இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளிடையே நேப்பியரில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் இருவர் அடித்த சதத்தால் இங்கிலாந்து அணி மிகவும் வலுவான நிலையிலுள்ளது.
நேற்றைய தினம் 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது 2 ஆவது இனிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 416 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முன்னதாக இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்ஸில் 253 ஓட்டங்களையும் நியூஸிலாந்து அணி 168 ஓட்டங்களையும் பெற்றன.
முதல் இனிங்ஸில் 85 ஓட்டங்களை கூடுதலாகப் பெற்ற நிலையில் 2 ஆவது இனிங்ஸில் ஆடிவரும் இங்கிலாந்து அணி 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதில் அன்று ஸ்ட்ராஸ் 42 ஓட்டங்களையும் குக் 37 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
நேற்று 3 ஆம் நாள் ஆட்டத்தில் குக் மேலும் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்த நிலையில், அன்று ஸ்ட்ராஸ் மற்றும் இயன்பெல் ஆகியோர் சிறப்பாக ஆடி சதங்கள் அடித்தனர்.
இதில் ஸ்ட்ராஸ் ஆட்டமிழக்காது 173 ஓட்டங்களையும் இயன்பெல் 110 ஓட்டங்களையும் பெற்றனர். இவ்விருவரும் 4 ஆவது விக்கெட் ஜோடியாக 187 ஓட்டங்களைப் பெற்றனர்.
மேலும், பீற்றர்சன் - 34, அம்புறோஸ் ஆட்டமிழக்காது - 28, கொலிங்வூட் - 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் வெற்றோரி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.