மொஸ்கோ:நேட்டோ அமைப்பில் உக்ரைன் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகள் இணைவது தொடர்பில் ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டிமித்ரி மித்விடேவ் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மற்றும் ஜோர்ஜியா ஆகியவை நேட்டோவில் இணைவதற்கான சாத்தியங்கள் ரஷ்யாவுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள மித்விடேவ் இது ஐரோப்பாவின் பாதுகாப்பை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றெனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பிராந்தியத்திற்குள் உள்ளடக்கப்படாத இராணுவ அமைப்பொன்று தனது நாட்டு எல்லையை நெருங்குவது தொடர்பில் எந்தவொரு நாடும் மகிழ்ச்சியடையாதெனவும் மித்விடேவ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரிட்டனுடன் ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மித்விடேவ் முழு அளவிலான ஒத்துழைப்பை மீளவும் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை தான் ஆரம்பித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அபார வெற்றி பெற்ற மித்விடேவ் விளாடிமின் புட்டினுக்கு அடுத்ததாக ரஷ்ய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் விவகாரம் தொடர்பில் ஏப்ரல் முற்பகுதியில் நடைபெறவுள்ள நேட்டோவின் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.