* விஜய டி. ராஜேந்தர் தெரிவிப்பு; தி.மு.க அரசு மீதும் குற்றச் சாட்டு
சென்னை: இலங்கை தமிழருக்கு ஆதரவாகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்காக மாநில தேசிய சிறு சேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று அவரது இல்லத்தில் நிருபர்களை சந்தித்த விஜய டி.ராஜேந்தர் கூறியதாவது;
`மாநில தேசிய சேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியிலிருக்கும் நான் தமிழக முதலமைச்சருக்கு என் நிலைப்பாடு குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ளவற்றை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்விடயத்தில் இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் தலையாய கடமை. ஆனால், இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவே உதவி செய்வது வருத்தத்தை வரவழைக்கிறது. இலங்கை இராணுவத் தளபதி பொன் சேகாவுக்கு இங்கு வரவேற்பு அளிப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை தான் இன்று இந்தியாவின் பிரதமராக சோனியா காந்தி அமர்த்தியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இலங்கையில் வாழும் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வெடிகுண்டால் வீழ்த்தினார். அது கண்டனத்க்குரியது. அதற்காக ஒட்டு மொத்த இலங்கையில் வாழும் தமிழ் இனத்தை புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்.
சீக்கிய இனத்தின் கண்ணில் வெண்ணெயை வைத்து விட்டு தமிழினத்தின் கண்களில் சுண்ணாம்பு வைக்கலாமா? இவ் விடயத்தில் இந்திய அரசும் இந்திய அரசின் செயற்பாடு முரண்பாடாக இருக்கிறது. அதனால், இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவக் கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 29 ஆம் திகதி மதுரையிலும் ஏப்ரல் 5 ஆம் திகதி சென்னையிலும் இலட்சிய தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் நடத்தவுள்ளேன்.
மாநில தேசிய சிறு சேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடுவது கூட்டணிக் கட்சிக்குள் குந்தகத்தை விளைவித்து விடக் கூடாது என்பதற்காகவும் தமிழக முதல்வருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காகவும் இந்தப் பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடுவதில் தொடங்கி தமிழக மக்கள் பிரச்சினைக்காக இலட்சிய தி.மு.க. தொடர்ந்து போராட்டங்கள் நடத்தும்" இவ்வாறு அவர் கூறினார்.
ராஜிநாமாவை முதல்வர் ஏற்றுக் கொள்ள மறுத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு ஒரு தடவை எடுத்த முடிவை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என அவர் பதிலளித்தார்.