சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ருன் வன்டென்கோவ் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் வன்னியில் மனிதாபிமான நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது, அவசர சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக இராணுவ தரப்பில் ஒருவரை நியமிக்குமாறு ஐ.சி.ஆர்.சி. வதிவிடப்பிரதிநிதி இராணுவத் தளபதியிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து, எவ்விதமான தேவை ஏற்பட்டாலும் வன்னிக்கான இராணுவத் தளபதி மேஜர்.ஜெனரய் ஜெகத் ஜெயசூரியவுடன் தொடர்பு கொள்ளலாமென இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் வன்னிக்கு எந்தவொரு பகுதிக்கும் எவ்வேளையிலும் ஐ.சி.ஆர்.சி.யினர் செல்வதற்கான அனுமதி வழங்கப்படுமெனவும், அது மறுக்கப்படமாட்டாதெனவும் இராணுவத் தளபதி அங்கு உறுதியளித்துள்ளார்.
இவ்வேளையில், கடந்த வருடம் இங்கு தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் இவ் வருடம் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்தும் ஐ.சி.ஆர்.சி.வதிவிடப் பிரதிநிதி இராணுவத் தளபதிக்குத் தெரிவித்துள்ளார்.