கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு அரசாங்க ஆதனங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
பதினேழாம் அரசியலமைப்புத் திருத்தத்தின் 104 ஆ (4) (அ) ஆம் உறுப்புரைக்கிணங்க ஏதேனும் தேர்தலொன்றில் போட்டியிடுகின்ற எவரேனும் ஒரு வேட்பாளர் அல்லது ஓர் அரசியல் கட்சி அல்லது ஒரு சுயேச்சைக் குழு தேர்ந்தெடுக்கப்படுவதை ஊக்குவிக்கவோ அல்லது தடுக்கவோ அரசாங்கத்திற்கு அல்லது கூட்டுத்தாபனமொன்றிற்கு சொந்தமான அசையும் அல்லது அசையாத ஆதனங்களை வாக்கெடுப்புக் காலக்கெடுவுக்குள் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.
வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், படகுகள், காணிகள், கட்டிடங்கள் என்பன ஆதனங்களில் அடங்கும்.
இத்தடை "வாக்கெடுப்புக் காலக்கெடு" அதாவது வேட்புமனுக் கோரல் அறிவித்தல்கள் வெளியிடப்பட்ட தினமான கடந்த 13 ஆம் திகதி ஆரம்பித்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் தினம் வரை அமுலிலிருக்கும்.
எதிர்வரும் தினமொன்றில் நடத்தப்படவிருக்கின்ற கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் காலக்கெடுவுக்குள் இத்தடையை விதிக்க தேர்தல்கள் ஆணையாளர் முடிவெடுத்துள்ளார்.
அரச அல்லது கூட்டுத்தாபனங்களின் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், ஆட்சேர்ப்புக்கள், ஆட்சேர்ப்புக்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் என்பன இவ்அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படக்கூடாத விடயங்களாகும்.
அத்தோடு, இக்காலக்கெடுவுக்குள் அரசாங்கத்தின் செலவில் நடமாடும் சேவைகள், கண்காட்சிகள், விழாக்கள் என்பவற்றை நடத்தாமல் ஒத்திப்போடுவது பொருத்தமானதாகும்.
இவ்விடயங்களை விளக்குகின்ற உரிய அறிவுறுத்தல்கள் ஏற்கனவே சகல அரச கூட்டுத்தாபன நிறுவனத் தலைவர்களுக்கு அனுப்பிவைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரினால் அரசாங்க செயலாளர்களுக்கனுப்பப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாகாண சபைகளைச் சேர்ந்த பல்வேறு தலைமை அலுவலர்களும் அறிவூட்டப்பட்டுள்ளனர்.