Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 26, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
சூதாட்டம் போன்று போரை நடத்தும் அரசு
[26 - March - 2008] [Font Size - A - A - A]
வ.திருநாவுக்கரசு

இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் சபைகளின் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம் அண்மையில் இடம்பெற்ற போது இலங்கை பொருளியல் சங்கத்தலைவர் பேராசிரியர் வ.டி.வி.த.எஸ். இந்திரரத்ன எடுத்துக் காட்டியிருந்த சில பாரதூரமான விடயங்கள் அரசினால் அலட்சியம் செய்யக் கூடியவையல்ல. அதாவது, நாட்டின் பொருளாதார நிலைமைகள் மிகுந்த கவலைக்குரிய கட்டத்திற்குச் சென்றுள்ளதாகவும் 50% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 33% மக்கள் முற்றிலும் வறுமையில் வாடிக்கொண்டிருப்பதாகவும் இந்திரரத்தன குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்த மக்கள் பிரிவினரைப் பொறுத்தவரை ஆள்வீத வருமானம் 250 அமெரிக்க டொலரிலும் குறைவானதாகவே காணப்படுவதாக இந்திரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இலங்கையில் ஆள்வீத வருமானம் 1,350 அமெரிக்க டொலரென மத்திய வங்கி வட்டாரங்களால் கூறப்படுவது முற்றிலும் தவறானதென்பது கண்கூடு. மறுபுறத்தில் 1,350 அமெரிக்க டொலர் என்பது உண்மையான புள்ளி விபரமென்றாலும் கூட வாழ்க்கைச் செலவு விஷம்போல் உயர்ந்த வண்ணமுள்ள நிலையில் அது கூட இன்று வயிற்றைக் கழுவுவதற்கு போதுமானதாயில்லை என்பது தான் நிதர்சனமாகும்.

வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிரான யுத்தம் பின்பு

வாழ்க்கைச் செலவு உயர்வுக்கெதிரான யுத்தம் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் முடிவடைந்த பின் முடுக்கிவிடப்படுமென அரசதரப்பினரால் கூறப்படுகிறது. மக்கள் இன்று திணறித்திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அளவுக்கு வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது. பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தால் வெற்றியீட்டுவதற்காக பெரும்பான்மையான சிங்கள மக்கள் வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி பொறுமை காக்க தயாராகவுள்ளரென பிரசாரம் செய்யப்படுகிறது.

உண்மையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் இராணுவத் தீர்வில் நம்பிக்கை வைத்து இராணுவத் தீர்வுதான் முடிந்த முடிவு என எண்ணிச் செயற்படுவது கண்மூடித்தனமான செயற்பாடாகும். 25 வருட காலமாக வெல்ல முடியாமல் நடத்தியிருந்ததும் நாட்டை சின்னாபின்னமாக்கியுள்ளதுமான யுத்தத்தை நிறுத்துவதே, வாழ்க்கைச் செலவுக்கெதிரான யுத்தத்தின் ஆரம்பமாயிருக்க வேண்டும். நிச்சயமாக, இன்றைய யுத்தத்தினை ஒரு சூதாட்டம்போல் நடத்திக் கொண்டிருப்பது ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் செய்ய வேண்டியதொன்றல்ல.

தொடரும் யுத்தம் காரணமாக, அதற்கு இறைக்கும் கட்டுப்பாடற்ற பணத்தொகை காரணமாக, அளவுக்கதிகமாக நாணயத்தாள்கள் அச்சிட்டு வெளியிடுதல் காரணமாக, இயற்கையாகவே பண வீக்கம் உயர்ந்த வண்ணமுள்ளது. அதாவது, ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து செல்கிறது. 1997 இல் கிழக்கு ஆசியாவில் குறிப்பாக தாய்லாந்தில் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்து அங்கே மக்கள் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு முகம் கொடுத்து பெரிதும் அவலப்பட்டனர். மலேசியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளும் பாதிக்கப்பட்டவாயினும் அந்தந்த நாடுகளில் நிலைமை சிறிது காலத்தில் ஸ்திரமடைந்தது. ஆனால் இலங்கையின் பொருளாதார மற்றும் நாணய வீழ்ச்சி நிலை இன்று தொடர்கதையாயுள்ளது.

பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் யாது?

"அதிகப்பெரும்பான்மையான மக்கள் உயர்ந்தவண்ணமுள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் தான் இந்த நாட்டின் அநேகமான பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமென தெரிந்தும், அப்பயங்கரவாதத்தைத் தோற்கடித்தே தீர வேண்டுமெனத் தமது விருப்பத்தினை வெளிப்படுத்தி வருகின்றனராயினும், அவர்கள் ஓரளவேனும் நிவாரணத்தையும் எதிர்பார்க்கின்றனர். வாழ்க்கைச் செலவு உயர்ந்து செல்வதற்கு பரிதாரமாக அரசாங்கம் வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கத்தவறினால், மக்களின் வெறுப்பு மேலோங்கி விடும். அரச உயர் மட்டத்தினரின் பாதுகாப்புக்கென அரச வருமானம் விரயம் செய்யப்படுவது, மோசடி, ஊழல்கள், டாம்பீகம் மற்றும் ஒழுங்கீனங்கள் யாவற்றையும் மக்கள் கண்ணுற்று வருகின்றனர்." இவ்வாறு, 21.03.2008 "டெயிலி மிரர்" ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. அது நிச்சயமாக மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய காரியமாகும். அதேநேரத்தில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் தான் இந்த நாட்டில் அநேகமான அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் காரணம் எனும் கருத்தை முன்வைப்பது மக்களுக்கு கொடுக்க வேண்டிய சரியான விளக்கமாயிருக்க முடியாது. ஏனெனில், நீண்ட கால அரச பயங்கரவாதமும் அதற்குத் தூபமிட்ட சிங்கள பேரின வாதமும் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் பயங்கரவாதத்தையும் தோற்றுவித்தன என்பதை யாரும் மறைத்துவிட முடியாது. 3 தசாப்தங்களாக தமிழ் மக்கள் தமது அரசியல், பொருளாதார உரிமைகளுக்காக வன்முறையின்றி போராடி, தொடர்ச்சியாக நட்டாற்றில் விடப்பட்டது மட்டுமல்லாமல், படைபலம் கொண்டு அடக்கப்பட்டதன் காரணமாகவே தமிழர் தரப்பிலான ஆயுதப் போராட்டம் தலைதூக்கியதும் அதன் மூலம் விடுதலைப் புலிகள் தடம் பதித்துக் கொண்டதேதான் வரலாறு. அதனை விடுத்து, அதிலிருந்துதான் இனப்பிரச்சினையின் வரலாறு ஆரம்பமான தென்றோ விடுதலைப் புலிகள் தான் நாட்டின் அநேகமான பிரச்சினைக்கும் அடிப்படையான காரணம் என்றோ கூறுவது மிகத்தவறாகும். இது விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்தும் விடயமோ, அல்லது அவர்கட்கு வக்காலத்து வாங்கும் விடயமோ அல்லது தேறாத உண்மையில் முதலாளித்துவ கட்சிகள், ஐ.தே.க.வும்., ஸ்ரீ.ல.சு.க.வும் 1950கள் முதல் பதவியைக் கைப் பற்பற்றுவதற்கும் தக்கவைப்பதற்கும் ஏட்டிக்குப்போட்டியாக, குரோத விரோதமாகச் செயற்பட்டு, இனப்பிரச்சனையை பகடைக்காய்களாகப் பாவித்து, முதலாளித்துவ ஜனநாயகத்தைத்தானும் பேண முடியாமல் நாட்டைப் போட்டுடைத்துவிட்டு தமிழ் மக்கள் மீது யுத்தமொன்றினை திணித்துவிட்ட வரலாறே எம்முன் உள்ளது.

புஷ்ஷை அடியொற்றிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் கொடியது

அதனை விடுத்து பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் (War on Terror) என அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஷ் புஷ் குறிப்பாக ஈராக்கில் கடந்த 5 வருடங்களாக நடத்திவரும் படு பயங்கரமான யுத்தத்தை அடியொற்றிச் செயற்பட உலகில் யாராவது நினைத்தால் அது மடைமையிலும் மடைமை. அந்த யுத்தத்துக்குள் 503.87 பில்லியன் அமெரிக்க டொலர்பணம் (503,878, 883, 763) இறைக்கப்பட்டுள்ளனதென்றால் 1,189,173 ஈராக்கியர்கள் பொசுக்கப்பட்டுள்ளனர் என்றால் புஷ் புரிந்த அட்டூழியம் எவ்வளவு என்பது இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாயுள்ளது. சதாம் ஹுசெயின் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு திட்டவட்டமான ஆதாரம் இல்லை என அன்று பிரதம பரிசோதகர் ஹான்ஸ் பீனிக்ஸ் திட்டவட்டமாக அறிவித்ததை ஏற்றுக்கொள்ளாமல், ஐ.நா.பாதுகாப்புச் சபையில் நம்புதல் பெறாமலே புஷ் ஈராக்கை 2003 இல் ஆத்திரமடைந்தவர் இன்று புஷ்ஷுக்கு எதிராக தொடங்கியுள்ள ஆர்ப்பாட்டங்கள் அவர் எதிர்வரும் ஜனவரியில் பதவியிறங்க முன் உச்சக்கட்டத்தை அடைந்தால் அவர் குற்றவியல் நீதிமன்றத்தைச் சந்திக்கும் நிலைமையும் தோன்றலாம். மேலும் முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளெயர் புஷ்ஷின் நிழலாய் நின்று செயற்பட்டதையிட்டு, "பிரித்தானியாவின் தொழிற்கட்சிப் பிரதமர் ஒருவர் இத்தகைய நெறியற்ற கும்பலொன்றோடு இணைந்து கொண்டதையிட்டு நான் கடுமையாக கலக்கமடைந்துவிட்டேன்" என முன்னாள் தொழிற்கட்சி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் டல்யெல் என்பவர் தெரிவித்திருந்தார். மற்றும் முன்னாள் ஜனாதிபதி கிளின்ரன் நிர்வாகத்தில் இராஜாங்கச் செயலாளராயிருந்த டேலீன் ஓல் பிறயிட், மற்றும் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலாளர் றிச்சட் ஆமிற்றேஜ் ஆகியோரும், புஷ் நிர்வாகம் அமெரிக்க மக்கள் மத்தியில் ஏற்படுத்திய பயப்பிராந்தியையும், பயப் பீதியையும் ஏற்றுமதி செய்யும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருப்பதையும் கேவலமானதென வர்ணித்துள்ளதையும் காண முடிகிறது. இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு என்ற நிலைப்பாட்டிலிருந்து ராஜபக்ஷ அரசாங்கம் இறங்கி உருப்படியான அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளுக்கும் வழிசமைக்க வேண்டும். தாம் தற்காப்புத் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கின்றதே தவிர, வலிந்து தாக்குதல் நடவடிக்கைகளில் இன்னும் புலிகள் தரப்பிலிருந்து அண்மையில் வெளியாகி அறிக்கைகளை அலட்சியப்படுத்துவதோ, புறந்தள்ளி விடுவதோ நாட்டுக்கும் எதுவித நன்மையைப் பயக்கப்போவதில்லை. மாறாக, மேலும் உயிர், உடைமை அழிவுகளும், பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டு, ஒட்டுமொத்தமாக மக்கள் மீது மென்மேலும் வாழ்க்கைச் செலவுச் சுமைகளும் ஆக்கிரமித்த வண்ணமிருக்கும். ஆக தென்னிலங்கை யுத்த விரும்பிகள் பிரிவினர் கூட பொறுத்தது போதும் என்று கூறும் நிலைமை உருவாகலாம்.

எதிர்வரும் இரண்டொரு வருடங்கள் தேர்தல் காலங்களாக வரவுள்ள நிலையில் அரசாங்கம் இனப்பிரச்சினையை மேலும் இழுத்தடித்து அடுத்துவரும் தேர்தல் பிரசாரத்துக்கான பிரச்சினையாக தேக்கி வைப்பதற்கு முற்பட்டால் அது நாட்டைக் கட்டியெழுப்புவதற்குரிய கைங்கரியமல்ல என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.

Email this page Your Opinion Print this page
சூதாட்டம் போன்று போரை நடத்தும் அரசு
நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com