அநுராதபுரம் இராணுவ முகாம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு இராணுவச் சிப்பாய் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை 2 மணியளவில் அநுராதபுரம் இராணுவ முகாம் பாதுகாப்பு நிலைப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
முகாமை அண்டிய பகுதியில் அதிகாலை நேரத்தில் சந்தேகத்திற்கிடமான ஒருவரது நடமாட்டத்தை அவதானித்த,அப் பகுதியில் காவல் கடமையிலிருந்த படையினர் அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட போது, அது அந்த முகாமில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாயின் சடலமெனத் தெரியவந்தது.
அந்தச் சடலம் பின்னர் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.