இத்தாலியின் தலைநகர் ரோமில் புலிகள் இயக்கத்தினராலும் ஆதரவாளர்களாலும் நடத்தப்பட்டு வந்த தொலைக்காட்சி நிலையத்தை உடனே பூட்டும்படி இத்தாலிய அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி நிலையத்தை வெகு அண்மையிலேயே புலிகள் இயக்கத்தினர் ரோமில் ஆரம்பித்ததாகவும் அதன் நிகழ்ச்சி ஒளிபரப்புகள் செயற்பாடுகள் தொடங்கப்பட்ட ஆரம்ப நிலையிலேயே புலிகள் மேற்படி தொலைக்காட்சி நிலையம் இத்தாலிய அரசின் உத்தரவால் இவ்வாறு உடனடியாகப் பூட்டப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு இத்தாலியில் புதிய தொலைக்காட்சி நிலையம் பூட்டப்பட்டது. ஐரோப்பாவில் புலிகள் இயக்கத்தினரில் பிரசாரச் செயற்பாடுகளுக்குக் கிடைத்த மரண அடியென விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாலிய அரசாங்கம் ரோமிலுள்ள புலிகள் தொலைக்காட்சி நிலையத்தை பூட்டும்படி திடீரென்று உத்தரவிட்டதற்குக் காரணம் இத்தாலியில் ரோமில் பணியாற்றும் ஷ்ரீலங்கா தூதுவர் ஹேமந்த வர்ணகுலசூரிய புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டி இத்தாலி அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய அறிக்கையையும் கோரிக்கையையும் இத்தாலி பாதுகாப்புத் துறையும் அரசாங்கமும் ஏற்றுக்கொண்டதன் பிரதிபலனாகவே இவ்வாறு மேற்படி புலிகளின் தொலைக்காட்சி சேவைக்கு உடனடித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரோம் ஷ்ரீலங்கா தூதரகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புலிகள் இயக்கம் ரோமில் ஆரம்பித்த குறித்த தொலைக்காட்சி சேவையின் பெயர் `யூரோ பேர்ட் 9 சனல்' எனவும் இந்த ஒளிபரப்பு சேவை ஐரோப்பிய யூரோ தொலைக்காட்சி சேவையின் ஒளிபரப்பு அலைகளைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த யூரோ பேர்ட் 9 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு அதன் மூலம் ஐரோப்பாவெங்கும் செயற்படும் புலிகள் இயக்கத்தினரும் ஆதரவாளர்களும் இயக்கத்துக்கு ஆதரவு தேடுவதற்கும், நிதி சேகரிப்பதற்குமாக பரவலாகப் பிரசாரங்களைச் செய்து வருகின்றனர். இதன்மூலம் இதுவரையில் பெருந்தொகையான நிதியை ஐரோப்பாவிலுள்ள புலிகள் இயக்கத்தினர் வெற்றிகரமாகச் சேகரித்துள்ளனர்.
லங்காதீப : 23.03.2008