*அமெ.துணை ஜனாதிபதி குற்றச்சாட்டு
ஜெருசலேம் : மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சிகளை ஈரான் மற்றும் சிரியாவுடன் இணைந்து பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் மேற்கொள்வதாக அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய கிழக்கிற்கான சுற்றுப் பயணத்தின் முடிவில் இஸ்ரேலியப் பிரதமர் எஃகுட் ஒல்மேட்டுடன் நடத்திய சந்திப்பின் போதே செனி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீன தலைவர்களை சந்தித்து செனி அப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இரு தரப்பும் விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் குழப்புவதற்கான முயற்சிகளுக்கு ஹமாஸ் இயக்கத்திற்கு ஈரானும் சிரியாவும் ஆதரவு வழங்குகிறது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக செனி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்குமென செனி முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கிற்கான விஜயத்தை முடித்துக் கொண்ட செனி நேற்று முன்தினம் மாலை ஈராக் மற்றும் ஈரான் விவகாரங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக துருக்கிக்கு பயணமானார். செனியின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்கியுள்ள கடைசி விஜயம் துருக்கிக்கானதாகும்.
இன்னும் சில வாரங்களில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸும் மத்திய கிழக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.