* லண்டன் கருத்தரங்கில் தென்னாபிரிக்க அமைச்சர்
இலங்கையின் இன நெருக்கடிக்கு விடுதலைப் புலிகளின் சம்பந்தமில்லாமல் தீர்வு சாத்தியமில்லை என்று தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதையிட்டு கவலை தெரிவித்திருப்பதுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்திருப்பதுடன், மோதலில் சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்பினராகிய இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஈடுபாடு காட்டாமல் தீர்வுகாண முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட தன்னார்வ தொண்டர் நிறுவனமான உலகளாவிய சமாதான ஆதரவுக் குழுவின், ஏற்பாட்டில் லண்டனில் கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்ற இருநாள் கருத்தரங்கில் தென்னாபிரிக்கா சார்பில் கலந்துகொண்ட அந்நாட்டின் தொலைத்தொடர்புத்துறை பிரதியமைச்சர் ரோய் படையாச்சி, இலங்கையில் சமாதானம் காணும் முயற்சிகளுக்கும் தென்னாபிரிக்கா சகல உதவிகளையும் வழங்கும் என்று உறுதியளித்திருக்கிறார்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட ரோய் படையாச்சி நிருபர்களிடம் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்ததாக தமிழ்நெற் இணையத்தளம் குறிப்பிட்டிருக்கிறது.
ரோய் படையாச்சி இலங்கை விவகாரம் தொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது;
இலங்கையில் மோதல் அதிகரித்திருப்பதையிட்டு தென்னாபிரிக்கா கவலையடைந்துள்ளது. குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பாக நாங்கள் கவலையடைந்திருக்கிறோம்.
மோதலில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை தொடர்பாக நெருங்கிவரவேண்டும் என்ற அக்கறையை தென்னாபிரிக்கா கொண்டுள்ளது.
பேச்சுவார்த்தை மேசைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் திரும்பிவருவதற்கான சகல முயற்சியும் ஊக்கமும் அளிக்கப்படுவது அவசியமென நாம் நம்புகின்றோம். இதுவே தென்னாபிரிக்க சமூகத்தின் உறுதியான அபிப்பிராயமாகும். இதற்கு அரசாங்கமும் ஆதரவளித்துள்ளது. மோதலில் சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்பினராகிய விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்படாமல் தீர்வு காணமுடியாதென்பதை தென்னாபிரிக்க சமூகம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு தமது அதிகார பூர்வமான பிரதிநிதிகளென தமிழ் மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மோதலுக்கு சமாதானத்தீர்வு காண்பதற்கான தமது சொந்த முயற்சியை சர்வதேச சமூகம் அதிகரிக்கவேண்டியது அவசியமென்று நாம் நம்புகின்றோம். ஆயினும் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதை சர்வதேசசமூகம் கூறவேண்டியதில்லை. இந்த விடயம் இலங்கை மக்களாலேயே தீர்மானிக்கப்பட வேண்டியது என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம். இது தென்னாபிரிக்க மக்களினதும், அரசாங்கத்தினதும் அபிப்பிராயமாகும் என்று படையாச்சி தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென பட்டியலிட்டிருப்பது தொடர்பாக அவருடைய கருத்தைக் கேட்டபோது; `நிறவெறிக்கெதிரான விடுதலைப் போரை நாங்கள் மேற்கொண்டபோது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பயங்கரவாத அமைப்பாக வர்ணிக்கப்பட்டது. நாங்கள் ஒருபோதும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராக நாங்கள் போராடினோம்' என்று அவர் கூறியுள்ளார்.
நாங்கள் ஒரு முக்கியமானதும், தந்திரோபாயமானதுமான விடயங்களை மேற்கொண்டோம். அதாவது சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளுக்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டோம். அதனால் மக்கள் பகிரங்கமாக இலகுவான முறையில் பங்களிப்பை நல்க முடிந்தது. அடக்குமுறைச் சட்டத்திற்கு அஞ்சாமல் மக்கள் பங்குகொள்ள முடிந்ததுடன், சுதந்திரமானதும், ஜனநாயக ரீதியானதுமான தென்னாபிரிக்காவை உருவாக்க இது தேவைப்பட்டது. பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாட்டை உருவாக்கவேண்டிய சூழ்நிலைகளில் எமது அமைப்புகள் தடைசெய்யப்படக் கூடாதென நாம் கடுமையாக வாதிட்டோம். அச்சமயம் எமது அமைப்புகள் தடை செய்யப்பட்டிருந்தன. அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் நாம் வலியுறுத்தினோம். இவை எமது போராட்டத்திலிருந்த தடைக்கற்களாகும். இந்ததடைகளை அகற்ற எமது சமூகத்தையும் சர்வதேசசமூகத்தையும் அணிதிரட்டினோம். இவையே எமது அனுபவத்திலிருந்து உருவான பாடங்களாகும். இவை உங்கள் பேராட்டத்துக்கு பொருத்தமானவையென நான் கருதுகின்றேன்' என்றும் ரோய் படையாச்சி தமிழ் செய்தியாளர்களுக்கு கூறியுள்ளார்.
இதேவேளை, கருத்தரங்கில் உரைநிகழ்த்துகையில் இலங்கை அரசு, புலிகளும் மீண்டும் பேச்சை ஆரம்பிக்கவேண்டுமென்ற தென்னாபிரிக்க அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்திய படையாச்சி, மூன்றாம் தரப்பின் உதவி அவசியமெனவும் அழுத்தி உரைத்திருக்கிறார்.
பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கு அனுசரணை தேவைப்படும். அனுசரணை வழங்கும் தரப்பினர் மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் மதிக்கப்படுபவராக இருத்தல் வேண்டும். இருதரப்பினரும் அழைக்காவிடில் தென்னாபிரிக்கா தன்னை சம்பந்தப்படுத்திக்கொள்வதில்லை. சிம்பாப்பே, கோட்டிவோர், புரூண்டி ஆகிய இடங்களுக்கு மோதலில் சம்பந்தப்பட்டவர்களின் அழைப்பின் பேரிலேயே சென்றோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குரிய நம்பகரமானதும், சட்டபூர்வமானதுமான பிரதிநிதிகள் யார் என்பது தொடர்பான கேள்வியொன்றுக்கு அவர் பதிலளிக்கையில்; மனித உரிமைகளுக்கான தமிழர் நிலையத்தில் அங்கம் வகிக்கும் சகாக்களிடமிருந்து சுவாரஸ்யமான ஒரு கையேடு எனக்குக் கிடைத்தது. இதனை ஒவ்வொருவருக்கும் சிபார்சு செய்கிறேன். `சுயநிர்ணயத்துக்கான தமிழ் மக்களின் உரிமைகள்' என்பது பற்றியதே இந்தப் பிரசுரமாகும். இந்தப் பிரச்சினை தொடர்பாக தென்னாபிரிக்க மக்கள் எதனை விளக்கிக்கொண்டுள்ளனர் என்பதைப் பற்றி உங்களுக்கு நிச்சயப்படுத்திக்கொள்ள முடியாது. அதாவது யார் அதிகாரபூர்வமான தலைவரென்ற (தமிழர்களின்) கேள்வியே அதுவாகும். அதில் சிலவற்றை நான் வாசிக்க விரும்புகின்றேன். இலங்கை நெருக்கடி தொடர்பாக தென்னாபிரிக்கர்கள் சிந்திக்கும் வழிமுறை. இதில் அதிகம் உள்ளதென நான் கருதுகின்றேன். 2002 யுத்தநிறுத்த உடன்படிக்கையானது மோதலில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரில் புலிகள் மற்றைய தரப்பு என்பதை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்ததோர் ஒப்பந்தமாகும். விடுதலைப் புலிகள் தமிழர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதற்கு அந்த அமைப்பின் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியமை மற்றதோர் அங்கீகாரமாகும். அத்துடன், சர்வதேச தலைநகரங்களில் கொழும்பு புலிகளுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தது. அத்துடன் 2004 தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புலிகளின் தலைமைத்துவத்தை தமிழ் மக்களின் தேசியத் தலைமைத்துவம் என்று ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் ரோய் படையாச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அந்த பிரசுரத்தை மேற்கோள்காட்டி உரையாற்றிய படையாச்சி, பயங்கரவாதத்திற்கெதிரான போரென தற்போதைய அரசியல் சூழல் வரையறுக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் தொடர்பாக தனது கணிப்பீட்டை மீளாய்வு செய்வதற்கு இது சர்வதேச சமூகத்திற்கு சிலசமயம் பொருத்தமான தருணமாக இருக்கக்கூடும். சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் அதேசமயம் அதன் சுயபாதுகாப்பு உரிமைக்கான செயற்பாட்டை மேற்கொள்கின்றதாகத் தென்படுவது தெளிவானதாகும்.
இந்த மோதல் தொடர்பாக சர்வதேச சமூக சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது. இலங்கை அரசுடன் புலிகள் பேசுவதற்கு இராஜதந்திர ரீதியான ஆதரவை சர்வதேச சமூகம் வழங்க வேண்டிய தேவையுள்ளது. உலகின் இந்தப் பாகத்தில் அமைதி ஏற்படவேண்டுமென சர்வதேச சமூகம் விரும்பினால் இந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கவேண்டியது அவசியமாகும்.
அரசாங்கம், சிவில் சமூகம், தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த நீங்கள் இலங்கை அரசும், புலிகளும் பேச்சுவார்த்தைக்கு திரும்பவேண்டும் என்பதற்குரிய வழிகாட்டலையும், ஆதரவையும் வழங்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமானதாகும். அதேசமயம் இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்காக சர்வதேச சமூகத்தினராகிய எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதும் அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.