* அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல
டிட்டோகுகன்
கிழக்கிற்குள் மீண்டும் பயங்கரவாதம் ஊடுருவ முடியாதென்பதில் அரசாங்கம் முழு நம்பிக்கையுடன் இருப்பதாக அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இந்த நம்பிக்கையின் காரணமாகவே கிழக்கிலிருந்து குறிப்பாக, அம்பாறை மாவட்டத்திலிருந்து 22 வருடங்களாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த விஷேட அதிரடிப் படையினரை அங்கிருந்து அகற்றத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அதுவும் 25 தொடக்கம் 30 சதவீதமான அதிரடிப்படையினரே இதுவரை அகற்றப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்;
"விஷேட அதிரடிப் படையினர் கிழக்கிலிருந்து அகற்றப்படுவது தொடர்பாக பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது. இவ் விவகாரத்தில் சிலர் அரசியல் ரீதியான சுமைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். பிள்ளையானின் தேவையின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டது. இவையனைத்தும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்.
விஷேட அதிரடிப் படையினர் கடந்த 22 வருடங்களாக கிழக்கில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கிழக்கை முற்றாக மீட்டெடுக்க வேண்டுமென்பதே அரசின் இலக்கு. அரசாங்கம் அந்த இலக்கை அடைந்து விட்டது. இதற்கு விஷேட அதிரடிப் படையினர் அம்பாறை மாவட்டத்தில் பெரும் பங்காற்றினர். எனவே, கிழக்கில் பயங்கரவாதம் மீண்டும் ஊடுருவ முடியாதென்பதில் அரசாங்கம் பூரண நம்பிக்கையுடனுள்ளது. அதற்கேற்றவாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், எடுக்கப்பட்டும் வருகின்றன.
இதேநேரம், தேவையேற்படும் போது படையினரை உரிய இடங்களுக்கு மாற்றும் உரிமை இருக்க வேண்டும். பாதுகாப்பு செயலாளரின் கீழிருந்த விஷேட அதிரடிப் படையினர் தற்போது பொலிஸ் மா அதிபரின் கீழ் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதற்கமைய பொலிஸ்மா அதிபர் தற்போது தேவைக்கமைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.
இவ்வறிக்கையில் பிள்ளையான் குழுவினரின் அழுத்தம் தான் விஷேட அதிரடிப் படையினர் கிழக்கிலிருந்து அகற்றப்படுவதற்கு காரணமென கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும். ஏனெனில் பிள்ளையான் குழுவினர் மட்டக்களப்பிலேயே இருக்கிறனர். ஆனால், அதிரடிப் படையினர் பெரும்பான்மையாக அம்பாறை மாவட்டத்திலேயே இருக்கின்றனர்.
அத்துடன், பிள்ளையான் அணியினர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் விஷேட அதிரடிப் படையினர் கிழக்கிலிருந்து அகற்றப்பட்டிருந்தால் அதில் சிக்கல் இருக்கலாம். ஆனால், தேர்தல் மட்டு. உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் 25 தொடக்கம் 30 சதவீதம் வரையிலான அதிரடிப்படையினர் மட்டுமே இதுவரை கிழக்ககிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
எனவே, இவ்விடயத்தில் அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படையும் இல்லை. இது குறுகிய அரசியல் இலாபம் பெறும் நோக்கிலான சிறுபிள்ளை தனமானதும் கீழ்த் தரமானதுமான செயலாகும்.
மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுபவர்களில் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையே இது " என்றார்.