* ஏனைய முஸ்லிம் கட்சிகள் இணங்கவில்லை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சகல முஸ்லிம் கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்பதில் உடன்பாடு கண்டுள்ள போதிலும் எக்கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் பாரிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத்தில் சகல முஸ்லிம் கட்சிகளும் நேற்று திங்கட்கிழமை சந்தித்து கிழக்கு தேர்தல் தொடர்பாக முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டன.
இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்திலேயே போட்டியிட்டு முஸ்லிம்களின் தனித்துவம் காக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், எக்கட்சியைச் சேர்ந்த முஸ்லிமுக்கும் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க தயாரெனவும் கூறியுள்ளது.
எனினும் மரச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஏனைய முஸ்லிம் கட்சிகள் உடன்பட மறுத்துள்ளன. ஒரே சின்னத்தில் போட்டியிட தாம் தயாரெனவும் ஆனால் எக்காரணம் கொண்டும் மரச் சின்னத்தில் போட்டியிட முடியாதெனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
முஸ்லிம் புத்திஜீவிகள், முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளனம் ஆகியன இக்கலந்துரையாடலுக்கான ஏற்பாட்டை செய்திருந்த நிலையில், முரண்பாடுகளுடன் இக்கூட்டம் முடிவடைந்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் சந்தித்து பேசுவதெனவும் முஸ்லிம் கட்சிகள் உடன்பட்டுள்ளன.