இலங்கையில் இடம்பெற்று வரும் போரினால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாமென்று ஐக்கிய நாடுகள் சபையின் போதைவஸ்து மற்றும் குற்றச் செயல்களுக்கான தெற்காசியப் பிரதிநிதி கரி லூயிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது;
"இலங்கையின் வடக்கு- கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்கள் மிக நீண்ட காலமாக அதாவது 1983 ஆம் ஆண்டிலிருந்து உக்கிரமாக இடம்பெற்று வரும் போரினால் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்தப் போர்ச் சூழல் தொடர்வதால் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு மக்கள் முயற்சித்து வருகின்றனர்.
இதனால், திருட்டுத்தனமாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு உதவும் முகவர்களின் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாமென அஞ்சுகின்றோம்.
குறிப்பாகத் தற்போது போர் மீண்டும் உக்கிரமடைந்து வருவதால் இளையவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கான கட்டாயச் சூழ்நிலை உருவாகி வருகிறது. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று குடியேற முயற்சிப்பது, களவான மனிதக் கடத்தல்களுக்கு ஏதுவான சூழலை உருவாக்கி விடுகிறது. கிடைக்கப் பெறும் கணிப்பீடுகளின் படி வருடத்திற்குக் குறைந்தது 1,50,000 பேர் ஆசியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு களவாகப் பயணித்துச் செல்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 20 மில்லியன் சனத் தொகையைக் கொண்ட இலங்கை மனிதக் கடத்தல்கள் விடயத்தில் ஆசியாவில் மிகக் குறைந்த குற்றங்களையே பதிவு செய்திருக்கிறது. இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் என்பன முறையே மிக அதிக வெளிநாட்டு மனிதக் கடத்தல்களைப் பதிவு செய்த நாடுகள் பட்டியலில் உள்ளன.
போர் மோசமாக நடைபெற்று வருவதுடன், 70,000க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், மனிதக் கடத்தல் விடயத்தில் 5 ஆம் இடத்திலேயே இலங்கை உள்ளது. இருப்பினும் தற்போது மீண்டும் போர் உக்கிரமடைந்துள்ளதால் இந்த மனிதக் கடத்தல்கள் வேகமாக அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல் உக்கிரமடைந்து வருவதால் ஏப்ரல் 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் 1,88,000 பொது மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்குள்ளாகியுள்ளனர்.
இன்னும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தற்காலிக அகதி முகாம்களில் மற்றும் தற்காலிக கொட்டகைகள், குடிசைகளில் நிரந்தரமாக நீண்ட காலம் தங்கியிருப்பதுடன், மிக மோசமான துன்பங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
தற்காலிக முகாம்களை நிரந்தரமான வீடுகள் போன்று நீண்ட காலம் தங்குவதற்கு அகதிகளுக்கு வழங்கும் போது ஒரு வீட்டில் வாழ்கின்ற சுமுகமான சூழ்நிலையை பிள்ளைகள் இழந்து விடுகின்றனர். சிறுவர்களுக்குக் கிடைக்கக் கூடிய அன்பும் கவனிப்பும் பரிவும் நிரந்தரமாகக் கிடைக்காமல் போவதுடன், அவர்கள் மீதான துஷ்பிரயோகமும் தவறான குற்றச் செயல்களும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகி விடுகின்றன.
இத்தகைய சிறுவர்களும் இளையவர்களும் பல்வேறு துஷ்பிரயோகங்கள் மற்றும் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாவதுடன், இவர்களை களவாக வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்வதற்கான சூழ்நிலைகளும் அதிகரிக்க வாய்ப்பு உருவாகிறது. இலங்கையைப் பொறுத்தவரை வறுமை, இயற்கை அழிவுகள், தொழிலின்மை, பாலியல் தொழில் வாய்ப்புகள் போன்றன வெளிநாட்டு மனிதக் கடத்தல்களுக்கான பிரதான காரணங்களாக இருக்கின்ற போதிலும், போர் உக்கிரமடைந்து செல்கின்ற சூழல் இத்தகைய மனிதக் கடத்தல்களை மேலும் அதிகரிக்க ஏதுவாக அமையும்.
குடும்பங்கள் செயலற்றுப் போகின்ற சூழல், இளையவர்கள் வன்முறைகளையும் குற்றச் செயல்களையும் நாடிச் செல்கின்ற சூழல் என்பன இத்தகைய நீண்ட கால போர்ச் சூழ்நிலைகளால் உருவாகி விடுகிறது" என்றார்.