சென்னை டெஸ்ட் வெற்றிக்கு இந்திய வீரர்கள் ஆயத்தமாகின்றனர். கப்டன் கும்பிளே, சச்சின், தோனி உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா வந்துள்ள தென் ஆபிரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை 26 ஆம் திகதி சென்னையில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஏற்கனவே சென்னை வந்துவிட்டனர். நேற்று முன்தினம் அனில் கும்பிளே தலைமையிலான இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 3 மணிநேரம் பயிற்சி மேற்கொண்டனர்.
அணிக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த மனநல பயிற்சியாளர் பேடி அப்டன் ஒவ்வொரு வீரரையும் தனித்தனியாகச் சந்தித்து பேசினார். பின்னர் வீடியோ பயிற்சி நிபுணர் ராமகிருஷ்ணன் `ஸ்லோ மோஷன்' மூலம் படங்களைக் காண்பித்து குறைகளை சுட்டிக்காட்டினார். இதனை சேவாக், யுவராஜ் கவனமாகப் பார்த்தனர்.
இப்போட்டிக்கான அணியில் இடம்பெறாத இளம் வேகப்புயல் இஷாந்த் சர்மாவும் வீடியோ காட்சிகளை பார்த்து தனது தவறுகளை உணர்ந்துகொண்டார்.
கடைசிக் கட்டத்தில் உடல் தகுதியை நிரூபித்து சென்னை போட்டிக்கான அணியில் தங்களது இடத்தை உறுதி செய்த தோனி, ஹர்பஜனும் தீவிர பயிற்சி செய்தனர். இத் தொடரில் காயம் காரணமாக இடம்பெறாத தமிழக வீரர் முரளி கார்த்திக்கையும் மைதானத்தில் காண முடிந்தது. இவர் இடது காலில் பன்டேஜ் அணிந்தவாறு பயிற்சி நடக்கும் இடத்துக்கு மெதுவாக வந்தார்.
சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போதெல்லாம் மழை அதிகமாக விளையாடும். கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் ரசிகர்கள் கவலையடைந்தனர். இம்முறையும் சிக்கல் ஏற்படுமோ என்று அஞ்சினர். ஆனால், நேற்று முன்தினம் நல்ல வெயில் அடித்தது. இதனால், இந்திய வீரர்கள் சிரமமில்லாமல் பயிற்சி செய்தனர்.
தென் ஆபிரிக்க அணியினர் ஹோட்டல் நீச்சல் குளத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டனர். மைதானப் பராமரிப்பாளர்கள் ஆடுகளத்தை செம்மைப்படுத்துவதில் ஈடுபட்டனர். மைதானத்தில் ஈரமாக இருந்த பகுதிகள் நன்கு உலர்ந்து விட்டதால் போட்டி நடப்பதில் எவ்வித சிக்கலுமிருக்காது.
இப்போட்டி குறித்து தென் ஆபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜக் கலிஸ் கூறுகையில்;
"அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் சம அளவில் இடம்பெற்றிருப்பதால் இந்திய அணி வலுவாக உள்ளது. முன்பு சொந்த மண்ணில் மட்டும் சாதித்து வந்த இந்திய வீரர்கள் இப்போது அவுஸ்திரேலியாவிலும் வெற்றிக் கொடி நாட்டி அசத்தியுள்ளனர். எனவே, டெஸ்ட் தொடர் மிகவும் கடினமானதாக இருக்கும்" என்றார்.
தென் ஆபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் போல் ஹாரிஸ் கூறுகையில், "உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் சச்சினுக்கு எதிராக பந்துவீச ஆர்வமாக உள்ளேன்" என்றார்.