அரிசியை பிரதான உணவாகப்பாவிக்கும் பெரும்பான்மையான மக்கள் வாழும் நாட்டில், விவசாயத்தையே பெரும்பாலும் நம்பிவாழும் மக்களைக் கொண்ட நாட்டில் விவசாயத்துறைக்கென்று நான்கு அமைச்சர்கள் காணப்படும் நாட்டில் விவசாயிகளின் காய்கறிகளை தொன்கணக்கில் காட்டு யானைகளுக்கு உணவாக கொட்டிக்குவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றதென்றால் எமது விவசாயிகள் எந்தளவுக்கு துர்ப்பாக்கியசாலிகளாக இருக்கிறார்கள் என்பதை நினைத்து வேதனைப்படவேண்டியிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட காய்கறிகளில் 25 தொன்கள் பழுதடைந்த நிலையில், குப்பை மேட்டில் கொட்டப்பட்டு காட்டு யானைகளுக்கு உணவாகிப்போயுள்ளது. காட்டில் கொட்டப்பட்ட மரக்கறிகளின் எடை 25 தொன்கள் என்று கூறப்படுகின்ற போதிலும் அதனை உற்பத்தி செய்த அப்பாவி விவசாயிகளின் மொத்த உழைப்பை எந்தளவுக்கு மதிப்பிடமுடியும். அதிகாலை முதல் மாலைவரையில் வெய்யிலில் காய்ந்து உருகி பின்னர் இரவு பனிக்குளிரில் கஷ்டப்பட்டு நீண்ட நாள் உழைத்த உழைப்பு ஒரு சில மணிநேரத்துக்குள் காட்டுயானைகளுக்கு உணவாகக் கொட்டப்படும்போது, பாடுபட்ட விவசாயிகளின் மனநிலை எவ்வாறாக அமைந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அப்பாவி விவசாயிகள் இந்தளவுக்குக் கஷ்டப்பட்டு உழைப்பது தமது குடும்பத்தினரின், பிள்ளைகளின் பசிப்பிணியை தீர்ப்பதற்கும், குடும்பத்தை வாழ வைப்பதற்கும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் கல்வியை பெற்றுக் கொடுப்பதற்குமாகும். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு இந்த 25 தொன் மரக்கறிகளை சந்தைப்படுத்துவதற்காக கொண்டுவந்த விவசாயிகள் எல்லோருமில்லாவிட்டாலும் பெரும்பான்மையானவர்கள் தமது குடும்பங்களின் ஜீவனோபாயத்துக்காக முழுநேர உழைப்பாக விவசாயத்தையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படிப்பார்க்கின்ற போது இந்தளவு பெரிய எண்ணிக்கை காய்கறிகளை உற்பத்தி செய்வதற்காக எத்தனை மாதங்கள் தமது காலத்தையும், உழைப்பையும் ஈடுபடுத்தியிருப்பர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. இவ்வளவு சிரமப்பட்டு உழைத்து சந்தைக்கு கொண்டு வந்த பின்னர் அவற்றை குப்பையில் கொட்டி காட்டு யானைகளுக்கு உணவாக்கப்படும் போது அந்த விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் சிதறுண்டு போவதையும் அவர்களின் இயலாமையையும் விபரிக்க முடியுமா என்பது கேள்விக் குறியாகும்.
இந்த 25 தொன் மரக்கறிகளும் இவ்வாறு குப்பையில் கொட்டப்படுவதற்கான காரணம் என்னவென்பதை கண்டறியப்பட்டபோது தெரியவந்த உண்மை வியப்பை அளிக்கின்றது. தமது விவசாய உற்பத்தியை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டபோதிலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நேரகாலத்தோடு அதனை நிறுத்து கொள்வனவு செய்து வெளிச் சந்தைக்கு அனுப்புவதில் காட்டிய அசிரத்தையின் விளைவுகளே இதுவாகும். மரக்கறி மூடைகள் வெட்டவெளியில் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக அந்த உற்பத்திகள் மழையில் நனைந்து அழுகிப் போயுள்ளன. மரக்கறி வகையென்பது அன்றாடம் விலை போகக்கூடிய சந்தை வாய்ப்பை பெற்றுள்ள உணவுப் பொருட்களாகும். அதனை சந்தைப்படுத்துவதில் தாமதப்படுத்துவதற்கு எதுவித காரணமும் கூற முடியாது. அதிகாரிகளின் அசமந்தப் போக்குகளால் அப்பாவி விவசாயிகளின் குடும்பங்கள் படும் அவலத்துக்கு என்ன பரிகாரம் கிட்டப் போகின்றது? இதனை தவறுதலானது எனச் சாட்டுக் கூறி தட்டிக்கழிக்க முடியாது. பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுக் கொடுக்க அரசு உடனடியாக காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறி வைக்கின்றோம்.
இதேவேளை, தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக பெருந்தொகையான நெல் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்வயல்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அறுவடை செய்து சூட்டுக்களத்தில் குவிக்கப்பட்டிருந்த நெல் அறுவடையும் மழையில் நனைந்து அழிந்து போயுள்ளன. இதனால் பெருந்தொகையான நெல் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக அரிசியின் விலை முன்னொரு போதுமில்லாத விதத்தில் அதிகரித்துள்ளது. விரைவில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு சாட்டுக்கூறி சமாளிக்க முற்பட்ட போதிலும், உருவாகியுள்ள நிலைமைகள் அடுத்தடுத்த வாரங்களில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் நிலைமையையே தோற்றுவித்திருக்கின்றது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமும் இழப்பீடும் பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதோடு, சந்தையில் அரிசி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாமலிருப்பதற்கான விதத்தில் மானிய உதவிகளையாவது வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.