வேலணை வேணியன்
எல்லாப் பிறப்புகளிலும் மேலான பிறப்பு மனிதப் பிறப்பு என்பதனை எமது நாயன்மாரே எமக்கு கூறிச் சென்றார்கள். இந்த மானிடப் பிறப்பை எடுத்த நாங்கள் இறைவன் எமக்கு தந்த நல்லாசிகள் என இறைவனுக்கு நன்றி கூறி ஏத்துக் கொள்ள வேண்டியவர்களாவோம். மனிதனைப் படைத்த இறைவன் அவன் மத்தியில் இன, மத, குல பேதமின்றியே படைத்தான் என்பது பேருண்மை. இன, மத பேதங்களை உருவாக்கியவன் மனிதனே தான். பிறக்கும் போது குழந்தைகள் எல்லாம் நல்லவர்களாகவே பிறக்கின்றார்கள். அவர்களின் வளர்ப்பு பெற்றோர்களின் கரங்களிலேயே முற்றும் முழுதும் தங்கியுள்ளது.
அந்த வகையில் எம் மத்தியில் வாழ்ந்து மறைந்த ஒரு உத்தம புருஷரே புங்குடுதீவு - 09ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டு மறைந்த அ.கு.வீரசுப்பிரமணியம். இவரை அறிந்தவர்கள் அனைவரும் "வீரன்" என்றே அன்புடன் அழைப்பார்கள். அவரது பெருந்தன்மை எல்லாம் இறைபணியிலும், சமூக சேவைகளிலும் தமிழ்ப் பணிகளிலுமே காணப்பட்டது.
கொழும்பு - 13 ஷ்ரீ கதிரேசன் வீதி ஷ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறங்காவலர் பணிக்கென தன்னை அர்ப்பணித்து நின்ற பெருமைக் குரியவர் மட்டுமல்ல, அடக்கமாகத் தமிழ்ப்பணியும் செய்து நின்ற உத்தமர். ஷ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் இவர் அறங்காவலராக இருந்த காலத்திலேயே பெருவளர்ச்சி கண்டது. ஆலயத்துக்கு அவர் தன்னை அர்ப்பணித்து செய்து நின்ற பணிகள் காலம் காலமாக நினைவு கூரத்தக்கது. ஆலய பணிவளர அவர் தொழிலும் வளர்ச்சி கண்டது. இது முருகன் அருட்கொடை. இவரது வீரமைலன் மண்டபம் தனித்து திருமணங்களுக்கு மட்டுமல்லாது பல இலக்கியப் பணிகள், தமிழ்ப் பணிகள் எனப் பிறருக்கும் பலன்பட்டு நின்றது. அதே நேரத்தில் செட்டியார் தெருவில் ஷ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்துக்கு புதிய திருமண மண்டபம் கட்டிட வேலைகள் நடைபெற்று இன்று அனைத்து வேலைகளும் நிறைவடையும் தருணத்தில் இவரது உயிரைக் காலன் கவர்ந்து விட்டான். முருகன் கிருபையாக இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானபோது இவரது துணைவியார் காப்பாற்றப்பட்டு விட்டார்.
இரவது தந்தையார் அம்பலவாணர் குழந்தை வேலுவும் தாயார் சின்னத்தங்கமும் செய்த தவப் பயனே கடைசி மகனாராக வீரன் வந்து இவர்களுக்கு உதித்தார். தந்தையாரும் கொழும்பில் தொழிலதிபராக விளங்கி ஷ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோவில் நிர்வாகத்தில் நெடுங்காலம் பணியாற்றி நின்று அமரத்துவம் அடைந்து விட்டார்.
அகில இலங்கை கண்ணதாசன் மன்றத்துக்கு கடந்த 23 வருடங்கள் பல வழிகளில் துணை நின்றவை எல்லாம் என் கண்முன் இன்றும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு வீரனின் சமூகப் பணிகளை நீண்ட சரித்திரமாக எழுதலாம். பல கன்னியர்கள், இளைஞர்களுக்கு மணப் பொருத்தம் தானே பார்த்து அவற்றைத் தானே முன்னின்று செய்து வைத்தார். திருமணங்களுக்கு தனது வீரமைலன் மண்டபத்தை அவரவர்தம் பொருளாதார நிலை அறிந்து அவர்கள் தேவைகளுக்கு வழங்கி நின்றார்.
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு"
எனும் தெய்வப் புலவர் வள்ளுவப் பெருமானார் திருக்குறலுக்கு ஏற்ப வீரன் எம்மையெல்லாம் ஆராத்துயரில் மூழ்கடித்து விட்டு இறையடியை நாடிக் கொண்டார்.
இன்று செவ்வாய்க்கிழமை அவரது ஆத்ம சாந்தி பிரார்த்தனை காலை 11.30 மணி முதல் ஷ்ரீ கதிரேசன் வீதி மண்டபத்தில் இடம்பெற்று அனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜையும் இடம்பெறும் தருணத்தில் ஆறாத்துயரில் மூழ்கிநிற்கும் அவரது அருமைத் தாயார், மனைவி, மக்கள், உடன் பிறப்புகள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் தேற்றமளித்து அவனடியில் "வீரன்" ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.