இந்திய - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று புதன்கிழமை தொடங்குகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடுமையான ஒரு நாள் தொடரில் வெற்றிபெற்ற உற்சாகத்தோடு இந்தியாவும், பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற மகிழ்ச்சியோடு தென்னாபிரிக்காவும் இத்தொடரை எதிர்கொள்கின்றன.
துடுப்பாட்டத்தில் மட்டும் வலுவுடன் திகழ்ந்த இந்திய அணி, சமீபகாலமாக பந்துவீச்சிலும் ஜொலித்து, ஓர் சிறந்த அணியாகத் திகழ்கிறது. புதிய பயிற்சியாளர் தென்னாபிரிக்காவின் காரி ஹோஸ்டனின் ஆலோசனை, புதிய வியூகம் கூடுதல் பலம் சேர்க்கலாம் எனத் தெரிகிறது.
குறைந்தவேகத்தில் பந்து எழுப்பிச் செல்லும் விதமான இந்திய ஆடுகளங்கள் குறித்து அவர் நிறைய தெரிந்துவைத்துள்ளார். இந்திய மைதானங்களில் 5 போட்டிகளில் விளையாடி 471 ஓட்டங்களை எடுத்துள்ளார். அத்துடன், தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவர் என்பதால் அந்நாட்டு வீரர்களின் ஆட்ட நுணுக்கமும் தெரிந்தவராகத் திகழ்கிறார். முதன் முதலாக பயிற்சியாளராக பொறுப்பேற்கும் அவருக்கு இது மிகவும் உறுதுணையாக இருக்குமென்பது நிச்சயம்.
ஹர்பஜன் சிங்கின் சுழற்பந்து வீச்சு மீது அவர் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், எதையும் சமாளிக்கத் தயாராகியுள்ளது தென்னாபிரிக்க அணி. அணி வீரர்கள் தனித்தனியாக பேட்டியளிக்கும்போது இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முன்வரிசை துடுப்பாட்டம் வலுவாக இருப்பது குறித்துக் கவலை தெரிவித்த தென்னாபிரிக்க கப்டன் கிரேம் ஸ்மித், வீரர்களின் பந்துவீச்சு குறித்துக் கவலை தெரிவிக்கவில்லை. ஆனால், சவாலை எதிர்கொள்ளும் வகையிலான வீரர்கள் அணியில் உள்ளனர் என்று ஆரூடம் கூறியுள்ளார்.
மகாயா நிற்னி, மோர்ன் மோர்கெல், மோன்டே ஜோன்டகி ஆகியோர் தென்னாபிரிக்க அணிக்கு புகழ் சேர்க்கும் பந்துவீச்சாளர்கள் வரிசையில் உள்ளனர். இருந்தாலும், 25 வயதாகும் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இத்தொடரில் முக்கியமானவராகத் திகழ்வார் எனத் தெரிகிறது. இத்தொடருக்கு முன்னர் தென்னாபிரிக்கா பங்கேற்ற பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் பங்களாதேஷ் தொடர்களின்போது இவரது பந்துவீச்சு அணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக நடந்த பங்களதேஷுக்கு எதிரான தொடரில் 14 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.
சேப்பாக்கம் ஆடுகளம் நாளுக்கு நாள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும் என்பது வரலாறு. போல் ஹாரிஸ், ரொபின் பீற்றர்சன் ஆகியோர் அப்பணியைச் சமாளிக்கவுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார் ஸ்மித்.
இத்தொடர் சவாலாக இருக்குமென இரு அணிகளின் கப்டன்களும் பொதுவான கருத்தைக் கூறியுள்ளனர். ஆனால், யாரும் நாங்கள்தான் தொடரை வெல்வோம் என வெளிப்படையாகக் கூறவில்லை. இதிலிருந்தே இரு அணிகளும் பாய்வதற்குத் தயாராக இருப்பது தெரிகிறது.
3 போட்டிகளைக் கொண்ட தொடரைக் கைப்பற்றுவதற்கு, இன்று ஆரம்பமாகும் போட்டியின் வெற்றி, இரு அணிகளுக்கும் முக்கியத்துவமாக அமைந்துள்ளது.