இரா.மகாதேவன்
நாட்டில், மத்தியிலும் மாநிலத்திலும் காணப்படும் அரசியல் பரபரப்பிலோ இயந்திரத்தமான வாழ்வியல் சூழலினாலோ கடந்த வாரம் சட்டக் கமிஷன், மத்திய அரசுக்குப் பரிந்துரைத்த ஒரு விடயம் யாருடைய கவனத்தையும் பெறாமல் போய்விட்டது.
ஆண்களின் திருமண வயதை 21இலிருந்து 18 ஆக குறைக்கலாம் என மத்திய அரசுக்கு யோசனை கூறியிருக்கும் சட்டக் கமிஷன், இரு பாலருக்கும் திருமண வயதில் இந்த வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக காரணம் ஏதுமில்லை என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை சட்டக் கமிஷனின் இந்தப் பரிந்துரை சற்று நிலை தடுமாறவோ, திசைதிருப்பவோ கூடும் என்ற அச்சம் எழுகிறது.
ஒரு மாணவர் தன் வாழ்வில் எதிர்காலத்தில் தான் ஏற்றுக்கொள்ளப்போகும் சமுதாயப் பணியை தன் வாழ்க்கை சார்ந்ததாகவும் சமுதாயம் சார்ந்ததாகவும் அமைத்துக்கொள்ள தன்னுடைய டீன் ஏஜ் (13- 19) வயதிலேயே திட்டமிடுகிறார்.
அந்தத் திட்டமிடல் தானாகவோ பெற்றோர் வாயிலாகவோ அவருக்கு அமைகிறது. இந்த வயதில் அவருடைய மனநிலை அலைபாய்வதாகவும் சொந்தமாக முடிவெடுக்க முடியாததாகவும் பலருடைய யோசனைகளைப் பெற வேண்டிய சூழ்நிலையிலும் இருக்கும். இதற்கு அவர்களுடைய அனுபவக் குறைவு காரணமே தவிர இயலாமை அல்ல. இது உளவியல் சார்ந்த உண்மை.
இந்தக் கட்டத்தில் அந்த மாணவரை பெற்றோரோ ஆசிரியரோ நட்பு வட்டமோ சமூகமோ எப்படிக் கையாள்கிறதோ வழிநடத்துகிறதோ அந்த வடிவத்தில் மாறிபபோகிறார் அந்த மாணவர்.
இதற்கு பெற்றோரையும் ஆசிரியரையும் குறை சொல்ல வாய்ப்பில்லை. அவர்கள் அந்த மாணவரின் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள்.
இந்த நிலையில்தான் சட்டக் கமிஷனின் 18 வயது என்ற பரிந்துரை கேள்விக்குள்ளாகிறது.
10 ஆம் வகுப்பில் 15 வயது, 12 ஆம் வகுப்பில் 17 வயது என்ற வளர் இளம் பருவத்தில் இருக்கும் ஒரு மாணவர், எதிர்காலக் குறிக்கோளை அடைய அவரை அந்த வழியில் செலுத்த பெற்றோரும் ஆசிரியர் குழாமும் அதீத முயற்சி எடுத்துக் கொண்டிருக்க அந்த முயற்சிகளைக் குலைக்கும் வகையில் சட்டக் கமிஷன் ஒரு பரிந்துரையை வைத்திருப்பது இந்தச் சமுதாய வளர்ச்சியில் அதற்கு எந்த அளவு அக்கறை இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
மறைபொருளாக இருந்த காதல், ஊடகங்களின் பெருக்கத்தால், பொறுப்பற்ற தன்மையால் இன்று காட்சிப் பொருளாக மாறி, பலர் முன் கைகோர்த்துச் செல்வது ஜோடியாக ஆடுவது, பாடுவது, பேட்டியளிப்பது என்பது வரை வளர்ந்திருக்கிறது.
இவ்வாறு திசை மாறிச் செல்லும் இளைஞர்களின் வயது ஆணாக இருந்தால் 21 இலிருந்து 25 ஆகவும் பெண்ணாக இருந்தால் 18 இலிருந்து 23 ஆகவும் இருக்கிறது. இதற்குக் காரணம் குறிப்பிட்ட இந்தக் குறைந்தபட்ச வயதில்தான் சட்டப் பாதுகாப்புக் கிடைக்கும்.
இந்தச் சட்டப் பாதுகாப்பு கேட்டுச் செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். குறைந்தது பட்டப்படிப்பு.
சரி இவ்வாறு செல்வதில்கூட ஒரு சாதகம் இருக்கிறது. காதல் வயப்பட்டு காவல்நிலையம் வரை சென்று திருமணம் செய்துகொள்ளும் ஆணின் திருமண வயது 21 என்ற நிலையில் அவர் `டிகிரி' முடித்திருக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்புக்காக போட்டியிடும் ஒரு குறிப்பிட்ட தகுதியைப் பெற்றிருப்பார்.
ஆனால், சட்டக் கமிஷன் பரிந்துரைத்திருக்கும் 18 வயது ஆண் படிக்கும் வயதில் காதல் வயப்பட்டு தவறான நட்பு, சமூக பழக்கத்தால் திசை திருப்பப்பட்டால் சட்டத்தை எடுத்துக்கொண்டு திருமணத்திற்காக காவல்நிலையம் செல்ல நேரிட்டால், அது இந்தச் சமுதாயத்தில் அவருடைய வாழ்வில் எத்தகைய சீரழிவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
பொதுவாகவே நம் நாட்டைப் பொறுத்த அளவில் பெண்கள் பேதமின்றி அனைத்துத் துறைகளிலும் கோலோச்சினாலும் விழிப்புணர்வு பெற்றிருந்தாலும் இன்னும் விழிப்புணர்வு பெறாத ஆண்களைச் சார்ந்து வாழும் பெண்களே அதிகமிருக்கிறார்கள்.
அதுபோன்ற பெண்கள், காதல் என்ற வலையில் விழுந்து கல்வியை முழுமையாக முடிக்காத உடலுழைப்புத் தெரியாத தன் வயதையொத்த ஆண்களைத் திருமணம் செய்துகொள்ளும் நிலையும் இதனால் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இது இருவரின் எதிர்காலக் குறிக்கோளைச் சிதைப்பதோடு, சமூக எதிர்பார்ப்பையும் சிதைத்து சில சமயங்களில் அந்த இளைஞர்களின் வாழ்க்கையையும் அழித்துவிடுகிறது.
ஒத்த வயதுடையவர்களோ அல்லது மூத்த பெண்ணும், இளைய ஆணும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதற்கு உளவியல் ரீதியான பல காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சட்டக் கமிஷன் உளவியல் வல்லுநர்களோடு ஆலோசனை நடத்தியதாகத் தெரியவில்லை. அப்படியே செய்திருந்து காரணம் எதுவும் இல்லாவிட்டாலும் சட்டக் கமிஷன் இந்தப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யலாம்.
இருபாலருக்கும் திருமண வயதில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதில்லை. அதேசமயம், இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும் சமுதாய வளர்ச்சியை முன்னிட்டும் இருபாலருக்கும் திருமண வயதை 20 ஆக நிர்ணயிக்கலாம்.
இல்லையேல் பாலியல் கல்வி தேவையா என்ற விவாதம் முடியும் முன்னர் சிறார் மணம் என்ற நிலையின் சற்றே முன்னேறிய நிலையான மாணவ மணம் என்ற ஒன்று தோன்ற 18 வயது பரிந்துரையே போதுமானது.
- தினமணி