*சாரதி இராணுவப் பொலிஸாரால் தடுத்துவைப்பு
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் பொதுமகனொருவரை மோதிக்கொன்ற இராணவ கவச வாகனம் ஐந்து லட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்ட அதேநேரம், கவசவாகனச் சாரதி இராணுவப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது;
கடந்த 22 ஆம் திகதி உரும்பிராய் கிழக்கு கரந்தன் சந்தியில் பலாலி வீதியில் கவசவாகனத் தொடரணி சென்றபோது, வீதியைக் கடக்க முயன்ற மோசேஸ் தாசீசியஸ் (40 வயது) என்பவர் கவசவாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பான விசாரணைகள் யாழ். நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றபோது, பொதுமகனை மோதிய கவசவாகனம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு படை அதிகாரியொருவரின் ஒப்பத்துடன் கவசவாகனம் ஐந்து லட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டது.
அதேநேரம், அந்தக் கவசவாகனத்தை புகைப்படம் எடுக்குமாறும் நீதிமன்ற விசாரணைகளின்போது கவசவாகனத்தை நீதிமன்றில் முற்படுத்த வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன், கவசவாகனச் சாரதியான இராணுவ வீரரை இராணுவப் பொலிஸ் பாதுகாப்பில் வைத்து விசாரணை நடத்துமாறும் எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.