மேற்கிந்தியா ஒரு விக்கெட்டுக்கு 29 ஓட்டம் இலங்கை - மேற்கிந்திய அணிகளிடையே கயானாவில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மிகவும் வலுவான நிலையிலுள்ளது.
2 ஆம் நாள் ஆட்டம் முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 476 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இனிங்ஸை முடித்துக்கொண்டது.
பதிலுக்கு ஆடும் மேற்கிந்திய அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இனிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்களை பெற்றிருந்தது. கப்டன் மஹேல ஜெயவர்தன 25 ஓட்டங்களுடனும் திலகரட்ன டில்ஷான் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் டில்ஷான் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 5 விக்கெட் இழப்புக்கு 277 ஆக இருந்தது.
இதேநேரம், மஹேல ஜெயவர்தன சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த பிரசன்ன ஜெயவர்தன 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பின்னர் சமிந்த வாஸ் களமிறங்கி மிகச் சிறப்பாக ஆடினார்.
இவ்வேளையில் கப்டன் மஹேல ஜெயவர்தன சதமடித்தார். இவ்விருவரும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த போது மஹேல ஜெயவர்தன மேற்கிந்திய கப்டன் கிறிஸ் கெயிலின் பந்துவீச்சில் 136 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மஹேல ஜெயவர்தனவும் சமிந்தவாஸும் 7 ஆவது விக்கெட் ஜோடியாக 126 ஓட்டங்களைப் பெற்று அணியை வலுவானதொரு நிலைக்கு கொண்டு சென்றனர். அப்போது ஓட்ட எண்ணிக்கை 457 ஆக இருந்தது.
இந்த நிலையில் சமிந்தவாஸ் அரைச்சதம் அடித்திருந்த போது இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 476 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், அணி தனது முதல் இனிங்ஸை முடித்துக்கொண்டது. சமிந்தவாஸ் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதையடுத்து, துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்திய அணி தனது முதல் விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கு இழந்தது. கப்டன் கிறிஸ்கெயில் ஓட்டமெதுவும் எடுக்காது சமிந்த வாஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
2 ஆம் நாள் போட்டி முடிவடைந்த போது மேற்கிந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ஓட்டங்களைப் பெற்றது. சர்வான் 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.