திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடற்சமரில் கடற்புலிகளுக்கு பலத்த சேதங்களேற்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பிலிருந்து புல்மோட்டை கடற்பரப்பை நோக்கி வந்த கடற் புலிகளின் தொடரணியொன்றை கடற்படையினர் வழிமறித்துத் தாக்கிய போதே அவர்களுக்கு இந்தச் சேதமேற்பட்டதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.
அதிகாலை ஒரு மணியளவில் நடைபெற்ற இந்தக் கடற்சமரில் கடற்படையினர் பலத்த தாக்குதலைத் தொடுத்து கடற்புலிகளை பின்வாங்க வைத்ததாகவும் இதனால், கடற்புலிகளுக்கு பலத்த சேதமேற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
கடற்புலிகளின் தகவல்களை ஒட்டுக் கேட்ட போது அவர்களது படகொன்று பலத்த சேதமடைந்த நிலையில் அது நாயாறு பகுதி நோக்கி கட்டியிழுத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.