இலங்கையில் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்று இந்திய அரசாங்கம் கடந்த வாரம் திரும்பவும் கூறியிருக்கிறது. ஏற்கனவே, நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் இச்செய்தி கடந்த வாரம் இரு மார்க்கங்களின் மூலமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை நெருக்கடியை இந்தியா கையாளுகின்ற முறை குறித்து தனக்கிருக்கும் கவலையை வெளிக்காட்டி தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும் அண்மையில் கடிதமொன்றை எழுதியிருந்தார். இதற்கு கடந்தவாரம் பதிலளித்திருக்கும் பிரதமர் கலாநிதி சிங் ஐக்கிய இலங்கை வரையறைக்குள் சகல சமூகங்களினாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இணக்கத் தீர்வொன்றை பேச்சுவார்த்தை மூலமாக அமைதி வழியில் காண்பதே இனநெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உகந்த மார்க்கமாகும் என்று குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, இந்திய பாராளுமன்றத்துக்கு பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பித்திருக்கும் வருடாந்த அறிக்கையில் `இலங்கை இனநெருக்கடிக்கு இராணுவத் தீர்வு கிடையாது என்பதே எமது உறுதியான நம்பிக்கையாகும். சகல சமூகங்களினதும் குறிப்பாக சிறுபான்மையினங்களின் பிரச்சினைகளை ஐக்கிய இலங்கை வரையறைக்குள் தீர்த்து வைக்கக் கூடிய அரசியல் மற்றும் அரசியலமைப்பு வழிவகைகளே அவசியமானதாகும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இராணுவத் தீர்வு சாத்தியமானதல்ல என்று சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகள் வலியுறுத்துவதைப் போன்றே இந்தியாவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்தச் செய்தி எத்தரப்பினரை இலக்காகக் கொண்டு சொல்லப்படுகிறதோ அத்தரப்பினர் அதை பொருட்படுத்துவதற்கான எந்தவித அறிகுறியையும் காணக்கூடியதாக இல்லை. மாறாக, இனநெருக்கடிக்கு இராணுவத் தீர்வைக் கண்டுவிடுவது சாத்தியம் என்ற நம்பிக்கையை சிங்களமக்களுக்கு ஊட்டி, முற்றுமுழுதான போருக்கே தென்னிலங்கை அரசியல் அரங்கு தயார்படுத்தப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்று திரும்பத் திரும்பக் கூறுகின்ற சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளினதும் இந்தியாவினதும் அணுகுமுறைகள் மறுபுறத்தில், இலங்கை அரசாங்கம் இராணுவத் தீர்வில் கூடுதல் நாட்டம் காட்டுவதற்கே ஊக்கமளிப்பவையாக அமைந்திருக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை அதன் கடந்த பல வருடகால அணுகுமுறைகள் தென்னிலங்கையில் இருக்கின்ற பேரினவாத சக்திகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி, சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுக்க முடியாத சூழ்நிலையைத் தோற்றுவிக்க உதவினவே தவிர, அரசியல் தீர்வை வலியுறுத்தி நிற்கும் சமாதான விரும்பிச் சக்திகளை வலுப்படுத்தவில்லை என்பதை இந்திய அவதானிகள் புரிந்து கொள்வது அவசியம். சுதந்திர இலங்கையின் சரித்திரத்திலே முன்னென்றுமில்லாத வகையிலான கடும் போக்கு சிங்கள மேலாதிக்க உணர்வு கொண்ட ஒரு அரசாங்கம் தற்போது பதவியில் இருக்கிறது. அந்த அரசாங்கம் சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசையையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத சக்திகளை ஊட்டிவளர்த்துக் கொண்டிருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்றும் அரசியல் தீர்வே அவசியம் என்றும் போதனை செய்து விடுக்கப்படும் அறிக்கைகள் மூலமாக இந்தியாவினாலோ அல்லது வேறு எந்தவொரு வல்லாதிக்க நாட்டினாலோ இலங்கையின் இன்றைய துரதிர்ஷ்டவசமான நிகழ்வுப் போக்குகளில் மாற்றமெதையும் செய்ய முடியாது என்பது எமது உறுதியான அபிப்பிராயம்.
இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் நிலை கொண்டிருந்த 1980 களின் இறுதிப்பகுதிக்குப் பின்னரான காலக்கட்டத்தில் இடம்பெற்ற மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களையடுத்து இலங்கைத் தமிழர் தரப்பிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகளில் ஏற்பட்டிருந்த கசப்பு நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து புதியதொரு அத்தியாயத்தைத் திறப்பதற்கு வாய்ப்புக் கிடைக்காதா என்பதே தமிழ் மக்களின் ஏக்கமாக இருக்கிறது. போரை முழு மூச்சில் முன்னெடுக்க வேண்டுமென்று குரலெழுப்பும் தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கு உற்சாகத்தைத் தரக் கூடியதாக அமைந்த அண்மைய பல வருடகால இந்திய அணுகுமுறை தமிழ் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தங்களுக்கு இடையிலான வழமையான அரசியல் குரோதங்களைக் கைவிட்டு ஒன்று பட்டுக் குரலெழுப்பாதவரை மத்திய அரசாங்கம் இலங்கை நெருக்கடியில் ஆரோக்கியமான நிலைப்பாட்டை எடுக்கப் போவதில்லை. உண்மையில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை நெருக்கடி தொடர்பிலான அதன் தற்போதைய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றத்தைச் செய்யாவிட்டால் இலங்கையில் போரை நிறுத்துவதற்கு எந்தவிதமான உருப்படியான பங்களிப்பையும் செய்வதற்கில்லை.