* வேட்பாளர் தெரிவுக்கு குழு அமைப்பு
எம்.ஏ.எம்.நிலாம்
எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதென ஐக்கிய தேசியக் கட்சி நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானித்துள்ளது. நேற்றுக் கூடிய கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற விசேட செயற்குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதன் பின்னர் தேர்தலில் போட்டியிடுவதென ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக் குழு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்கா, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, எதிர்க் கட்சிப் பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா, சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ், தயா பெல்பொல ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் வேட்பாளர்களை அடையாளம் காண்பதற்கு மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு டாக்டர் ஜயலத் ஜயவர்தனவும் திருகோணமலை மாவட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும் அம்பாறை மாவட்டத்துக்கு தயா கமகேயும் இடம்பெறுகின்றனர்.
இத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஏனைய கட்சிகளின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பூரண அங்கீகாரத்தை செயற்குழு கட்சித் தலைமைத்துவத்திற்கு வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனான சந்திப்பு இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கேம்ப்ரிட்ஜ் ரெரஸில் இடம்பெறவிருக்கின்றது. இச்சந்திப்பில் கட்சித் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்கா, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா ஆகியோரும் பங்கேற்பர்.