* மக்கள் சக்தி மூலம் அரசை வெளியேற்றுவதே உடனடித்தேவை; ரணில் அழைப்பு
எம்.ஏ.எம்.நிலாம்
1977 இல் ஜே.ஆர்.ஜயவர்தன மக்கள் சக்தியைக் கொண்டு பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்துக்கு வந்தது போன்று 30 வருடங்களுக்கு பின்னர் மக்கள் பேரணியை அணிதிரட்டி அதிகாரத்தைக் கைப்பற்றப்போவதாக தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களை ஓரணியில் திரட்டும் பணியை மக்கள் சக்திப் படையினர் கிராமிய மட்டத்திலிருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த தேசியப் போராட்டத்தின்போது எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகவிருப்பதாகவும் மக்கள் போராட்டம் வெடித்ததும் எந்தச் சக்தியாலும் அரசாங்கத்தைக் காப்பாற்ற முடியாது போகுமெனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் சக்திப் படையின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இக்கூட்டம் இடம்பெற்றது. மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் சக்திப்படைச் செயலாளர்களும் கட்சியின் மாவட்ட, தொகுதிமட்ட அமைப்பாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது;
மிகவிரைவில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது. அதற்கான வேலைத் திட்டம் தயார்படுத்தப்பட்டுள்ளது. 1976 இல் ஜே.ஆர்.ஜயவர்தன ஆரம்பித்த மக்கள் போராட்டப் பேரணியின்மூலமே அன்றைய சிறிமாவோ ஆட்சியை வீழ்த்த முடிந்தது. அந்தப் போராட்டத்தின் காரணமாக அரசு கலைக்கப்பட்டு 1977 இல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் தேர்தல் வரலாற்றில் என்றுமே காணப்படாத வகையில் 5/6 பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
அதன் பின்னர் 30 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டுமொரு தடவை மக்கள் சக்தியை அணிதிரட்ட வேண்டிய தேவை மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலும் தோன்றியுள்ளது. நாட்டில் அராஜகமும் பொருளாதார நெருக்கடியும் ஊழல் மோசடி போன்றவை தலைவிரித்தாடுகின்றன. இந்தப் பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தையே உடனடியாக ஆரம்பிக்கின்றோம்.
இந்தியாவில் பணவீக்கம் 5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக அதிகரித்தபோது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டதென்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். அதுபோன்றே அரசு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. அது மட்டுமன்றி சீனாவில் பணவீக்கம் 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அதிகரித்ததால் அரசியல் நெருக்கடி நிலை உருவானது. ஒரு சதவீதத்தால் அதிகரித்ததற்கே இந்த நிலையென்றால் எமது நாட்டில் எங்குமே இல்லாத விதத்தில் 28 சதவீதத்தால் பணவீக்கம் அதிகரித்திருக்கும்போது எவருமே கண்டுகொள்ளாமலிருப்பது புதுமையாக உள்ளது.
மக்கள் படுகின்ற வேதனைகள் அரசியல் தலைமைகளுக்குத் தெரியவில்லை. ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற கட்சிகள் வெளியே அரசை விமர்சித்துவிட்டு ஆட்சியைக் காப்பாற்றுவதில்தான் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழ், சிங்கள புதுவருடத்தைக் கொண்டாட முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் நாட்டு மக்களின் கைகளில் தாராளமாக பணம் புரண்டது. பொருட்களும் தாராளமாகக் கிடைத்தன. ஆனால், மகிந்த ஆட்சியில் மக்களிடம் பணமுமில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மீண்டுமொரு தடவை நாணயத்தாள்கள் அச்சிடப்படுகின்றன. இதன் பின் விளைவுகள் மிகமோசமானதாகவே அமையும்.
இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை விரைவாகக் காப்பாற்றியாக வேண்டும். மக்கள் சக்தி எத்தகையது என்பதை அரசுக்கும் உலகுக்கும் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது.
ஏப்ரல் 3 ஆம் திகதி ஆரம்பிக்கும் போராட்டம் ஆட்சி கவிழும் வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். இலட்சக்கணக்கில் மக்களை வீதியிலிறக்கிப் போராடத் தீர்மானித்துள்ளோம். தேவைப்படும்போது வீதி மறியல் போராட்டத்தையும் ஆரம்பிப்போம் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.