டிட்டோகுகன்
கடந்த 20 நாட்களில் மட்டும் 501 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரிகேடியர் நாணயக்கார இந்த புள்ளி விபரங்களை வெளியிட்டார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்;
மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாண முன்னரங்க நிலைகளில், கடும் மழைக்கு மத்தியில் சிரமம் பாராமல் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் பகுதியில் 31 சதுர கிலோமீற்றர் பரப்பு கொண்ட நிலப் பிரதேசத்தை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், இந்த வருடம் முதல் விடுதலைப் புலி உறுப்பினர்களின் 115 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரூடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்றும் (நேற்று) வவுனியாவில் 11 விடுதலைப் புலிகளின் சடலங்களை ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேநேரம், கடந்த 5 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான 20 நாட்களில் 501 புலிகள் கொல்லப்பட்டதுடன், அதிக எண்ணிக்கையானோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் 54 படையினர் இக் காலப் பகுதியில் உயிரிழந்துள்ளனர். இதில் நாயாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல் போன 10 கடற்படை வீரர்களும் அடங்குவர்.
இதேவேளை, 223 படையினர் காயமடைந்துள்ளதுடன், இவர்களில் பெரும்பாலானோர் மிதிவெடிகளில் சிக்கியே காயமடைந்திருக்கின்றனர்.
மேற்குறித்த காலப்பகுதியில் பொது மக்களில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 6 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.