போர்முலா -1 கார் பந்தயத்தில் ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் ஷுமேக்கர், மோட்டார் சைக்கிள் பந்தயத்திலும் தனது முத்திரையை பதித்துள்ளார்.
ஹங்கேரியில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் முதன்முறையாக பங்கேற்றார் 39 வயதாகும் ஷுமேக்கர். கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு ஹங்கேரியில் நடந்த இந்தப் பந்தயத்தில் ஹொண்டா, பயர்பிளேட் மோட்டார் சைக்கிளில் 4.5 கி.மீ. தூரம் (பன்னோனியா வளைவு சுற்றுப்போட்டி) ஓடி மூன்றாவது இடத்தைப் பிடித்தார் ஷுமேக்கர்.
இப்போட்டியில் ஜெர்மன் வீரர் மார்ட்டின் பௌவர் முதலிடத்தையும், அண்ட்ரீஸ் மெக்லாவ் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
`கார் பந்தயத்திலிருந்து மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இருப்பினும் முதல் முறையாகப் பங்கேற்றதால் போட்டி தொடங்குவதற்கு முன் மிகவும் பதற்றமாக இருந்தது. ஆசைக்காகவே இப்போட்டியில் பங்கேற்றேன். இருப்பினும் கார் பந்தயத்தில் பங்கேற்பதையே நான் விரும்புகிறேன்' என்றார் ஷுமேக்கர்.