* ரசிகரை தாக்கிய கப்டனுக்கு அபராதம்
கிரிக்கெட் அணியின் கப்டன் முகமது அஷ்ரபுல் இந்த மாதத்தில் பெறும் சம்பளத்தில் 25 சதவீதத்தை அபராதமாகக் கட்ட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை உத்தரவிட்டுள்ளது. கடந்த 8 நாட்களுக்கு முன் டாக்காவில் பயிற்சியின் போது ரசிகர் ஒருவரைத் தாக்கியதாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பந்து வீச்சாளர் ெமார்ராசா , சையத் ரசல், அப்துர் ரசாக் ஆகியோர் அனுமதியின்றி உள்ளூர் போட்டியில் ஆடியதற்காக அவர்களுக்கு இந்த மாதச் சம்பளத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்துடன் ஒரு நாள் தொடரின் போது ரசிகர்களை நோக்கி மோசமான செய்கை காட்டிய ஷகதத் ஹுசைன் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார்.
* சரிவுக்குள்ளானார் ஆனந்த்
பிரான்ஸின் நைஸ் நகரில் அம்பர் பிளைன்ட் போல்ட் மற்றும் ரேபிட் செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் உலக சம்பியனும், இந்திய வீரருமான விஸ்வநாதன் ஆனந்த் 7 ஆவது சுற்று முடிவில் 2 ஆவது இடத்திலிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 8 ஆவது சுற்றில் ஆர்மேனிய வீரர் லெவ் அரோனியனை சந்தித்தார். இதில் பிளைன்ட் போல்ட் பிரிவில் 50 ஆவது நகர்த்தலில் அதிர்ச்சித் தோல்வியுற்ற ஆனந்த், ரேபிட் பிரிவில் 29 ஆவது நகர்த்தலுடன் டிரா. இந்தத் தோல்வியின் மூலம் ஆனந்த் 8.5 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளார். பட்டத்தை நோக்கி முன்னேறி வரும் அரோனியன் 10.5 புள்ளிகளுடன் முதலிடத்திலிருக்கிறார். போட்டியில் இன்னும் 3 சுற்றுகள் எஞ்சியுள்ளன.
* தரவரிசையில் சானியா முன்னேற்றம்
இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட பெண்கள் தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் ஒரு இடம் முன்னேறி 31 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பசுபிக் லைவ் ஓப்பன் டெனிஸ் போட்டியில் 4 ஆவது இடம்வரை முன்னேறியதன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. இதேபோல் இரட்டையரில் 3 இடங்கள் உயர்ந்து 22 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் இந்திய வீரர்கள் மகேஷ் பூபதி 4 இடங்கள் முன்னேறி 13 ஆவது இடத்திலும் லியாண்டர் பெயஸ் 2 இடங்கள் குறைந்து 20 ஆவது இடத்திலும் ரோகன் பொபண்ணா ஒரு இடம் ஏறி 54 ஆவது இடத்திலும் உள்ளனர்.
* மஹேல ஜெயவர்த்தன சாதனை
மேற்கிந்தியாவுக்கு எதிரான கயானாவில் நடந்துவரும் முதலாவது டெஸ்டின் 2 ஆவது நாளில் இலங்கை அணி முதல் இனிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 476 ஓட்டங்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. மேற்கிந்திய மண்ணில் இலங்கை அணி 400 ஓட்டங்களைக் கடப்பது இதுவே முதல் முறையாகும். தனது 22 ஆவது சதத்தை நிறைவு செய்த இலங்கை கப்டன் ஜெயவர்த்தன 136 ஓட்டங்களும் , சமிந்த வாஸ் 54 ஓட்டங்களும் (ஆட்டமிழக்காது) எடுத்தனர். மேற்கிந்தியாவில் சதம் அடித்த முதல் இலங்கை கப்டன் என்ற சிறப்பை ஜெயவர்த்தன பெற்றார். இதற்கு முன் சனத் ஜெயசூரியா 2001 ஆம் ஆண்டு 85 ஓட்டங்களை எடுத்ததே மேற்கிந்திய மண்ணில் இலங்கை கப்டன் ஒருவரின் அதிகபட்ச ஓட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.