Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
கோபியோ மனம் வைத்தால் மலையகம் பல ஏற்றங்களைக் காணும்
[27 - March - 2008] [Font Size - A - A - A]
கொழும்பில் நாளை ஆரம்பமாகும் கோபியோ அமைப்பின் இருநாள் சர்வதேச செயற்குழுக் கூட்டத்தை முன்னிட்டு சில சிந்தனைகள்

இந்திய வம்சாவளி மக்கள் மகாசபையான கோபியோ (GOPIO) அமைப்பு 1989 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நியூயோர்க் நகரில் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோபியோவின் சர்வதேச மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. பாரிஸ், கனடா , மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெற்ற இம்மாநாடு கடந்த வருடம் டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

புதிய ஆயிரமாம் ஆண்டு (2000- 3000 வரை) என்பது கடல் கடந்த பல நாடுகளில் குடியேறியவர்களின் நாகரிகங்களைக் கொண்ட கோளமயமாக்கப்பட்ட உலகம் என்று வர்ணிக்கப்படுகின்றது. கடந்த 150 ஆண்டுகளில் இந்தியர்கள் உலகின் 50 நாடுகளில் சென்று குடியேறியுள்ளனர். அவ்வாறு வாழும் இந்தியர்களின் தொகை 25 மில்லியன் எனவும் அவர்களின் ஆண்டு வருமானம் 40,000 கோடி அமெரிக்க டொலர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் இந்தியர்கள் சென்று குடியேறிய நாடான பிரித்தானியாவில் இன்று 12 இலட்சம் மக்களும், மியன்மாரில் 40 இலட்சம், இலங்கை 15 இலட்சம் , மலேசியா 20 இலட்சம் ஐக்கிய அமெரிக்கா 16 இலட்சம் , தென்னாபிரிக்காவில் 10 இலட்சமும் என வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் தொகையை கோபியோ அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. இந்தியர்களின் தொகையும் அவர்களுடைய செல்வமும் கனடா, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் துரித கதியில் வளர்ச்சியடைய உதவின.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் மத்தியில் அரசியல் மற்றும் சமயச்சார்பற்ற இயக்கமாக கோபியோ பெரும் வளர்ச்சி பெற்று வருகின்றது. உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் 25 மில்லியன் இந்திய வம்சாவளி மக்களின் நல உரிமைகளையும் அபிலாசைகளையும் மேம்படுத்துவது இவ் அமைப்பின் பிரதான நோக்கமாகும்.

சர்வதேச மகாநாடுகள், பிராந்திய மகாநாடுகள் என்பவற்றை ஒழுங்கு செய்தல், இந்தியர்கள் வாழும் நாடுகளுக்கான உல்லாசப் பயண ஒழுங்குகளைச் செய்தல், இளைஞர் மற்றும் கலாசார பரிமாற்றம் புலமைசார் ஆய்வுப் பணிகள் ஆகியன இவ்வமைப்பின் மற்றைய பணிகளாகும்.

தொலைத்தொடர்புப் புரட்சியினால் உந்தப்பட்டு தகவல் தொழில்நுட்பத்தின் அதிநவீன முன்னேற்றங்களைக் கையாண்டு மூலதனம் மற்றும் எல்லை கடந்த மனிதவள மாற்றீடுகள் என்பவற்றின் மூலம் கடல் கடந்த சகல நாடுகளிலும் விழிப்புணர்வை கோபியோ ஏற்படுத்தியுள்ளமையினால் இந்திய அரசும் பெரிய அளவில் ஆதரவு வழங்கி இன்று வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நல உரிமைகளைக் கருத்திற் கொண்டு Ministry of Overseas Indian Affairs என்ற அமைச்சை ஏற்படுத்தி வயலார் ரவி அவர்களை அமைச்சராக நியமித்துள்ளது. அவரும் மிகவும் திறம்பட செயலாற்றி வருகின்றார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் சார்பில் மலேசிய மாநாட்டில் முக்கிய உரைநிகழ்த்திய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் , அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தனது உரையில், வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் இந்தியர்களின் மேம்பாட்டுக்கு பல உதவிகளைச் செய்து வருகின்ற அதேவேளையில் இலங்கையில் பின்தங்கிய சமூகமாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டிலும் கோபியோ அமைப்பு அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கான பணிமுறைகளை பி.பி.தேவராஜ், வி.ரி.வி.ஈஸ்வரன், குமார் நடேசன் போன்றவர்கள் ஆராய வேண்டும்.

இந்தமாநாடு சமூக, கலாசார விடயங்கள், புலமைசார் விடயங்கள் என்ற இருவேறுபட்ட தலைப்புகளில் உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இந்தியர்களின் சமூக, கலாசார , பொருளாதார அம்சங்கள் உலக நாடுகளின் கொள்கைகள் இந்திய வம்சாவளியினரைப் பாதிக்கின்ற முறைமை, பண்பாட்டு சமூகங்களில் மொழியும் இலக்கியமும், இந்தியர்களின் குடியகல்வு, வரலாறு , இந்தியாவுடனான அவர்களின் தொடர்புகள் பற்றி கோபியோ அமைப்பு முக்கிய கவனம் செலுத்தி வருவது வரவேற்கத்தக்கதாகும்.

இவ்வமைப்பின் புதிய சர்வதேச தலைவராக பி.பி.தேவராஜ் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோபியோ அமைப்பின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் மார்ச் 28, 29 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் புறம்பாக இந்தியா, மலேசியா, மொரீசியஸ், சிங்கப்பூர், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வருகைதரும் நிபுணர்கள் பங்கேற்கும் செயலமர்வு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இந்திய வம்சாவளி மக்கள் வாழும் நாடுகளில் பன்முகத்தன்மை கொண்ட இணக்கப்பாட்டை ஏனைய சமூகங்களுடன் ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக இந்தச் செயலமர்வில் ஆராயப்படும். முதலீடுகள், வர்த்தகம் மற்றும் சுற்றுலா என்பன குறித்தும் கலந்துரையாடப்படும்.

ஆந்திரப் பிரதேச வர்த்தக சபையின் தலைவரும் ஹைதராபாத்தின் முன்னணி கைத்தொழில் அதிபருமான அல்தூரி சுப்பராவ் இங்கு வருகைதந்து இந்திய வம்சாவளி வர்த்தகசபை ஒன்றை உருவாக்குவதற்கான இறுதி ஏற்பாடுகள் குறித்தும் ஆராயவுள்ளார்.

இந்த வர்த்தக அமர்வு கலந்துரையாடல்களுக்கு ஒருங்கிணைப்பாளராக இலங்கைத் தேசிய வர்த்தக சபையின் தலைவரும் மொரீசியஸ் நாட்டுக்கான இலங்கையின் தூதுவரும் ,தொழிலதிபருமான வி.ரி.வி.ஈஸ்வரன் பணியாற்றுகின்றார்.

மலையகத்தில் ஒரு சில இளைஞர்கள் மத்தியில் அண்மைக்காலமாக இந்தியாவை தவிர்த்து சிந்திக்கும் போக்கு காணப்படுகின்றது. நாம் இலங்கையில் பிறந்தவர்கள் . எனவே, நாம் இலங்கையர்கள் . இந்திய அரசும் எம்மைச் சரியாகக் கவனிக்கவில்லை என்ற முறையில் கலாசார ரீதியில் நாம் இந்திய வம்சாவளியினர் என்ற யதார்த்தத்தைப் பற்றிக் கருத்திற் கொள்ளாது செயற்படுகின்றனர்.

வட- கிழக்குத் தமிழர்கள் கூட வேறுபாடுகள் முரண்பாடுகளுக்கு இடையில் இந்திய நாட்டை தமது கலாசார தாயகமாக சிந்திக்கின்ற நிலையில் எமது இளைஞர்கள் மத்தியில் ஒரு மாறுபாடான சிந்தனை ஏற்பட்டு வருவது ஆராயப்பட வேண்டிய விடயம்.

ஆனால், இன்று உலகளாவிய இந்தியர்கள் ஒன்றுபட்டு செயற்படும்போது பிரதான நீரோட்டத்தில் இருந்து நாம் விலகி நின்று செயற்படுவது புத்திசாலித்தனமல்ல. இந்தவகையில் எம்மில் ஒரு சில சிந்தனையாளர்கள் இந்த அமைப்பில் இணைந்து செயற்படுவது பெரிதும் வரவேற்கத்தக்கது. இவர்கள் மலையக சமூகம் தனிமைப்படுத்தப்படாத முறையில் செயற்பட்டு எமது சமூகத்துக்கு நன்மை தேடித்தர வேண்டியது வரலாற்றுக் கடமையாகும்.

தாய்நாட்டின் மேம்பாடு நோக்கியும், இந்தியாவின் பின்தங்கிய சமூகங்களின் பொருளாதார கல்வி மேம்பாட்டுக்கான பல செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தியும், வெளிநாடுகளில் வாழும் புதிய இளம் தலைமுறையினர் தமது கலாசார, பண்புகளைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளும் முறையிலும் கோபியோ செயற்பட்டு வருகின்றது.

பி.பி.தேவராஜ் தற்போது தலைவராக இருப்பது இலங்கை இந்திய வம்சாவளியினருக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும். மலையக மக்கள் அரசியல், பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் பின்தங்கியிப்பதைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அறிந்த அவர் மலையக மக்களின் நிலைபற்றி உலகளாவிய வெளிநாட்டு இந்தியர் மத்தியில் விழிப்புணர்வையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

எதிர்கால செயற்பாடுகள் எமது மக்களின் விரக்திகளையும் பிரச்சினைகளையும் சர்வதேச மயப்படுத்தி அவர்களுக்குத் தேவையான உலகளாவிய அனுதாபத்தையும் மேம்பாட்டுக்கான புதிய செயற் திட்டங்களையும் தோற்றுவிக்கும் என்பதே இன்றைய எமது எதிர்பார்ப்பாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இவர்களுடைய சேவைகளைக் குறிப்பிட வேண்டும்.

* ஹைதராபாத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்திய வர்த்தக கல்லூரி, இது இன்று முகாமைத்துவக் கல்வியில் சர்வதேச புகழ் பெற்று விளங்குகின்றது.

* கல்வித்துறையில் பின்தங்கிய பிரிவினருக்கு கட்டிடங்கள், நூல் நிலையங்கள் கணினிகள் வழங்கி வருகின்றது

* மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குகின்றது

* கிராமப்புற ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி வழங்குகின்றது

* வெளிநாட்டு இந்திய இளைஞர்களை ஆங்கில, விஞ்ஞான ஆசிரியர்களாக கிராமப்புறங்களுக்கு அனுப்புதல் போன்றன.

மகாத்மா காந்தி அவர்கள் 1927 இல் மாத்தளைக்கு விஜயம் செய்ததை நினைவுகூரும் முகமாக அங்கு ஒரு மகாத்மா காந்தி சர்வதேச கலாசார மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய பாரிய முயற்சியில் கோபியோவின் பங்களிப்பு பிரதானமானதாகும்.

வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் கலை, கலாசார, பண்பாடு, பாரம்பரியங்களை அந்தந்த நாடுகளில் பாதுகாக்க மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டுமென்ற குமார் நடேசன் அவர்களின் கோரிக்கையை செயற்குழு பரிசீலிக்க வேண்டும்.

மேலைநாடுகளில் குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பெரும் வளர்ச்சிக்குக் குடிபெயர்ந்து சென்றவர்களின் பங்களிப்பு பிரதான காரணமாக இருந்தது என்பது கோபியோ முன்வைக்கும் பிரதான காரணமாக இருந்துள்ளது.

சீனாவிலிருந்து குடியகன்றவர்கள் அண்மைக்கால சீனாவின் பெரும் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்துள்ளனர். அவ்வாறே சீன அரசாங்கமும் வெளிநாட்டில் வாழும் சீனர்களுக்கு பல நன்மைகளைச் செய்துள்ளது. இதுபோன்று இந்தியாவின் தனியார்துறை மற்றும் பொதுத்துறையின் வளர்ச்சிக்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பங்களிப்புச் செய்யும் காலம் நெருங்கிவிட்டது.

எவ்வாறாயினும் சற்று நெருடல்களான பல விடயங்கள் உண்டு. இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் கல்வி, கலாசார மேம்பாடு குறித்து அக்கறை செலுத்தி வருகின்றது. தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் விஷ்ணு நம்பூத்திரி அவர்கள் எமது மக்களின் நலனில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். சுமார் 12 ஆயிரம் பேர் OCI பெற்றிருந்தும் அவர்களின் பங்களிப்பு மலேசியாவில் நடைபெற்ற கோபியோவின் 9 ஆவது மாநாட்டிலும் புதுடில்லியில் நடைபெற்ற வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் தினத்திலும் பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது வருந்தத்தக்கதாகும்.

கோபியோவின் பிரசுரங்களில் மட்டுமன்றி புதுடில்லியில் உள்ள வெளிநாட்டு இந்தியர்களுக்கான அமைச்சின் ஆவணங்களில் கூட இந்திய வம்சாவளியினர் பற்றிய தரவுகள் இல்லை. உதாரணமாக 1930 களில் பஞ்சாபிகள் கனேடியப் பண்ணைகளில் குடியேறியிருந்தனர். 1920 களில் நாலரை இலட்சம் மக்கள் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய மொரிசியஸ் சென்றனர்.

ஆனால்,1830 முதல் இலங்கையில் குடியேறிய இந்தியர்கள் தற்பொழுது இலங்கையில் வாழும் 15 இலட்சம் மக்கள் பற்றி இந்த ஆவணங்களில் குறிப்பிடப்படாதது வருந்தத்தக்க ஒரு விடயம்.

இது மட்டுமன்றி வெளிநாடுகளில் வாழும் தலைசிறந்த இந்தியர்களுக்கு 2003 ஆம் ஆண்டு தொடக்கம் விசேட ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கூட இதுவரை இந்த விருதுக்குக் கருத்திற் கொள்ளப்படவில்லை என்பது வருந்தத்தக்கது.

வெளிநாட்டு இந்திய அமைப்பானது தாய்நாட்டின் மேம்பாட்டை மட்டுமன்றி இலங்கையில் வாழும் பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாடு குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும் என்ற அமைச்சர் பெ.சந்திரசேகரன் கோரிக்கை செயல்வடிவம் பெற்றால் மட்டுமே இலங்கை வாழ் இந்திய சமூகத்திற்கு வெளிநாட்டு இந்தியர்களின் சர்வதேச அமைப்புப் பொருள் உள்ளதாக இருக்கும். கோபியோ மனம் வைத்தால் மலையகம் புதிய ஏற்றங்களைக் காணும் வாய்ப்புகள் ஏராளமாகும்.

எச்.எச்.விக்கிரமசிங்க ஊடகச்செயலாளர் சமுதாய அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சு

Email this page Your Opinion Print this page
கோபியோ மனம் வைத்தால் மலையகம் பல ஏற்றங்களைக் காணும்
எம்.கே.எம். என்றொரு உன்னத ஆளுமை
நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com