பொலிஸ் திணைக்களத்தின் அனுசரணையில் யூனியன் அசுரன்ஸ் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் பிரிவுகளை பொதுமக்கள் இனங்காணக்கூடிய வகையிலான விபரங்கள் அடங்கிய பெயர்பலகைகள் நிறுவப்பட்டு வருகின்றன.
இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படும் கலந்துரையாடல் ஒன்று கடந்த திங்கட்கிழமை அம்பாறை மொன்டி ஹோட்டலில் நடைபெற்றது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு சம்பந்தமாக பிரச்சினையொன்று ஏற்படும் போது இலகுவாக அவ்வப்பகுதி பொலிஸ் நிலையங்களினூடாக தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி இலக்கங்களும் ஏனைய விபரங்களும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பெயர்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் திணைக்களத்தினால் நாடு தழுவிய ரீதியில் எட்டு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருப்பது 7ஆவது திட்டமாகும், 8 ஆவது திட்டம் மிக விரைவில் ஊவா மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் தென்பகுதிக்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபர் றியன்ஸ் பெரேரா, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த விஜயசூரிய, யூனியன் அசுரன்ஸ் பொது முகாமையாளர், யூனியன் அசுரன்ஸ் அம்பாறை மாவட்ட கிளை முகாமையாளர்கள், அம்பாறை மாவட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.