* மன்னார் பஸ் நிலையத்தில் சம்பவம்
மன்னார் நகரில் ஒருவரிடம் பல இலட்சம் ரூபா கப்பம் கோரிவந்த ஒருவர் அதனைப் பெறுவதற்காக மன்னார் பஸ் நிலையத்திற்கு வந்தபோது அங்கு பதுங்கியிருந்த பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
தன்னை ஆயுதக் குழுக்களின் உறுப்பினரெனக் கூறிய இளைஞரொருவர் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக ஒருவரது வீட்டிற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து பல இலட்சம் ரூபா பணம் தர வேண்டுமென்றும் இல்லையேல் கொன்று விடப்போவதாகவும் கூறிவந்துள்ளார்.
கடைசியில் ஒரு இலட்சம் ரூபா பணம் தருவதாகக் கூறவே திங்கட்கிழமை நண்பகல் அந்தப் பணத்தை மன்னார் பிரதான பஸ் நிலையத்திற்குக் கொண்டு வந்து தருமாறு அந்த மிரட்டல்காரன் கூறியுள்ளார்.
இதையடுத்து மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று இந்த மிரட்டல் குறித்துக் கூறிய வீட்டுக்காரர் திங்கட்கிழமை நண்பகல் பஸ் நிலையத்தில் வைத்துத் தான் ஒரு இலட்சம் ரூபா பணம் தருவதாக ஒப்புக் கொண்டது பற்றியும் கூறியுள்ளார்.
இதன்படி அவர் நண்பகல் பஸ் நிலையத்திற்குச் சென்றபோது மிரட்டல்காரரும் பணத்தைப் பெறுவதற்காக அங்கு வந்துள்ளார். இந்தநேரம், அப்பகுதியில் பதுங்கியிருந்த பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். இவரிடம் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கீரி முருகன்கோவில் வீதியைச் சேர்ந்த வெள்ளிக் கண்ணன் சுப்பிரமணியம் (27 வயது ) என்ற இவரைப் பொலிஸார் மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்த போது அவரை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.