* ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்
யோ.நிமல்ராஜ்
`அக்ஷன் பாம்' அலுவலகத்தின் அருகே சென்று அதன் நுழைவாயிலின் வெளிப்புறத்தில் நின்று உள்ளே பார்த்தபோது அங்கு பல சடலங்கள் கிடப்பதைக் கண்டதாக மூதூர் பிரதேசசபை உறுப்பினரான முகமட் சாலிகு ராஜீஸ் தெரிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு மூதூரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ்அக்ஷன் பாம்ீ ஊழியர்கள் 17 பேரின் கொலைகள் தொடர்பான விசாரணைகள் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அங்கு சாட்சியளிக்கையிலேயே முகமட் சாலிகு ராஜீஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி காலை 7.30 மணியளவில் வீட்டிலிருந்து மூதூர் நகரை நோக்கிப் புறப்பட்டேன். அப்போது மோதல்கள் ஓய்ந்த நிலையில் மூதூருக்கு வெளியே கடற்கரைப் பக்கம் தவிர்ந்த ஏனைய பக்கங்களில் சூட்டுச் சத்தங்கள் மட்டுமே கேட்டவண்ணமிருந்தன.
இதேவேளை, மூதூரில் சில பொதுமக்கள் மட்டுமே தங்கியிருந்தனர். ஏனையோர் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்துவிட்டனர்.
இதனால், மூதூரில் தங்கியுள்ளவர்களின் நிலைமையை அறியும் நோக்குடனேயே நான் வீட்டை விட்டு வெளியில் வந்தேன். பிரதான வீதி, புதிய துறைமுக வீதி, பழைய துறைமுக வீதி, அட்டாளைச்சேனை வீதி போன்ற வீதிகளூடாக பிரதேச செயலகம் வரை சென்றேன்.
இப்பிரதேச செயலகம் மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது.
இவ்வேளையில் அங்கு கடமையிலிருந்த படையினரின் அனுமதி பெற்றே நான் ஒவ்வொரு இடத்திற்கும் சென்றேன். அத்துடன், அவர்களுக்கு நான் காலை வணக்கத்தை தெரிவித்தபோது அவர்களும் காலை வணக்கம் கூறினார்கள்.
அத்துடன், நான் எந்தெந்த இடங்களுக்குச் செல்லலாமென வினவியபோது மக்கள் குடியிருக்கும் இடங்களைத் தவிர வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டாமென அவர்கள் கூறினர்.
ஆனால், நடைபெற்றுக்கொண்டிருந்த தாக்குதல் பற்றியோ கள நிலைவரங்கள் தொடர்பாகவோ நான் படையினரிடம் எதுவும் கேட்டறியவும் இல்லை. அவர்கள் கூறவுமில்லை.
அப்பொழுது அங்கு கடமையிலிருந்தவர்கள் கடற்படையினரா தரைப்படையினரா என்பது கூட எனக்குத் தெரியாது. ஏனெனில், அவர்கள் போரிற்குத் தயாரான சீருடைகளை அணிந்திருந்தனர்.
தொடர்ந்து அல்-ஹிலால் மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்த அகதிகளைச் சந்தித்து. அவர்களுக்குத் தேவையான உணவுகள் மற்றும் ஏனைய உதவிகள் காயமடைந்தவர்களின் நிலைபற்றி அறிந்துகொண்டேன்.
மேலும், மூதூர் பட்டினத்தின் பல்வேறு பகுதிகளின் நிலைமையையும் சென்று அறிந்துகொண்டேன். அங்கு அநேகமான இடங்களில் இராணுவத்தினர் கடமையிலிருந்தனர்.
இந்தப் பிரதேசங்களில் அன்றிலிருந்து இன்றுவரை படையினரே பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து பிரதான வீதியூடாக மருத்துவமனைக்கு அருகிலுள்ள அப்துல் காசிம் வீதியால் வந்தபோது `அக்ஷன்பாம்' அலுவலகத்திற்கு மேலே காகங்கள் வட்டமிடுவதையும் எனக்கு முன்னால் கொஞ்சம் தொலைவில் சென்ற ஒருவர், கையால் `அக்ஷன்பாம்' பக்கமாக ஏதோ சைகை காட்டுவதையும் கண்டேன்.
அதனைத் தொடர்ந்து நான் `அக்ஷன்பாம்' அலுவலகம் அருகே சென்று அதன் நுழைவாயிலில் வெளிப்பக்கம் நின்று உள்ளே பார்த்தபோது அங்கே பிரேதங்கள் கிடப்பதைக் கண்டேன். இரத்தவெள்ளம் நாலா பக்கமும் சிதறிக் காணப்பட்டதுடன் அலுவலகமும் அலங்கோலமாகக் காணப்பட்டது.
நுழைவாயிலுக்கும் அலுவலகத்திற்கும் விறாந்தைக்கும் இடையிலுள்ள முற்றத்தில் இரண்டு வரிசைகளாக பிரேதங்கள் காணப்பட்டன.
நான் உள்ளே செல்லவுமில்லை. எத்தனை உடல்கள் இருக்கின்றன என எண்ணிப்பார்க்கவும் இல்லை.
எனது அறிவு மற்றும் அனுபத்தின்படி அவ்வுடல்கள் 24 மணித்தியாலத்திற்கு முன்னால் கொல்லப்பட்டவர்களுடையதாக இருக்க வேண்டுமென்பது தெரிந்தது.
ஆனால், அச்சந்தர்ப்பத்தில் அலுவலகத்தின் உட்பகுதியில் யாரும் உயிருடன் இருந்ததற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
ஆகஸ்ட் 2006 இரண்டாம், மூன்றாம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களினால் பலியான ஐம்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல்களையும் பார்வையிட்டேன்.
இதனைத் தொடர்ந்து நான் அல்-ஹிலால் மகாவித்தியாலய அகதிமுகாமிற்குச் சென்று அங்குள்ள கட்டிடமொன்றின் மூன்றாம் மாடிக்குச் சென்று எனது கையடக்கத் தொலைபேசியில் அங்கிருந்த மக்களுக்கு அழைப்புகள் ஏற்படுத்தி அவர்கள் தமது உறவினர்களுடன் கதைப்பதற்கு ஏற்பாடு செய்தேன்.
இந்நிலையில், இமாம் அசாலி என்பவர் எனது தொலைபேசியைப் பெற்று அதில் அழைப்பொன்றை ஏற்படுத்தி எவருடனோ தொடர்புகொண்டார்.
அதனைத் தொடர்ந்து எனக்கு வந்த அழைப்பொன்றில் `அக்ஷன்பாம்' சம்பந்தமாக கேட்டபோது நான் கண்டவற்றைக் கூறினேன்.
ஆனால், அவ்வழைப்பை யார் ஏற்படுத்தினார்கள் என்று எனக்குத் தெரியாது.
இதனைத் தொடர்ந்து இவ்விடயம் சம்பந்தமாக அறிவதற்குப் பலர் அழைப்புகளை மேற்கொண்டவண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் இதனை ஊர்ஜிதம் செய்வதற்கு பலர் முற்பட்டபோது நான் இன்னொரு பிரதேசசபை உறுப்பினர் சௌந்தரநாயகம் என்பவரை தொடர்புகொண்டால் அவருக்கு என்னைத் தெரியும் என்றும் அவர் எனது குரலை அடையாளம் காணுவார் என்றும் தெரிவித்தேன்.
ஆனால், அவர்கள் வேறொரு சௌந்தரநாயகம் என்பவரிடம் தொடர்புகொண்டிருந்தனர். ஆனால், அவரொரு மருத்துவர் என்பதுடன் எனது மிகநெருங்கிய நண்பரும் ஆவார்.
இந்நிலையில், சூரியன் வானொலிச் சேவையிலிருந்து இந்திரஜித் என்னிடம் தொடர்புகொண்டு இவ்விடயம் சம்பந்தமாக அறிய முற்பட்டபோதே எத்தனை பேரின் உடல்கள் அங்குள்ளன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு விடை காண்பதற்காக இரண்டாவது தடவையாக அங்கு சென்ற நான் நான்கு பெண்கள் உள்ளடங்கலாக 15 பேரின் உடல்களை காண முடிந்ததுடன் அதில் ஒன்பது பேர் `அக்ஷன்பாம்' ரிசேட் அணிந்திருந்ததை அவதானித்தேன்.
இதனைத் தொடர்ந்து நான் நிலைமையை தொலைபேசி மூலமாக சூரியன் வானொலிச் சேவையின் இந்திரஜித்திற்கு தெரிவித்த அதேவேளை, அது நேரடியாக வானொலியில் ஒலிபரப்பும் செய்யப்பட்டது.
இந்நிலையில், ?C.H.A.?? அமைப்பின் வாகனமொன்று மூதூரிற்குள் நுழைந்து நிலைமையை விசாரித்ததுடன் நானும் அவர்களுமாக சம்பவ இடத்திற்குச் சென்றபோது அவர்கள் `அக்ஷன்பாம்' நிறுவனத்திற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன்.
அங்கு, பார்த்தபோதே மேலும் இரு உடல்கள் வெவ்வேறு திசைகளில் கிடப்பதைக் கண்டேன்.
இதனைத் தொடர்ந்து அன்று லண்டன் பி.பி.சி.யில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்களுக்கும் நிலைமையைக் கூறினேன்.
இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு அழைப்புகளும் இவ்விடயம் சம்பந்தமாக அறிந்துகொள்ளும் பொருட்டு எனது தொலைபேசிக்கு வந்ததென தெரிவித்தார்.
இத்துடன், இவரது சாட்சியம் நேற்றைய அமர்வில் முடிவடைந்தது. இவரின் சாட்சியம் மீண்டும் இன்று இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.