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகச் சிறுவர்கள் ஏங்குகிறார்கள். இயற்கையின் இயக்கத்தையும், சமூகத்தின் போராட்டத்தையும் அறிய வேண்டிய இளம் பருவம், இத்தகைய செயற்கையான, சுயநலம் மிகுந்த, ஆடம்பரமான கற்பனை உலகத்தில் வெம்பி வாடுகிறது. பிஞ்சில் பழுத்த மனம், தான் காணும் தொலைக்காட்சி வாழ்க்கை கிடைக்காத போது வன்முறையின் பக்கம் எளிதாக நகருகிறது.
சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது, எது வாங்கினால் எது இலவசம், எதற்குத் தள்ளுபடி, எந்தக் கடையில் என்ன கிடைக்கும் முதலான நுகர்வுக் கலாசார பொது அறிவில், குழந்தைகள் பெரியவர்களை விஞ்சி நிற்கிறார்கள். அவவ்வகையில் முதலாளிகளின் விளம்பரங்களுக்கு பிரசார பீரங்கிகளாக சிறுவர்களே விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரு புதிய பொருளை வாங்க வேண்டுமென்ற போராட்டம், அநேகமாக சிறியவர்களிடமிருந்துதான் துவங்குகிறது.
வானவேடிக்கை போல விளம்பரங்களை வாரி இறைக்கும் இன்றைய முதலாளித்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றான நுகர்வுக் கலாசாரம். தன்னளவிலேயே ஒரு வன்முறையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புதிய செல்பேசி, கார், தொலைக்காட்சி முதலானவை அறிமுகமாகும் போதும் அவற்றின் பழை மொடல்களை வைத்திருப்பவர்களிடம், ஒரு பதற்றம் பற்றிக் கொண்டு விடுகிறது. புதியதை வாங்கும் வரை, மனம் அமைதியடைவதில்லை. பங்குச் சந்தை குறியீட்டெண் போல, ஒவ்வொரு புதிய விளம்பரமும் இந்த மெல்லிய வன்முறையின் அளவைக் கூட்டுகிறது. இதில் சிக்கியிருக்கும் பெரியவர்களின் கதியே இது வென்றால், சிறியவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
விளம்பரங்களின் வழியாக மனதில் பதியும் புதிய பொருளை வாங்க வேண்டுமென்று சிறார்கள் அடம் பிடிக்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். வகுப்புத் தோழர்களிடம் அற்பவிசயங்களுக்காக எழும் பொறுமையின்மைக்கான அரிச்சுவடி, இதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவ்வகையில் சகிப்புத் தன்மையற்ற மனநிலையை நுகர்வுக் கலாசாரம் கற்றுத் தருகிறது. நச்சரிப்பு தாங்காத பெற்றோர்களும், கேட்டதை வாங்கித் தருகிறார்கள். பிடிவாதம் பிடித்தால் நினைத்ததை வாங்கிக் கொள்ளலாம் என்பதைக் குழந்தைகள் தமது சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்கிறார்கள். இந்தப் பிடிவாதம்தான் வன்முறையின் துவக்கப்புள்ளி என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.
தொடரும்