*அமைச்சர் மைத்திரிபாலவுக்கு சிவசக்தி ஆனந்தன் கடிதம்
அகால மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா , மன்னார் ,முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டினை வழங்குமாறு விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திங்கட்கிழமை அனுப்பிய அவசரத் தொலைநகல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தற்போது நாட்டில் நிலவிவரும் பருவம் தப்பிய மழை வெள்ளத்தால் வவுனியா மாவட்டத்தில் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட நெல் வயல்கள் முற்றாக அழிவடைந்துள்ளதோடு உப உணவுப் பயிர்கள் , சிறு தானியங்கள் ,மரக்கறி வகைகள், வெங்காயம் , 25 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டிருந்த பப்பாசி மரங்கள் போன்றனவும் அழிவடைந்துள்ளன.
மன்னார் மாவட்டத்தில் 12,500 ஏக்கர் வயல்நிலத்தில் செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்கள் முற்றாக நாசமடைந்துள்ளதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் 896 ஏக்கர் நெற்பயிரும் 156 ஏக்கர் மரக்கறிச்செய்கையும் 406 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட ஏனைய பயிருமாக மொத்தம் 1,500 ஏக்கர் விளைச்சல் முற்று முழுதாக அழிவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்ச்செய்கை நிலங்களும் மரக்கறி மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகளும் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு அவை குறித்த காலத்தில் அறுவடை செய்யப்பட முடியாமல் அழிவடைந்தமையால் வடபகுதி விவசாயிகள் சொல்லொணாப் பொருளாதார நஷ்டத்தில் முடங்கிப் போயுள்ளார்கள்.
ஏற்கனவே, இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்த அனர்த்தங்களால் தமது விளைச்சல் நிலங்கள், வீடுகளை இழந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இப்பிரதேச விவசாயிகள் தமது அன்றாட அவலங்களையும் தாண்டி கையிருப்பினையும் கடன் பெற்ற பணத்தினையும் கொண்டு பயிர்ச்செய்கையினை மிகவும் பிரயாசையுடனும் பலத்த குண்டு வீச்சின் மத்தியிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
பயிர்ச்செய்கைக்குத் தேவையான உரவகைகளின் வழங்கலில் பெரும் தடையினை எதிர்கொண்டுள்ள இவர்கள் மதவாச்சி சோதனைச்சாவடியூடாக நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களை அம்பாறை போன்ற பிற மாவட்டங்களிலிருந்து எடுத்து வருவதில் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்படுத்தப்பட்ட தாமதத்தினாலும் குறிப்பாக மன்னார் மாவட்ட விவசாயிகளின் 12,500 ஏக்கர் நெற்செய்கை உரிய காலத்தில் அறுவடை செய்யப்பட முடியாமற் போயிற்று.
போரினால் விளைந்த அனர்த்தத்துடன் இப்போது நிகழ்ந்துள்ள இயற்கை அனர்த்தமும் சேர்ந்து வடபகுதி விவசாயிகளினை மீண்டும் எழமுடியாத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கவைத்துள்ளது.
எனவே, இவர்கட்கும் தென்னிலங்கையில் அடைமழையால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் மற்றும் பொலனறுவை போன்ற மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போன்று நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவினை வழங்க உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு உதவுமாறு கோரப்பட்டுள்ளது.