வேல்ராசன்
(நேற்றைய தொடர்ச்சி) விடலைப் பருவத்தில், பாலியல் உறுப்புகள் முதிர்ச்சி அடையும் வயதில், செக்ஸ் என்பது ஒரு புகைமூட்டம் போல மர்மமாய்க் கவிந்திருக்கும் சூழல் இன்று இல்லை. பாலியல் உணர்வில் கட்டுப்பெட்டித் தனம் கொண்டிருந்த இந்திய மனநிலையின் மடையை இணையத்தின் வெள்ளம் உடைத்திருக்கிறது. திருமணத்துக்கு முந்தைய உறவு மாணவர்களிடம் வேகமாக வளர்ந்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்குத் தீர்வாக, மாணவர்களுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பல கல்வியலாளர்கள் முன்வைக்கின்றனர்.
எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கு ஆணுறை போடுங்கள் என்பது போலத்தான் இதுவும் இதனால் பாலியல் கல்வி வேண்டாம். என்பதல்ல ஆனால் பிரச்சினைக்கு அது தீர்வல்ல சொல்லப் போனால் மாணவப் பருவத்தில்தான் கட்டுப்பாடுகள் மிக அவசியம். அறியாக் குழந்தை கண்டதையும் வாயில் போடும்போது, சிறிது அடித்துத் திருத்துவதில் என்ன தவறு இருக்கிறது?
வளரும் பருவத்தை வலிமையாக்கும் கட்டுப்பாடு
அப்படி ஒரு கட்டுப்பாட்டை, அதாவது கல்லூரி வளாகத்தில் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்று அண்ணா பல்கலைக் கழகத்தில் அறிமுகப்படுத்திய போது, பத்திரிகைகளும் முற்போக்கு முகாமும் ஆவேசத்துடன் அதனைக் கண்டித்தன. இது சுதந்திரத்துக்கும் தனிநபர் உரிமைக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று வாதிட்டார்கள். அமெரிக்க மாணவர்களிடையே வன்முறையை நிறுத்துவதற்கு துப்பாக்கி வியாபாரத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, ஜனநாயக உரிமையின் பெயரால்தான் அது அங்கே நிராகரிக்கப்பட்டது.
இந்த வாதங்களில் ஒரு வெங்காய `உரிமை'யும் உண்மையில் இல்லையென்பது ஒருபுறமிருக்க, இந்த உலகமே கட்டுப்பாட்டில்தானே இயங்கி வருகிறது? ஒரு தொழிலாளிக்கு சீருடை அணிய வேண்டும், குறித்த நேரத்திற்கு வேலைக்கு வர வேண்டும், குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில்தான் மதிய உணவு அருந்த வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இல்லையா? பல அலுவலகங்களிலும் செல்பேசியில் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்களே, இதனால் என்ன குடியா முழுகிப் போய் விட்டது? விதியின் பெயராலும், நடைமுறை ரீதியிலும் உழைக்கும் வர்க்கத்தின் மீது ஆயிரம் கட்டுப்பாடுகள் வைத்திருக்கும் முதலாளித்துவம், சமூகத்தில் சீரழிவுக் கலாசாரத்தைப் பரப்புவதற்கு மட்டும் தனக்கு சுதந்திரத்தைக் கோருகிறது.
வீட்டிலும், பள்ளியிலும் கட்டுப்பாடு இல்லாத மாணவர்கள்தான் வன்முறை எண்ணம் கொண்டவர்களாகத் தலையெடுக்கின்றனர். விடலைப்பருவ உளவியலின் காரணமாகப் பெற்றோருடனும் சூழலோடும் முரண்படுகிறார்கள். மாணவர்களின் உடல் மாற்றத்திற்கேற்ப நடக்கும் இந்த உளவியல் வெளிப்பாடுகளை, மேற் கண்ட நச்சுக்கலாசாரம் ஊதிப் பெருக்குகிறது. இதனால் தனிமைப்படும் மாணவர்களைத்தான் வன்முறை எண்ணம் தின்று சீரளிக்கிறது. மாணவர்களை உடலுழைப்பிலும், விளையாட்டிலும் ஈடுபடுத்துவதுதான் இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்குரிய வழி. ஆனால் இந்தச் சூழல் நமது கல்வி முறையிலோ, பண்பாட்டிலோ இல்லை.
வளரும் சிறுவருக்கு உடலுழைப்பு அவசியம்!
இளம் மாணவர்களின் வயதினையொத்த சிறார்கள், நாடெங்கிலும் இலட்சக்கணக்கில் உதிரித் தொழில்களில் ஈடுபடுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் உழைப்பைத் தடைசெய்ய வேண்டும் என இவர்களது வாழ்க்கை குறித்து கவலைப்படுவது தொண்டு நிறுவனங்களின் நாகரிகப் பணியாக இருக்கிறது. படிக்க வேண்டிய வயதில் இவர்களை இவ் வேலைகளுக்கு அனுப்பியது பெற்றோர்களின் குற்றமென நிறுவனங்கள் சாதிக்கின்றன. உண்மையில் பணமில்லாதவனுக்கு எதுவுமில்லை என இந்த சமூக அமைப்பை மாற்றிய அரசும், ஆளும் வர்க்கங்களும் தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
இது ஒரு புறமிருக்க, இக் குழந்தைகள் விடலைப் பருவச் சேட்டைகளையோ, வன்முறைகளையோ செய்வதில்லை. தேநீர்க்கடைகளில் குவளை கழுவும் சிறுவனோ, ஓட்டலில் மேசை துடைக்கும் சிறுவனோ இத்தகைய வன்முறை வெறிக்குப் பலியாவதில்லை. சமூகத்துடன் யதார்த்தமான உறவில் இருக்கும் சிறுவர்கள், பண்பையும் முதிர்ச்சியையும் தான் பழகிக் கொள்கின்றனர். வயதுக்கு மீறிய அதீத உழைப்பு தான், இவர்களைப் பின்னாளில் உதிரிக் குணம் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது அப்போதும் கூட இவர்கள் சமூகத்தின் மீது வன்முறை செலுத்தும் மேட்டுக்குடிப் பொறுக்கிகளைப் போல மாறுவதில்லை.
ஆம், மாணவர்களை குறிப்பிட்ட அளவில் உடலுழைப்பில் ஈடுபடுத்துவதன் மூலமே, அவர்களது பருவப் பிரச்சினைகளைக் கடந்து ஒரு சமூக மனிதனாக வளர்க்க முடியும். கோடை விடுமுறையில் சிறுவர்களை சிறு பட்டறைகளுக்கோ, இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கோ, கட்டிட வேலைக்கோ, விவசாய வேலைக்கோ அனுப்பினால் பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்களாகப் புடம் போடப்பட்டு வருவார்கள். உடலுழைப்புடன் கூடிய சுயமதிப்புடன் சமூகத்தை பற்றி அறிந்து கொள்வார்கள். கட்டுப்பாட்டுடன் பணியாற்றுவதன் மூலமே இச் சமூகத்தின் அங்கத்தினன் என்ற தகுதியைப் பெறமுடியும் என்பதைத் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து புரிந்து கொள்வார்கள்.
ஆனால் நடுத்தர வர்க்கமோ தங்களது செல்வங்களை டென்லீசுக்கு, கணினிப் பயிற்சிக்கும் பாட்டு வகுப்பிற்கும் அனுப்பி நம்பர் 1 ஆக்குவதற்கு மட்டுமே மனப்பால் குடிக்கிறது. இது மாணவர்களுக்கு தனிநபர் வாதத்தையும் சுயநலத்தையும் காரிய வாதத்தையும் கற்றுத் தருகின்றதே ஒழிய, நல்ல குடிமகனாக்குவதில்லை. மேலும் கடுமையான போட்டிகள் நிறைந்த இக்காலகட்டத்தில், தோல்வி குழந்தைகள் மனதை ரணமாக்குகிறது. விஜய் டி.வி.யின் பாட்டுப் போட்டியில் தோல்வியுற்றதால் வெளியேற்றப்பட்ட குழந்தைகள் அழுவதைப் படம் பிடித்துக் காண்பிப்பதை இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.
வளரும் குழந்தைகளுக்கு கலைத் திறமைகளை கற்றுத்தருவதை விட, அவர்களை மக்களின் பால் பற்று கொண்ட நன்மக்களாக மாற்றுவதே அத்தியாவசியமானது. உண்மையில் அவர்களது வன்முறை எண்ணத்தை மடைமாற்றும் சூட்சுமம் இதில் தான் அடங்கியிருக்கிறது. ஆனால் நடுத்தர வர்க்கக் குழந்தைகளுக்கு, உடலுழைப்பு அறவே கிடையாது. எல்லா வேலைகளுக்கும் இயந்திரங்கள் இருக்கின்றன இது போக வேலையாட்கள்! பெற்றோர்கள் பணியாட்களை மிரட்டுவது போல பிள்ளைகளும் செய்கிறார்கள். குறைந்த பட்சம் தன்னைப் பராமரித்துக் கொள்வதைக் கூட இக்குழந்தைகள் செய்வதில்லை. பெற்றோரும் விரும்புவதில்லை. தான் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதற்கோ, உடுத்தும் உடையை துவைப்பதற்கோ பழகிக் கொள்ளாத ஒரு சிறுவன் தான், இந்த உலகம் தனக்காகப் பணிசெய்யப் படைக்கப்பட்டிருப்பதாக எண்ணுகிறான். இந்த அணுகுமுறையில் நெருடல் வரும் போது, தவிர்க்கவியலாமல் வன்முறையின் பக்கம் நகர்கின்றான்.
அருகும் விளையாட்டு அரிக்கும் வீடியோ விளையாட்டு!
உடலுழைப்புக்கு அடுத்த படியாக குழந்தைகளுக்குத் தேவைப்படுவது வியர்க்க விறுவிறுக்க விளையாடப்படும் விளையாட்டு. மனம் விரும்பிச் செய்யப்படும் இவ்வுழைப்பில் தான் அவர்கள் வளருவதற்கேற்ற வலிமை உடலுக்கும், உள்ளத்திற்கும் கிடைக்கிறது. குழுரீதியான உணர்வு பெறுவதற்கும், சண்டையுடன் கூடிய நட்பு அரும்புவதற்கும், வெற்றி தோல்விகளையெல்லாம் சகஜமாக எடுத்துக்கொள்வதற்கும், பாடங்கள் கற்பதற்கேற்ற உற்சாகத்தை பெறுவதற்கும் விளையாட்டு அவசியமாகிறது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் துருத்தி நிற்கும் நகரங்களில், மைதானங்கள் காணக் கிடைப்பதில்லை. பல்லாயிரம் ரூபாய்களைக் கட்டணங்களாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலும் விளையாட்டுத் திடல்கள் போதுமானதாக இல்லை. மாணவர்களும் இந்திய அணி ஆடும் சமயங்களில் மட்டும் கிரிக்கெட் ஆடுவதைத் தவிர விளையாட்டில் விருப்பத்துடன் ஈடுபடுவதில்லை.
இந்த இடத்தை மாணவர்களால் பரவலாக விளையாடப்படும் வீடியோ விளையாட்டு எடுத்துக் கொள்கிறது. இணையத்தள மையங்களில் பாலுறவு விடயங்களுக்கு அடுத்தபடியாக மாணவர்கள் விரும்புவது இந்த எந்திர விளையாட்டைத்தான். வியர்வைத் துளிகளுக்கு வேலை கொடுக்காமல் மூளையை அரிக்கும் இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடும்போது மாணவர்கள் அதற்கு அடிமையாகிறார்கள்.
இந்தப் போதையிலிருந்து மீள்வது சிரமம் என்பதோடு இது ஏற்படுத்தும் உளவியல் கோளாறுகள் அதிகம். கற்பனையான உலகில் கற்பனையான வெற்றிக்காக மணிக்கணக்கில் ஆடும் மாணவர்கள் அதீத உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். இந்த உணர்ச்சிச் சமநிலைச் சீர்குலைவு வன்முறைக்குப் பொருத்தமான சமன்பாட்டைக் கொண்டிருக்கிறது.
விளையாடி முடித்ததும் ஏற்படும் சோர்வு நிஜ உலகோடு கொண்டுள்ள உறவைச் சோர்வுக்குள்ளாக்குகிறது. இந்தச் சோர்விலிருந்து வாழ்வின் பிற அம்சங்கள் மீது அளவு கடந்த சோம்பல் உருப்பெறும். கணிப்பொறி விளையாட்டின் மீது ஒன்றி பரவசம் அதிகரிப்பதற்கேற்ப மனித உறவுகளின் மீது நெருடல் அதிகரிக்கிறது. பிரச்சினை வரும்போது அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டிய மூளையின் தன்மை, நேரெதிராக மாற்றப்படுகிறது. வீடியோ விளையாட்டின் வேகம் விரிவடைவதற்கேற்ப நிஜவாழ்வின் பிரச்சினைகளை பரிசீலிக்கும் பொறுமை சுருங்குகிறது.
விதவிதமான உணவுவகை எல்லைமீறும் உணர்ச்சிகள்
இப்படி உடலுழைப்பிலும், விளையாட்டிலும் அந்நியப்பட்டுள்ள மாணவர்கள் விரும்பும் மற்றுமொரு விடயம் நவீன உணவு வகைகள். பீஸ்ஸா, பர்கர், விதவிதமான சொக்லேற், பிஸ்கட், ஐஸ்கிறீம் வகைகள் பெட்டிக்கடை தொட்டு சரம்சரமாகப் பல வண்ணங்களில் தொங்கும் நொறுக்குத்தீனி பக்கற்றுகள் உணவகங்களில் கிடைக்கும் பலநாட்டுத் துரித உணவு வகைகள் இவையெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்கள் போல குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்து விட்டன.
குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது சிறார்கள் அடம்பிடித்துச் சண்டைபோடுவது இவ்வுணவு வகைகளுக்குத்தான். வீட்டுச் சமையல் என்பதே இப்படி டப்பா வகை உணவுப் பிரிவுக்கு வேகமாக மாறி வருகிறது. இதுபற்றி பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் மருத்துவர்களும் கவலைப்படாமல் இல்லை. ஆனால், அந்தக் கவலை குழந்தைகள் குண்டாவது குறித்த பிரச்சினையாக மட்டுமே நின்று விடுகிறது.
உண்மையில், இந்த குண்டுப் பிரச்சினை இரண்டாம் பட்சமானதுதான். நவீன உணவு வகைகளில் சர்க்கரையும் உப்பும் கொழுப்பும் மிக அதிகம் . ஒரு சிறுவனது உடலில் இம்மூன்றும் திடீரென்று அதிகரிக்கும் போது அது மூளையின் செயற்பாட்டைப் பாதிக்கிறது. இப்படித்தொடர்ந்து தின்று தீர்க்கும் சிறுவர்கள் அவற்றைச் செலவழிக்கும் உடலுழைப்பு ஏதும் இல்லாததால் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக மாறுகிறார்கள்.
எல்லாவகை உணர்ச்சிகளும் எல்லை மீறும்போது அதன் இறுதிநிலை வன்முறையில் தான் முடியும். இதுபோக உடல் பருமனாவதால் சோம்பேறிகளாகவும் மந்தகதிக் குழந்தைகளாகவும் நாட்களைத் தள்ளுகிறார்கள். ஏற்கனவே, அவர்களது வாழ்க்கைச் சூழல் இப்படித்தான் உள்ளது எனும்போது டப்பா வகை உணவுகள் அந்தச் சூழலை வீரியமாக்குகின்றன. பெற்றோர்களே இந்த நவீன உணவு வகைகளுக்கு அடிமையாகும் போது குழந்தைகளைக் கடைத்தேற்றுவதற்கு வழியேதுமில்லை.
அரசு பள்ளி நன்மைகள் தனியார் பள்ளி தீமைகள்
இந்த நொறுக்குத் தீனிகளின் பெயர்கள் கூடத் தெரியாமல் சத்துணவிற்காகவே குழந்தைகள் கோடிக்கணக்கில் அரசு பள்ளிகளுக்கு வருவதும் இந்நாட்டில்தான். இன்று அரசு பள்ளிகள் முற்றிலும் ஏழைகளுக்கு மட்டுமானவையாக மாறி விட்டன. நகரங்களைப் பொறுத்தவரை சென்ற தலைமுறைப் பெற்றோர்களில் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளி - அரசுக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அப்போது தனியார் பள்ளிகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருந்தன.
தொடரும்